Zomato -வை ஒரு லட்சம் கோடி மதிப்பு நிறுவனமாக தீபேந்தர் கோயல் உருவாக்கியது எப்படி?
ஜொமாட்டோ நிறுவனம் பங்குச்சந்தையில் அருமையான துவக்கத்தை பெற்றுள்ள நிலையில், அதன் நிறுவனரான ஐஐடி தில்லி பட்டதாரியுன், உணவு தொழில்முனைவோருமான தீபேந்தர் கோயல், ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் சி.இ.ஓவாக மின்னுகிறார்.
தீபேந்தர் கோயல்: இவருக்கு நுகர்வோர் பிரச்சனைக்கு பெரிய அளவில் தீர்வு காண்பதில் அதிக தாகம் எப்போதுமே இருந்திருக்கிறது.
ரெஸ்டாரண்ட் மெனுக்களை ஸ்கேன் செய்வதில் துவங்கி, அவற்றை பட்டியலிட்டு உணவு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியது வரை, தீபேந்தர் இந்திய ஸ்டார்ட் அப் சூழலின், முன்னோடிகளில் ஒருவராக விளங்குகிறார்.
உணவு டெலிவரி சேவையை துவக்கிய 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அவர் தனது நிறுவனத்தின் பங்கு வெளியீட்டை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார். இந்திய தொழில்நுட்ப மற்றும் உணவு தொழில்நுட்ப துறைகளில் இது புதிய அத்தியாயமாக அமைகிறது.
பங்கு வெளியீடு
பங்குச்சந்தையில் ஜொமேட்டோ பட்டியலிடப்பட்ட அன்று,
“இன்று எங்களுக்கு மிகப்பெரிய தினம். மீண்டும் ஒரு புதிய துவக்கம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தீபேந்தரின் 13 ஆண்டு கால தொழில் முனைவு பயணத்தில் பல புதிய துவக்கங்கள் இருக்கின்றன.
முதல் துவக்கம் மிக எளிதான நோக்கத்துடன் துவங்கியது.
“ரெஸ்டாரண்ட் அனுபவத்தை மேம்படுத்துவது,” என இது அமைந்திருந்தது. இந்த நோக்கம், “அதிகமான மக்களுக்கான சிறந்த உணவு,” என மாறியதே ஒரு தனிக்கதை.
உணவுத் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயத்தை துவக்கியவர், மக்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் இருந்து மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என மாற்றி வருகிறார்.
தீபேந்தர் ஒருபோதும் பெரிய சித்திரத்தை பார்க்காமல் இருந்ததில்லை. புதிய சந்தைகளில் வாய்ப்புகளைக் கண்டறிவது, நெருக்கடியில் திறம்பட வழிநடத்துவது, பிரச்சனைகளில் தீர்மானமாக செயல்படுவது, ஸ்டார்ட் அப் சூழலுக்கு தன் பங்களிப்பை திரும்பிச் செலுத்தும் வாய்ப்பை அறிவது போன்றவற்றில் இது வெளிப்படுகிறது.
உதாரணமாக, 2018ல், சப்ளையை கட்டுப்படுத்துவது முக்கியம் என உணர்ந்து, பெங்களூருவின் WOTU நிறுவனத்தை கையகப்படுத்தி ஜொமேட்டோவின் பி2பி வர்த்தகத்தை ஹைபர்கியூர் என உருவாக்கினார்.
“அதிக மக்கள் வெளியே சாப்பிட வேண்டும் என நீங்கள் விரும்பினால், ரெஸ்டாரண்ட்கள் சிறந்த தரத்தில் உணவு வழங்க வேண்டும். மூலப்பொருட்களின் தரத்தில் தான் இது சாத்தியம்,” என அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
2018ம் ஆண்டு பலவிதங்களில் முக்கியமானது. அதன் இணை நிறுவனர் பங்கஜ் சத்தா நிறுவனத்தை விட்டு விலகினார். உணவு டெலிவரி பார்ட்னர் ஒருவர், வாடிக்கையாளருக்கான உணவை உட்கொண்ட சர்ச்சை வெடித்தது.
அடுத்த ஆண்டு, டிவிட்டர் பயனாளி ஒருவர் தனது இந்து அல்லாத டெலிவரி ஊழியர் உணவு கொண்டு வந்ததாக புகார் செய்தார். இதற்கு நிறுவனம், ”உணவுக்கு மதம் இல்லை. அதுவே மதம்,” என பொருத்தமாக பதில் அளித்தது.
ஏற்ற இறக்கங்களை தீபேந்தர் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்.
“இது ஒரு தொடர் வட்டம். இந்த சுழற்சி உங்கள் மற்றும் நிறுவன குணத்தை உருவாக்குகிறது,” என்றார்.
பங்கஜ் வெளியேறிய பிறகு, 2019 முதல் 2021 வரை, கவுரவ் குப்தா, மொகித் குப்தா, ஆக்ரிதி சோப்ரா ஆகியோர் இணை நிறுவனர்களாக உயர்த்தப்பட்டனர்.
பாலின சமத்துவம்
ஆக்ரிதி இணை நிறுவனராக உயர்த்தப்படுவதற்கு முன்பே, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு பொறுப்பு அளிப்பதில் நிறுவனம் கவனம் செலுத்தும் என தீபேந்தர் கூறியிருந்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், டெலிவரி பார்ட்னர்களில் பெண்கள் பங்கேற்பிற்கும் நிறுவனம் வழி செய்தது. “முதல் கட்டமாக, இந்த ஆண்டு இறுதிக்குள், பெங்களூரு, ஐதராபாத, புனே என துவங்கி 10 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்” என தீபேந்தர் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டும் அல்லாமல், அனைத்து பெண் டெலிவரி பார்ட்னர்களுக்கும் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மாலை நேர டெலிவரிகள் காண்டாக்ட்லெஸ் டெலிவரியாக மாற்றப்பட்டுள்ளன.
பணிவும், நகைச்சுவையும்
பொதுவெளி மற்றும் மீடியா உரையாடல்களில் கேள்விக்கனைகளால் துளைத்தெடுக்கப்படும் நபராக இருக்கும் தீபேந்தர், தனது டிவிட்டர் பதிவுகள் மற்றும் அரிய நேர்காணல்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
2017ல் யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷரத்தா சர்மாவுடனான உரையாடலில், மற்ற நிறுவன ஊழியர்களை கவர்ந்திழுக்கும் உத்தி பற்றி கேட்கப்பட போது, அவர் சிரித்தபடி,
“ஊழியர்களைக் கவர்வதில் என்ன தவறு இருக்கிறது. இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. யாராவது தனது நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்பினால், அது என்னுடைய பிரச்சனை அல்ல. ஜொமாட்டோ நிறுவன ஊழியர்களை நீங்கள் அழைக்க விரும்பினால் அழைக்கலாம்,” என பதில் அளித்தார்.
நான்கு ஆண்டுகள் கழித்து இது பெரிதாக மாறிவிடவில்லை. 2021 ஏப்ரலில், அவர் போட்டி நிறுவனம், ஸ்விக்கி இரவு எட்டு மணிக்கு மேல் டெலிவரி செய்வது குறித்து டிவிட்டரில் முறையிட்டார்.
"மும்பையில் இரவு எட்டு மணிக்கு பிறகும் உணவு டெலிவரி செய்ய ஜொமாட்டோ தயாராக உள்ளது. ஆனால் விதிகளை மதித்து அவ்வாறு செய்யவில்லை. எனினும் போட்டி நிறுவனம் இரவு 8 மணிக்கு பிறகு டெலிவரி செய்கிறது. இது தொடர்பாக மும்பை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும்,” என டிவிட்டரில் தீபேந்தர் கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போது உடனே நன்றியும் தெரிவித்தார்.
அண்மையில், ஜொமாட்டோ பொது வெளியீடு அன்று, மன அழுத்தத்தை போக்க மூன்று, காலை உணவு ஆர்டர் செய்ததாக டிவிட்டரில் கூறியிருந்தார். நிச்சயம் பொதுபங்கு வெளீயிடு என்பது அழுத்தம் தரக்கூடியது தான்.
எனினும், பங்கு பட்டியலிடப்பட்டு நிறுவன சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடியாக இருந்த நிலையில்,
“எதிர்காலம் உற்சாகமாக இருக்கிறது. வெற்றி பெறுவோமா தோல்வி அடைவோமா எனத்தெரியாது, ஆனால் எங்கள் சிறந்த செயல்பாட்டை அளிப்போம்,” என டிவிட்டரில் கூறியிருந்தார்.
பணிவும், நகைச்சுவை உணர்வும் இணைந்த கலவை, தீபேந்தரின் வெற்றிக்கதையின் அங்கமாக இருக்கிறது.
ஆங்கிலத்தில்: அஞ்சு நாராயணன், டென்சின் பேமா | தமிழில்: சைபர் சிம்மன்