கடலில் கொட்டப்படும் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சென்னை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த சமுத்யோகா வேஸ்ட் சக்ரா ஸ்டார்ட் அப் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டத்திலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், மல்டிலேயர் பிளாஸ்டிக் பேக்கேஜிங் போன்றவை மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டாலும்கூட இந்த மறுசுழற்சி மையங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயு போன்றவை வெளியேற்றப்படுகின்றன. இதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையைச் சேர்ந்த 'சமுத்யோகா வேஸ்ட் சக்ரா' (Samudhyoga Waste Chakra) ஸ்டார்ட் அப்.

2019-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டு திட மற்றும் திரவ கழிவுகளைப் பயனுள்ள பொருட்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், 'பைரோலிசிஸ் பிளாண்ட்’ திறப்பதற்கான சோதனை திட்டத்தை சென்னை மாநகராட்சி உடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு 200 லிட்டர் ஜீரோ எமிஷன் எண்ணெய் தயாரிக்கப்படும். அதுமட்டுமின்றி தினமும் 250 கிலோ கழிவுகள் கடலில் கொட்டப்படுவது தவிர்க்கப்படும்.
சமுத்யோகா பயணம்
சமுத்யோகா 2018-ம் ஆண்டு ஐந்து பேர் கொண்டு குழுவாகத் தொடங்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்த 'கார்பன் ஜீரோ சேலஞ்ச்’ போட்டியில் இக்குழு பங்கேற்றது.
அப்போது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்திய இக்குழு, உலகளவில் வெறும் 9 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தனர்.
அதேபோல் மொத்தமாக உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 60 சதவீதம் வரை மல்டிலேயர் பேக்கேஜிங் உள்ளிட்ட பேக்கேஜிங் கழிவுகள் பங்களிக்கின்றன. இவற்றை இந்தியாவில் உள்ள மெக்கானிக்கல் மறுசுழற்சி கட்டமைப்புகள் மூலம் மறுசுழற்சி செய்யமுடியாது. இதுகுறித்தும் இவர்கள் தெரிந்துகொண்டனர்.
இக்குழுவினர் மறுசுழற்சி ஆலைகளைப் பார்வையிட்டபோது இங்குள்ள செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டிருப்பதை கவனித்தனர். ரசாயன மறுசுழற்சி ஆலைகள் திறந்தவெளி அல்லாமல் முற்றிலும் மூடப்பட்ட இடத்தில் இயங்குவதைக் கண்டார்கள். வெளியேற்றம் தொடர்பான பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவையே இதற்குக் காரணம்.
“இதில் செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பது புரிந்தது. தொழில்நுட்பப் பயன்பாடு இருந்தபோதும் வெளியேற்ற தரநிலைகள் மோசமாக இருந்தது. பாதுகாப்பான அதேசமயம் திறன்மிக்க முறையை அறிமுகப்படுத்த விரும்பி சமுத்யோகா நிறுவினோம்,” என்று சமுத்யோகா வணிகத் தலைவர் கேசவ் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இக்குழு 5 லட்ச ரூபாய் வென்றது. ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செல்லை அணுகும் வாய்ப்பும் கிடைத்தது. பிராஜெக்டிற்காக நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசித்தனர்.
2019-ம் ஆண்டு என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1 கோடி ரூபாய் சீட் நிதி பெற்றார்கள்.
”மறுசுழற்சிக்கு உட்படுத்த இயலாத பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள பரவலாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு சுத்திகரிப்பு அமைப்பு நிறுவுவதே இந்த ஸ்டார்ட் அப்பின் விருப்பம்,” என்கிறார் சமுத்யோகா இணை நிறுவனர் கே சிவகாமி.
“இந்த ஸ்டார்ட் அப் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக எண்ணெயாக மாற்றி கடல் மற்றும் பூமியை மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்கில் இருந்து பாதுகாக்கிறது. அத்துடன் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. இதுபோன்ற தீர்வுகளே சமுத்யோகா நிறுவ நம்பிக்கையளித்தது,” என்கிறார்.

கழிவு மறுசுழற்சி தொழில்நுட்பங்கள்
DZEEP, EcoFert ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் கொண்டு சமுத்யோகா செயல்படுகிறது.
DZEEP என்கிற யூனிட் 1,000 கிலோ பிளாஸ்டிக்கை ஜீரோ எமிஷனுடன் 800 லிட்டர் எண்ணெயாக மாற்றுகிறது. இதில் பைரோலிசிஸ் என்கிற செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு 2,500 சதுர அடி நிலம் தேவைப்படும்.
சோதனை திட்டம் ஜூலை மாதம் நிறைவடையும். இதற்காக உருவாக்கப்படும் அமைப்பு நாள் ஒன்றிற்கு 250 கிலோ பிளாஸ்டிக்கை பிராசஸ் செய்து 200 லிட்டர் எண்ணெய் தயாரிக்கிறது.
“இவ்வாறு தயாரிக்கப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு டீசலுடன் கலக்கப்பட்டு பாய்லர்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும,” என்கிறார் கேசவ்.
அடுத்ததாக EcoFert தொழில்நுட்பம் குறித்து அவர் விவரிக்கும்போது,
”நாங்கள் EcoFert என்கிற தொழில்நுட்பம் மூலம் சிறுநீரை பிராசஸ் செய்து தண்ணீரை மறுசுழற்சி செய்கிறோம். 1,000 லிட்டர் சிறுநீரில் இருந்து இந்த யூனிட் 850 லிட்டர் தண்ணீர், 100 லிட்டர் அம்மோனியா, ஒரு கிலோ ஸ்ட்ரூவைட் ஆகியவற்றை மீட்டெடுக்கிறது. இவ்வாறு பெறப்படும் தண்ணீர் மீண்டும் இந்த அமைப்பிற்கே திரும்ப அனுப்பப்பட்டு ஃப்ளஷ் செய்யவும் தோட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அம்மோனியா விற்பனை செய்யப்பட்டு கிடைக்கக்கூடிய தொகை கம்யூனிட்டி டாய்லெட் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் கேசவ்.
EcoFert யூரினல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். தற்சமயம் ஐஐடி மெட்ராஸில் என்ஜினியரிங் டிசைன் துறையில் 500 லிட்டர் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த யூனிட் தினமும் 50 லிட்டர் அம்மோனியா உற்பத்தி செய்கிறது. அத்துடன் நாள் ஒன்றிற்கு 10,000 பேர் பயன்படுத்தும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

ஜீரோ எமிஷன் அமைப்பு
இந்த ஸ்டார்ட் அப்பின் இயக்குநர் மற்றும் ஐஐடி சென்னை சுற்றுசூழலியல் துறை பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி உள்ளிட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்முறைகளில் வெளிப்படும் வாயு, மேம்பட்ட வாயு மீட்பு அமைப்பு வழியாக செல்வதை இந்தப் பொறியாளர்கள் உறுதி செய்கின்றனர். இதிலுள்ள ஸ்கிரப்பர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களை அகற்றி எரித்துவிடுவதால் வெளியேற்றம் குறைகிறது.
சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டம்
“நாங்கள் துறையில் செயல்படத் தொடங்கியபோது, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் ரசாயன மறுசுழற்சி சாத்தியப்படும் என்பதைப் புரியவைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்கிறார் கேசவ். வரும் நாட்களில் ஸ்மார்ட் நகரங்களில் செயல்படத் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா