ஒரு அம்பாசிடர் காரில் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை...
பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 50 ஆண்டு கால ஸ்திரமான வளர்ச்சிக் கதை ஒரு தொகுப்பு!
தொழில்முனைவு என்பது தற்பொழுது உள்ளது போலில்லாமல் சில ஆண்டுகள் முன்பு ஒரு வித தயக்கத்துடனேயே அணுகப்பட்டது. இதுவே எழுபதுகளில் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அந்த காலக்கட்டத்தில் மிகவும் அரிதாகவே தொழில்முனைவர்கள் இருந்த நிலையில், தனது பதின்பருவ வயதிலேயே வணிகத்தில் ஈடுபட்டு இன்று பல கோடி அளவு வர்த்தகமும் டிராவல்ஸ் துறையில் கோலோச்சியுள்ள பர்வீன் டிரவல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.அஃப்சல் அவர்களிடம் யுவர்ஸ்டோரி தமிழ் பிரேத்யேக நேர்காணல் கண்டது.
ஆர்வம்
கனரக வாகனங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தன் தந்தையின் வணிகத்தில் பள்ளிப் பருவத்திலேயே ஈடுபட ஆரம்பித்தார் அஃப்சல். தந்தை நட்ஸ் மற்றும் போல்ட்ஸ் பற்றி கற்றுத் தர, அஃப்சலின் தாயார் வணிகத்திற்கு தேவையான திட்டமிடல், மென்திறன் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தார். பள்ளி முடிந்ததும் நேராக அலுவலகம் சென்று அன்றைய நிலவரம் என்ன என்பதை அறிந்து சரியான நேரத்தில் சரக்குகள் செல்கிறதா என்பதை அறிந்து கொள்வார். படிப்பிலும் படு சுட்டியாக இருந்த அஃப்சல், பிரசித்தி பெற்ற மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் சேர தகுதி பெற்றார். அம்மாவின் விருப்பப்படி வணிகத்திலேயே ஈடுபட்டதாக கூறும் அவர், விலங்கியல் படிப்பின் பொழுது கூட நண்பர்களிடம் சரக்கு போக்குவரத்து பற்றியே பேசுவாராம்.
சரக்கு வணிகத்திலிருந்து இரண்டு டாக்ஸியுடன் பர்வீன் ட்ராவெல்ஸ் தொடங்கப்பட்டது. வணிகத்தின் மீதும் வாடிக்கையாளர்களின் முழு திருப்தி மீதான அக்கறைக்கு சான்றாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த்தார்.
”ஒரு சமயம் பந்த் காரணமாக டிரைவர்கள் வரவில்லை. வாடிக்கையாளர்க்கு நானே டாக்ஸியை ஒட்டிச் சென்றேன். இது அறிந்த வாடிக்கையாளர் ஆச்சரியம் அடைந்தது மட்டுமல்லாமல் மிகவும் சந்தோஷப்பட்டார். இன்று வரை அவர்கள் எங்களின் வாடிக்கையாளராக தொடர்கிறார் என்பதே எங்களின் நேர்மைக்கு சாட்சி. இதுவே எங்களின் வளர்சிக்கும் காரணம்,”
என இது போன்ற பல சம்பவங்களை நெகிழ்சியுடன் நினைவு கூர்ந்தார்.
நட்சத்திர வாடிக்கையாளர்கள்
இரண்டு டாக்ஸி ஐம்பதானது. வாடிக்கையாளர்கள் பெருகப் பெருக டாக்ஸி ஒட்டுனர்களுக்கு முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதே சமயம் மதிப்பு மிக்க பிரபலங்களும் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்க்ளானர்கள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நீண்ட பட்டியலில் சென்னை வரும் போதெல்லாம் ரத்தன் டாடா அவர்களும் இன்று வரை இவர்களின் சேவையை பயன்படுத்துகிறார். முத்தாய்ப்பாக ராணி எலிசபத் இந்தியா வந்திருந்த போது இவர்களின் சேவை தான் அளிக்கப்பட்டது.
விரிவடைந்த சேவை
உள்ளூர் சேவை ஒரு புறமிருக்க, வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாக்கேஜ் டூர் சேவையை தொடங்கினர். டாக்ஸீ சேவையிலிருந்து பஸ் சேவை தொடங்க அஃப்சல் முற்பட்டார். "அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசனையை தந்தையிடம் தெரிவித்த போது அவர் தயங்கினார். ஒரு பஸ் மூன்று லட்சம், அந்த காலக்கட்டத்தில் அது மிகப் பெரிய தொகை. ஆனால் நான் அவரை சம்மதிக்க வைத்தேன்," என்று பர்வீன் ட்ராவல்ஸின் அடுத்த கட்ட வளர்சியை பற்றி பகிர்ந்தார்.
சென்னை, பெங்களூரு தடத்தில் பயணிக்க இரண்டு பேருந்துகளுடன் தொடங்கினர். ஒவ்வொரு பயணத்தின் போதும் அஃப்சல் பயணிகளுடன் உடன் செல்வார்.
”வாடிக்கையாளர்களின் திருப்தி மிக முக்கியம் என்பதில் தொடக்கம் முதலே அதிக அக்கறையும், முக்கியதுவமும் கொடுத்தோம்.”
இதுவே வேகமான வளர்சிக்கும் வித்திட்டது. மைசூர் வரை விரிவு படுத்தியது மட்டுமல்லாமல் சென்னை திருச்சி என பல புதிய தடங்களையும் அறிமுகப்படுத்தினர்.
ஒவ்வொரு பின்னடைவும் புது வாய்புக்கான அறிகுறி என்பதற்கேற்ப நன்றாக பயணித்த வணிகத்தில் தடைக்கல்லாக அமைந்தது அரசு அறிவித்த ஆம்னி பேருந்திற்கான தடை. இந்தச் சூழலில் துவண்டு போகாமல், புதிய வாய்பை நோக்கினார் அஃப்சல். மணிபூர் அரசாங்கம் பேருந்துகளுக்கு புது பர்மிட் அளிப்பதாக தெரிய வர, தந்தையுடன் அந்த மாநில முதலமைச்சரை சந்தித்து மூன்று வருடதிற்கான அனுமதியும் பெற்றார். இதற்குள் கல்லூரி படிப்பும் முடித்து முழு நேரமாக வணிகத்தில் ஈடுபட தொடங்கினார்.
1985 ஆம் ஆண்டு 100 டாக்ஸி, பேருந்துகள் என பர்வீன் டிராவல்ஸ் வளர்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், தொடர் வளர்சி என்பதையே இலக்காக கொண்டிருந்தனர்.
தொழில்நுட்பத்தில் முன்னோடியாக
90-களில் தொழில்நுட்ப வளர்சியை கருத்தில் கொண்டு, தங்களின் பேருந்துகள் மேலும் வசதிபட இருக்க வேண்டும் என்று விரும்பினர். முதல் முறையாக ஹை-டெக் பேருந்தை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாறும்.
ஆசியாவிலயே முதல் முறையாக மிண்ணணு டிக்கெட்டிங் சேவையை பர்வீன் ட்ராவல்ஸ் அறிமுகப்படுத்தியது. கான்ஃபரன்ஸ் ஆன் வீல்ஸ் என்ற புதுமையான சொகுசான கான்சப்டையும் அறிமுகப்படுத்தினர்.
இளம் தொழில்முனைவர்களுக்கான அறிவுரை
சொகுசு கார், பல வகையான வணிகம் என தனது சாம்ராஜ்யத்தை திட்டமிட்டு வளர்த்தவர் அஃப்சல். இளம் தலைமுறையினருக்கு அவரின் அனுபவத்திலிருந்து அவர் கூறுவது,
”சரியான அணுகுமுறை மிக அவசியம். வாடிக்கையாளர்களின் நலனை என்றுமே மனதில் கொள்ளுதல் அவசியம். ஒவ்வொரு நாளும் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம். இலக்கை நோக்கி பயணிக்க முழு மூச்சுடன் களமிறங்க வேண்டும். விரைவாக பணம் சம்பாதிக்க எண்ணாமல் திட்டமிட்டு சீரான வளர்ச்சி பாதையில் பயணித்தால் வெற்றி நிச்சயம்,”
என்று தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து தான் கற்றுக் கொண்ட அனுபவத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
எதிர்காலத் திட்டம்
ஐம்பது ஆண்டு கால நிலையான வளர்ச்சியை கண்டுள்ள பர்வீன் டிராவல்ஸ் தற்பொழுது 45 நகரங்களில் தங்களின் சேவையை வழங்கி வருகிறது. சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள இந்நிறுவனம் 100 பாட்டரி கொண்டு இயக்கப்படும் பேருந்துகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்த கட்ட வளர்சிக்காக 250 கோடி நிதி திரட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.