கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் வருகை தேவையா?
தமிழகத்தின் தற்போதையை சூழலில், கமல்ஹாசனின் அரசியல் களம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.
"உங்களை மரபணு மாற்றப்பட்ட விதை, போன்சாய் மரம் என்றெல்லாம் விமர்சிக்கிறார்களே?"
"இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?, வேலையை பார்க்க வேண்டாமா, அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். நாம் செயலில் இறங்கிக் கொண்டே இருப்போம். அவர்கள் கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால் நாம் இந்த இடத்துக்கு வந்திருக்கவே மாட்டோம். நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலை வந்த பிறகே நாம் களம் இறங்கி இருக்கிறோம்..."
மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் கொடியையும் பெயரையும் அறிவித்துவிட்டு, நடிகர் கமல்ஹாசன் மேடையில் எதிர்கொண்ட கேள்வியும், அளித்த பதிலும்தான் இது.
நடுவில் நட்சத்திரத்துடன் 6 கைகள் கோர்த்த லோகோவுடன் கூடிய கொடி. கட்சியின் பெயர் 'மக்கள் நீதி மய்யம்'. அதிகாரப்பூர்வமாக கட்சியைத் தொடங்கிவிட்டார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் புதிய கட்சியின் பொதுக்கூட்டம் மதுரையில் நடந்துகொண்டிருக்கும்போதே செய்தித் தொலைக்காட்சிகளில் அரசியல் பார்வையாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களின் விவாதங்கள் தெறித்தன. சமூக வலைதளங்களில் கொடியையும் கட்சியின் பெயரையும் பலரும் போஸ்ட்மார்டம் செய்தவண்ணம் இருந்தனர்.
பலரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம்: கமல் கட்சியின் கொள்கைகள். அந்தக் கூட்டத்தில் கமல்ஹாசனும் 'கொள்கை' என்று கூறி சில விஷயங்களைச் சொன்னார்.
"நான் மதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசும்போது "உங்கள் கட்சிக் கொள்கை என்ன?" என்று கேட்டார்.
"இடதா, வலதா என இஸங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதே கொள்கை," என்றேன். "உடனடியாக செயலில் இறங்குங்கள்..." என்று அவர் வாழ்த்தினார்.
அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி, சாதியையும் மதத்தையும் சொல்லிச்சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்.
நீங்கள் இடதா, வலதா என்று கேட்கிறார்கள். அதற்காககத்தான் பெயரிலேயே மய்யத்தை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொன்னதைக் கலந்து எங்கள் கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்."
சொல்ல வேண்டுமா? நம் கருத்தாளர்களுக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தீனி போட்டார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் உதயமான முதல் நாளே 'கொள்கை' ரீதியில் கடும் தாக்குதலுக்கு உள்ளானது.
சரி, இதுபோன்ற தீவிர அரசியலை விட்டுவிடுவோம். 'கமல்ஹாசனின் அரசியல் கட்சியின் தேவை தமிழகத்துக்கு இருக்கிறதா?' என்று சாமானியப் பார்வையில் யோசிப்போம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணி மன்றங்களை நடத்தி வந்தாலும்கூட, அரசியல் கருத்துகளை நேரடியாகவோ அல்லது நேரடி அரசியல் செயல்பாட்டிலோ கமல்ஹாசன் ஈடுபட்டதில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், கருணாநிதி செயல்பட இயலாத நிலைக்குப் பிறகும்தான் கமல்ஹாசன் அரசியல் களத்தில் நேரடியாக இறங்கினார் என்பது தெளிவு.
ட்விட்டர் மூலம் அரசியல் கருத்துகளைத் தெறிக்கவிட்ட கமல்ஹாசனின் ஒரே முக்கிய இலக்கு, ஆளும் அதிமுக ஆட்சியை சாடுவதில் மட்டுமே இருந்தது.
ரஜினியைப் போல் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பைக் கூட்டிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில் எந்த எதிர்பார்ப்பும் மக்களிடையே இல்லாமல் போய்விட்ட பின் அரசியல் களம் காணாமல், தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை ஆரம்பித்துவிட்டார் கமல்ஹாசன்.
இந்த வேகம், மக்களின் கவனத்தையும் ஒருவித நம்பிக்கையையும் பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், தமிழகத்திலுள்ள முக்கிய கட்சிகளை சற்றே பீதியில் ஆழ்த்தியுள்ளதும் நிஜம்.
அதிமுக எனும் கட்சியின் தற்போதையை நிலை குறித்து விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த பாதக நிலையைக் கூட கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வதில் வேகமும் விவேகமும் காட்டாத திமுக செயல் தலைமையில் செயல்பாடுகள் பற்றியும் நம்மில் பலருக்கும் தெரியும்.
இவ்விரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்த விஜயகாந்தின் தேமுதிகவோ கடந்த தேர்தல்களிலேயே 'எக்ஸ்போஸ்' ஆகிவிட்டதையும் அறிவோம்.
திமுக, அதிமுகவை விட்டால் தமிழகத்தில் மாற்றாகச் சொல்லிக்கொள்ள எந்தக் கட்சியுமே இல்லாத சூழலில்தான் கமல்ஹாசனின் புதிய கட்சி இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
விஜயகாந்த் தனது ரசிகர் மன்றங்களை பல ஆண்டுகளாக நேர்த்தியுடன் நிர்வகித்து, கட்சியாகக் கட்டமைத்துப் போட்டியிட்ட முதல் தேர்தலிலே வியத்தகு வாக்கு சதவீதத்தைப் பெற்றார். மக்கள் மாற்று சக்திகளை அப்போதே தேட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் இதைக் காட்டுகிறது.
இப்போதோ மாற்று கூட வேண்டாம்... ஏதாவது ஒரு சக்தி மக்களை வழிநடத்தவும் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவும் வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே விரவிக் கிடக்கிறது. இதனால், ஏற்கெனவே மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கமல்ஹாசனின் அரசியல் வருகையும் இப்போது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அடுத்த தேர்தல்களுக்கு போதுமான கால அவகாசம் இருக்கிறது. கமல்ஹாசன் தன் அரசியல் பணியையும் பாணியையும் அழுத்தமாகக் காட்டுவதற்கு இதுவே போதுமானதாக இருக்கக் கூடும். மக்களும் மக்கள் நீதி மய்யத்தின் மையப்பொருளை எளிதில் கண்டடைந்து தெளிவு பெறுவர்.
இது ஒருபுறம் இருக்க, நட்சத்திர நடிகர்களின் அரசியல் வருகை இங்கே கடும் எதிர்மறை விமர்சனத்துக்குள்ளாவதையும் பார்க்க வேண்டும். ஆனால், தற்போதையைச் சூழலில் விமர்சனங்களை கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தோன்றுகிறது.
ஏனெனில், சிதைந்து ஒட்டிக் கிடக்கும் ஆளும் அதிமுகவினர் மக்களிடம் ஓரளவேனும் நன்மதிப்பைப் பெறுவதற்கு உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தீவிரம் காட்டுவதற்கும் கமல் போன்ற பிரபலத்தின் அரசியல் வருகை தூண்டுகோலை ஒரு கட்டாயமாகவே ஏற்படுத்தும்.
அதேபோல், திமுகவின் செயல் தலைமை வழக்கமான அரசியலை அணுகாமல் மக்களை ஈர்க்கத்தக்க கள செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம்.
'உன்னை விட்டா நானு... என்னை விட்டா நீயி' என்று அதிமுகவும் திமுகவும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டு, மக்கள் அரசியலை கவனிக்காமல் தங்கள் உள்ளரசியலில் முழு கவனம் செலுத்தும் போக்குக்கு இதுபோன்ற வருகைகள் முற்றுப்புள்ளி வைக்கவும் வாய்ப்புண்டு.
நம்மை ஆளக் கூடிய மாற்று சக்தி மீதான தாகம் இப்போது தமிழக மக்களிடம் நிறையவே இருக்கிறது. வெளி மாநிலங்களில் வாழ்கின்ற தமிழர்களிடமோ அல்லது வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களிடமோ கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்: 'நம் மாநிலத்தில் ஆட்சிபுரிவோர் குறித்தும் அரசியல் சூழல் குறித்தும் பெருமிதமாக அங்கே யாரிடமாவது விவாதித்ததுண்டா?' என்று.
இந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு சரியான தலைமையும், கட்சியும் தேவை. அது எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். இதனால், திரைத்துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கமல்ஹாசன் உள்ளே வரும்போது, மக்களை அவர் கவர்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.
அதேவேளையில், கமல்ஹாசனின் அடுத்தடுத்த நகர்கவுகளும் அரசியல் கட்சிகளைவிட கூடுதலாக மக்களால் கவனிக்கப்படும். ஏனெனில், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதில் மக்கள் தேறிவிட்டனர். மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை விட சமூக ஊடகங்களின் தாக்கம் மிகுதியாகி வருவதை கமல்ஹாசனும் உணர்வார்.
ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் - பத்திரிகையாளரின் ஆறு பக்க கட்டுரை ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வாட்ஸாப்பில் வந்து சேர்ந்த அடுத்த நொடியோ பகிரப்படும் ஒற்றை மீம் வலுபடைத்தது என்பதையும் அறிக.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கிய கமல்ஹாசனிடம் சொல்ல இப்போதைக்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது:
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!'