பிறந்த குழந்தைகள் இறப்பை தடுக்கும் கருவி: டைம்ஸ் சிறந்த கண்டுபிடிப்பு உலக பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனம்!
பிறந்த குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் ஹைபோதெர்மியா என்ற நிலையிலிருந்து காப்பற்றக் கூடிய கைக்காப்புக் கருவியை கண்டுபிடித்த தொழில்முனைவு நிறுவனம் ‘பெம்பு’
சமீபத்தில் வெளியான அரசாங்கத்தின் தகவலின் படி நியோ நேட்டல் எனப்படும் பிறந்த குழந்தைகளின் மரணம் 1000 பிறப்பிற்கு 24 என்ற எண்ணிக்கையில், ஒரு சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது வெகுவாக குறைந்திருப்பினும் நாம் எட்ட வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.
மருத்துவமனையில் இருக்கும் வரை கண்காணிப்பு தீவிரமாக இருந்தாலும், வீடு திரும்பியவுடன் தொடர் கண்காணிப்பு மற்றும் வெட்பகீழ் நிலை உடனடியாக அறிய முடியாமலும் இருப்பதால், இறப்பின் விகிதம் கட்டுப்படுத்துவதில் சவால்கள் உள்ளன. இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக சிறிய கைக்காப்பு உபகரணத்தை கண்டுபிடித்துள்ளது பெம்பு என்ற தொழில்முனைவு நிறுவனம். இதுவே 2017 ஆம் ஆண்டில் சிறந்த கண்டுபிடிப்பாக டைம்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
சமூக தொழில்முனைவு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வில்க்ரோவில் 2014-ல் இன்குபேட் செய்யப்பட்டு முதல் நிதியாக 10 லட்சமும், வழிகாட்டுதலும் பெற்றது பெம்பு நிறுவனம். இந்நிறுவனந்தின் நிறுவனர் ரட்டுல் நரைன் அவர்களிடம் யுவர் ஸ்டோரி தமிழ் பிரத்யேகமாக உரையாடியது.
தொடக்கம்
பயோ மெடிக்கல் எஞ்ஜினீரிங் துறையில் பட்டப்படிப்பு அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபொர்ட் பல்கலைகழகத்தில் மெக்கானிகல் எஞ்ஜினீரிங் மேற்படிப்பு முடித்த ரட்டுல், ஆறு வருட காலம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் இருதய பிரிவில் பணியாற்றினார். பின்பு எம்ப்ரேஸ் இன்னொவேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் நியோ நேட்டல் பிரிவில் ஒரு வருடம் பணியாற்றிய பொழுது இந்தத் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாக கூறுகிறார் அவர்.
”குழந்தையின் வாழ்வில் ஆரோக்கியத்தை உண்டு செய்வதால் அடுத்த 60-80 வயது வரை பெறும் மாற்றத்தை உருவாக்கலாம்,”
என்று கூறும் ரட்டுல், இந்த துறையில் செயல்படும் எண்ணம் எழுந்ததும் இந்தியா முழுவதும் நியோ நேட்டல் மருத்துவத்தில் உள்ள சவால்களை அறிந்து கொள்ள பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்தார். கிராமப்புற க்ளினிக், தனியார் மருத்துவமனை, அரசாங்க மருத்துவமனைகள் என எல்லா நிலையிலும் உள்ள சவால்களை அறிந்தார்.
"பிறந்த குழந்தை ஏன் உடம்பு சரியில்லாமல் போகிறது?, பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் ஏன் மருத்துவமனை வரும் பொழுதே மரணம் அடைகின்றன?"
என பல்வேறு கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ள பேனாவும் புத்தகமுமாக இருந்ததை நினைவு கூர்கிறார். சுமார் ஒரு வருட ஆய்வுக்கிற்கு பின், கான்சப்ட் உருபெற்றது. ஹைபோதெர்மியா, குறைவான எடையுடன் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தொற்று ஆகிய காரணங்களாலும் நியோ நேட்டல் மரணம் கூடுதலாக இருக்கிறது என்றும் உணர்ந்ததாக கூறுகிறார். இப்படியாக பல மாத ஆய்வு மற்றும் ஒரு வருட தயாரிப்புக்கு பின் பெம்பு கைக்காப்பு உருபெற்றது.
கைக்காப்பு பயன்கள்
மிகவும் எளிமையான பெம்பு கைக்காப்பு பற்றி பகிர்கையில்,
”மேலை நாடுகள் போலல்லாமல், இந்தியாவில் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளை விரைவாகவே வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். இது போன்ற குழந்தைகளுக்கு தொற்று அல்லது ஹைபோதெர்மியா வரும் அபாயம் உள்ளது. ICU-வில் உள்ள இன்குபேட்டருக்கு மாற்றாக இல்லையென்றாலும், உடல் வெப்ப நிலையை கண்காணிக்கும் தெர்மல் பாதுகாப்பை எங்கள் உபகரணம் அளிக்கும்,”
என இந்தியாவில் உள்ள சவாலை விளக்குகிறார் ரட்டுல். மேலும் அவர் கூறுகையில், "மருத்துவர் இந்த கைக்காப்பை பரிந்துறைக்க வேண்டும். அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, யூனிசஃப் மற்றும் பல மையங்களிலும் பெம்பு கைக்காப்பு கிடைக்கும். குறைவான எடை உள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் இதை அணிவித்து விட்டால், குழந்தைகளின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது நீல நிற விளக்கு எரியும், இதுவே ஆபத்தான நிலை எனில் தொடர்ந்து சத்தம் எழுப்பும். இரவில் தாய் உறங்கி விட்டாலும் கூட, இந்த அலாரம் மூலம் உடனே மருத்துவ உதவியை நாட முடியும்," என விளக்கினார்.
பரந்து விரியும் சேவை
2017-ல் 7500 கைக்காப்பை விற்பனை செய்துள்ள பெம்பு, தாங்கள் எதிர்பார்த்ததை விட இது குறைவு என்றும் அதற்கான விளக்கமாக அரசாங்க வழிமுறைகள், பட்ஜெட் சுழற்சி நேரம் ஆகியவற்றால் தான் இந்த எண்ணிக்கை என்கிறார். இரண்டு லட்சம் குழந்தைகள் குறைவான எடையுடன் பிறக்கும் மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல் அரசாங்க அனுமதி பெற்று, 3000 குழந்தைகளுக்கு அளிக்கவுள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாக 500 குழந்தைகளுக்கு கைக்காப்பை அளித்துள்ளது இந்நிறுவனம். இது தவிர பெங்களூரு, புது டில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை சிலவற்றுக்கும் இரண்டாயிரம் கைக்காப்பு உபகரணங்களை இது வரை விற்பனை செய்துள்ளது பெம்பு.
அங்கீகாரம் மற்றும் மானியம்
2014-ல் ஈகோயிங் க்ரீன் ஃபெல்லோஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வில்க்ரோவில் இன்குபேட் செய்யப்பட்டதுடன் பத்து லட்ச நிதியும் மென்டரிங் வாய்ப்பும் கிட்டியது. கேட்ஸ் ஃபவுண்டேஷன், கிராண்ட் சாலஞ்ச் கனடா ஆகியவற்றிலிருந்து நிதி உதவியும் கிடைக்கப் பெற்றார். USAID, விஷ் ஃபவுண்டேஷன் ஆகியவற்றிலிருந்து அங்கீகாரம் மட்டுமின்றி நார்வே, கொரியா ஆகிய அரசாங்கத்திலிருந்தும் நிதி பெற்றார். 2017 ஆம் வருடம் தலைச் சிறந்த கண்டுபிடிப்புகள் வரிசையில் டைம்ஸ் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது பெம்பு நிறுவனத்தின் கைக்காப்பு.
எதிர்காலத் திட்டம்
அசாம், தமிழ்நாடு ஆகிய மாநில அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறும் ரட்டுல், மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். கைக்காப்பு தந்த ஊக்கம் இந்த துறையில் மேலும் முன்னேற உந்துதல் அளித்துள்ளதாக கூறுகிறார் ரட்டுல் நரைன்.
”ஏழு கண்டுபிடிப்புகளில் தற்போது ஈடுபட்டுளோம். இதில் மூன்று இந்த வருட இறுதிக்குள் சந்தைப்படுத்தி விடுவோம். குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணரல் ஏற்படும் போது தானாகவே மூச்சுக்காற்றை தூண்டுகிற பிரேத்யேக காலணி, கையோடு எடுத்துச் செல்லக்கூடிய தூளி மூலமாக சிக்கல்களை முன்கூட்டியே அறியக் கூடிய சாதனம், பயணிக்கும் பொழுது இலகுவாக குழந்தைகளை எடுத்துக் கொள்ளும்படியான ஜாக்கட்,”
என நீள்கிறது பட்டியல். ஹார்வர்ட் பல்கலைகழகத்துடன் மற்றுமொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக இளம் தாய்மார்களுக்கான மருத்துவ சவால்களை எதிர்கொள்ளக் கூடிய கண்டுபிடிப்பில் ஈடுபடுவதோடு, ஆப் மூலம் சேவை துறையிலும் ஈடுபடும் எண்ணம் உள்ளதாக தன் எதிர்கால திட்டத்தை பகிர்ந்தார்.
தொழில்நுட்பம் மூலம் மருத்துவ சவால்களுக்கு தீர்வு காணும் இது போன்ற கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை அடைவதோடு, நியோ நேட்டல் இறப்பு விகிதாசாரத்தையும் கணிசமாக குறைக்க முடியும் என்பதால் பெம்பு போன்ற தொழில்முனை வளர்ச்சி போற்றத்தக்கதே!