இனி மொறு, மொறு தோசையை ப்ரிண்ட் எடுத்து சாப்பிடுங்க...
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தோசை சுடும் மெஷின் அறிமுகமாகியுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தோசை சுடும் மெஷின் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது சம்மந்தமான வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
தோசை ப்ரிண்ட் எடுக்கும் மெஷின்
தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவாக உள்ளது.
“ஒரு கரண்டி மாவை எடுத்து சூடான கல்லில் வட்டமாக ஊற்றி... அதன் மீது ஒரு கரண்டி நெய் அல்லது எண்ணெய்யை விட்டு... இப்படி ஒரு திருப்பு.. அப்படியொரு திருப்பு என திருப்பி மொறு, மொறுவென தோசை சுட நினைத்தால், சில சமயங்களில் இல்லத்தரசிகளின் நிலை வைகைப்புயல் வடிவேலுவின் ஊத்தப்பம் காமெடி போல் மாறிவிடுகிறது...”
அப்படி தோசை சுடும் போது நடக்கும் சொதப்பல்களை தடுப்பதற்காகவே இப்போது தோசை சுடும் மெஷின் வந்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது சமையல் அறையின் கிச்சன் டாப் மீது சிறிய சைஸ் பிரிண்டர் போன்ற சாதனம் ஒன்றை வைத்துள்ளார்.
சமையல் அறையில் எதுக்கு பிரிண்டர் என யோசித்துக்கொண்டிருக்கும் போதே... அதில் உள்ள குவளை போன்ற அமைப்பில் தோசை மாவை ஊற்றுகிறார். அத்துடன் பக்கவாட்டில் இருக்கும் பட்டன்களில் தோசை எவ்வளவு வெப்பநிலையில் வேக வேண்டும், எத்தனை வேண்டும், எப்படி மொறு மொறுப்பாக இருக்க வேண்டும் என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்துவிட்டு, சமையல் அறையை விட்டு வெளியேறிவிடுகிறார்.
உடனே, அந்த குவளையில் இருந்த மாவானது பிரிண்டர் உருளை போன்ற அமைப்பின் மீது விழுகிறது. அடுத்த சில விநாடிகளிலேயே மொறு, மொறுப்பான தோசை பிரிண்டாகி... இல்லை.. இல்லை... சுடப்பட்டு மறுபக்கம் வெளியே வருகிறது. ஆனா என்ன இந்த தோசை வட்டம் இல்லை சதுரமா இருக்கும்...
நீங்கள் சுடும் தோசைக்கு எண்ணெய் அல்லது நெய் என உங்களுக்குப் பிடித்தவற்றை ஊற்றி சுடலாம். தோசை வெளியே வந்த சில நிமிடத்திலேயே அதனை பொடி அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யமான நெட்டிசன்கள் பலரும் விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தோசை சுடுவது எல்லாம் ஒரு பெரிய வேலையா? இதுக்கு போய் மெஷின் கண்டுபிடிச்சியிருக்காங்க...” என சிலர் விமர்சித்தாலும்,
“பேஷ் பேஷ்... போறப்போக்கப் பார்த்தா உங்கள் வீட்டில் துணி துவைக்க மெஷின் இருக்கலாம்... பாத்திரம் தேய்க்க மெஷின் இருக்கலாம்... தோசை சுட மெஷின் இருக்கா? என கேட்க வச்சிடுவாங்க போலயே..” என சிலர் தங்களது ஆச்சர்யத்தை பகிர்ந்துள்ளனர்.
தொகுப்பு: கனிமொழி