'ஆண்டுக்கு ரூ.2 கோடி வர்த்தகம்' - பழத்தோலில் ஆர்கானிக் உரம் தயாரிக்கும் இளைஞர்!
மண்புழு உரம் தயாரிப்பு மூலமாக ஆண்டுக்கு லட்சங்களில் வருவாய் ஈட்டும் தொழில்முனைவோர் குறித்து பார்த்திருப்போம். ஆனால் இளைஞர் ஒருவர் ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் விற்பனை மூலமாக ஆண்டுக்கு கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறார்.
மண்புழு உரம் தயாரிப்பு மூலமாக ஆண்டுக்கு லட்சங்களில் வருவாய் ஈட்டும் தொழில்முனைவோர் குறித்து பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிவீசப்படும் ஆரஞ்சு மற்றும் வாழைப்பழத் தோல் மூலம் இயற்கை உரம் தயாரித்து ஆண்டுக்கு கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறார்.
ஆரஞ்சு பழத் தோலில் ஆர்கானிக் உரம்:
வெயில் சுட்டெரிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயம் செய்வது பெரும் சவாலான காரியம். ஆனால், மாற்றுச்சிந்தனை இருந்தால் பாலைவன பூமியையும் பொன்விளையும் நிலமாக மாற்றமுடியும் என இளைஞர்கள் சாதித்து காட்டியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போர்ஜ் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் கெர்டி. இங்கு விவசாயிகளான தேவிலால், அம்புபாய் தம்பதியின் மகன் நாராயணன் லால் குர்ஜார். இவருக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே விவசாயம் மீது தனி ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.

எனவே, பள்ளிப் படிப்பை முடித்த கையோடு, உதய்பூரின் மகாராணா பிரதாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் 2017ம் ஆண்டு பி.டெக் பட்டம் பெற்றார். அந்த பல்கலைக்கழகத்தில் குறைந்த தண்ணீரில் அதிக பயிர்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
ஆராய்ச்சி செய்ய அவருக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆரஞ்சு தோல்கள், கரும்புக் கழிவுகள், வாழைப்பழத் தோல்கள் மற்றும் பிற கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தார். இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு, மண்ணின் தரம் ஆகியவை பாதிக்கப்படையாது என்பதை உறுதியாக நம்பினார்.
இதனையடுத்து, சொந்த கிராமத்திற்கு திரும்பிய நாராயணன், தனது 4 நண்பர்களுடன் இணைந்து ஆரஞ்சு மற்றும் வாழைத்தோல் போன்ற உயிர்க்கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து வருகிறார்.
பழத்தோலில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது வழக்கமான ஒன்று தானே. மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட காய்கறி கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவில்லையா? எனத் தோன்றலாம்.
ஆனால், நாராயணன் தயாரித்து வரும் ’ஃபாசல் அம்ரித்’ ஆர்கானிக் உரத்தை பயன்படுத்தினால் பயிருக்கான தண்ணீர் தேவை வழக்கத்தை விட 40 சதவீத குறைவாகவே தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, விளைச்சலும் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதற்காக நாராயணன் லால் குர்ஜாருக்கு 2018ம் ஆண்டு குடியரசுத்தலைவர் கையால் விருது பெற்றுள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி:
உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை கற்க நாராயணன் உள்ளிட்ட நண்பர்கள் குழு கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளை ஜப்பானில் செலவிட்டுள்ளனர். உரத்தின் தயாரிப்பு மற்றும் தரம் குறித்து பல கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, ஜப்பானில் உள்ள ஒகினாவா நகரிலும் ஃபாசல் அம்ரித்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இந்திய திரும்பிய நண்பர்கள் ஆர்கானிக் உரம் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவைக் கடந்து ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும்,
“ஃபசல் அம்ரித் (Fasal Amrit) உரம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது.
நாராயண் லால் இதுவரை மொத்தம் 50 விருதுகளைப் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சர் அகிஹிரோ நிஷிமுரா சிறந்த சுற்றுச்சூழல் தொடக்க விருதை நாராயண் லாலுக்கு வழங்கியுள்ளார்.
வெறும் 24 வயதான இளைஞர் தனது சொந்த மாநிலத்திற்காக மேற்கொண்ட ஆராய்ச்சி தற்போது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே மாற்றக்கூடிய வர்த்தகமாக மாறியுள்ளது.
தகவல் உதவி - டிஎன்ஏ இந்தியா

357 கோடி ரூபாய் மதிப்பு பிராண்ட் - இயற்கை விளைச்சலை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘ஆர்கானிக் இந்தியா’