ரசாயனங்கள் இல்லாத சோப்பு பிரான்ட் – 50 வயதில் மகளுடன் நிறுவனம் தொடங்கி லாபகரமாக்கிய தொழில்முனைவர்!
50 வயதில் பிரதிக்ஷா சங்கோய் தொடங்கிய Soap Chemistry இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வாடிக்கையாளார்களைக் கவர்ந்து இதுவரை 25 லட்ச ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
பிரதிக்ஷா சங்கோய் திருமணம் முடிந்து 29 ஆண்டுகள் வரை குழந்தைகள், குடும்பம் என இருந்துவிட்டார். குடும்பத்தினர் ஸ்டீல் வணிகம் நடத்தி வந்தனர். இதனால் வேலைக்கு செல்வதைப் பற்றி அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஆனால், சொந்தமாக ஒரு சிறிய தொழில் முயற்சியை எப்படியாவது தொடங்கவேண்டும் என்கிற ஆசை மட்டும் அவர் மனதில் இருந்துகொண்டே இருந்தது. இந்த யோசனை 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மேலும் வலுவடைந்தது. வடிவமும் பெற்றது.
பிரதிக்ஷா சோப்பு தயாரிப்பு சம்பந்தப்பட்ட கோர்ஸ் ஒன்றை ஏற்கெனவே முடித்திருந்தார். இதில் அவருக்கு அத்தனை ஆர்வம் இருந்து வந்தது. பெருந்தொற்று சமயத்தில் மீண்டும் சோப்பு தயாரிப்பு பற்றி யோசித்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில் சோப்பு தயாரிப்பு வேலைகளையும் தொடங்கினார்.
ஒருமுறை பிரதிக்ஷாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சருமத்தில் பருக்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அவரிடம் வருத்தப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே பிரதிக்ஷா ஒரு சோப்பு தயாரித்து அவரிடம் கொடுத்தார். அதை முயற்சி செய்து பார்க்க சொன்னார். பிரமாதமாக பலனித்ததாக அவர் பிரதிக்ஷாவின் கூறியிருக்கிறார். சருமத்தில் இருந்த பிரச்சனைக்கு அவருக்குத் தீர்வு கிடைத்துள்ளது.
பிரதிக்ஷாவிற்கோ தொழிலுக்கான ஆரம்பப்புள்ளியாகவே மாறியுள்ளது.
பிரத்க்ஷாவின் மகள் வமா. இவருக்கு 22 வயதாகிறது. பிரதிக்ஷா தனது மகளுடன் சேர்ந்து 2020-ம் ஆண்டு மும்பை தாதரில் இருக்கும் தனது வீட்டிலிருந்தே
முயற்சியைத் தொடங்கினார்.மகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இந்தத் தொழில் முயற்சி பற்றியும் உலகளாவிய பிராண்ட் உருவாக்க விரும்புவது பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.
துணிச்சலான முயற்சி
பிரதிக்ஷா பாரம்பரிய குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தினர் தொழில் செய்து வந்தனர். சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்பது அவரது கனவாகவே இருந்தது.
“ஆரம்பத்துல சின்னதா ஹேன்ட்மேட் சாக்லேட் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா புகுந்த வீட்டுல குடும்பத்தை கவனிச்சுகிட்டா போதும்னு சொல்லிட்டாங்க. அதனால தொழில் தொடங்கற கனவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமுடியாம போயிடுச்சு,” என்கிறார் பிரதிக்ஷா.
குடும்பம், குழந்தைகள் என எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்த பிரதிக்ஷாவிற்கு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நேரம் கிடைத்துள்ளது. இந்த ஓய்வு நேரத்தில் தன்னுடைய கனவை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்.
“என் பொண்ணு வமா பிபிஏ படிச்சிருக்கா. வேலைக்கு போறதுல அவங்களுக்கு இஷ்டமில்லை. தொழில் முயற்சிதான் அவங்களுக்கும் பிடிச்சிருந்தது. இதுதான் சரியான நேரம்னு நினைச்சு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம்னு முடிவு பண்ணோம். இந்த தடவை குடும்பத்துலேர்ந்தும் எந்தவித எதிர்ப்பும் இல்லை,” என்கிறார்.
பிரதிக்ஷா தன் கனவு நிறைவேறப்போகும் சந்தோஷத்தில் இருந்தார். பிரதிக்ஷா, வமா இருவரும் தொழிலில் முதலீடு செய்ய தங்களுடைய சேமிப்பைத் திரட்டினார்கள். 2 லட்ச ரூபாய் முதலீடு செய்து, உள்ளூரிலேயே மூலப்பொருட்களை வாங்கி வீட்டிலிருந்தே Soap Chemistry தொடங்கினார்கள்.
சோப்பு தயாரிப்பில் பிரதிக்ஷா களமிறங்க, மார்க்கெட்டிங் வேலைகளை வமா கவனித்துக்கொண்டார். இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. தற்போது மாய்ஸ்சுரைசர், நறுமண எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு, பாடி சால்ட்ஸ், ஸ்கிரப், ஹேர் ரிமூவல், பவுடர், லிப் பாம் என கிட்டத்தட்ட 60 எஸ்கேயூ-க்களுடன் விரிவடைந்துள்ளது. மும்பையிலேயே ஆய்வக பரிசோதனை அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது.
கண்காட்சிகள் மூலமாகவும் இன்ஸ்டாகிரம், ஃபேஸ்புக் மூலமாகவும் ஆர்டர்கள் பெறப்படுகின்றன.
அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்
பிரதிக்ஷா 50 வயதை எட்டிய நிலையிலும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளத் தயங்கவில்லை.
“50 வயசானதுக்கப்புறமும் என்னோட திறமை நீர்த்துபோக விடாம அதை தக்கவெச்சு பயன்படுத்திக்கறது சந்தோஷமா இருக்கு,” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
வெளியிடங்களுக்கு அதிகம் சென்று பழக்கம் இல்லாத பிரதிக்ஷா மகளின் உதவியுடன் இதுவரை 20-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இதில் ஒன்று கோவாவில் நடந்தது.
Soap Chemistry இதுவரை 25 லட்ச ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. இந்தத் தயாரிப்புகளில் SLS, பாராபீன் போன்ற எந்தவித ரசாயனங்களும் சேர்க்கப்படுவதில்லை என்றும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
வருங்காலத் திட்டங்கள்
மக்களுக்கு எத்தனையோ விதமான சருமப் பிரச்சனைகள் இருப்பதால் சந்தை தேவையும் அதிகம் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பிரதிக்ஷா.
வரும் நாட்களில் தயாரிப்புகளை விரிவுபடுத்தி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்ய இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சொந்த வலைதளமும் தயாராகி வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல் மின்வணிக தளங்களில் பட்டியலிடுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
”அம்மாக்கள் எல்லாரும் தங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்கணும். நம்மளை நாமளே கவனிச்சுக்கறது தப்பு கிடையாது. நமக்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கணும். நமக்கான சந்தோஷத்தை நாமளே உருவாக்கிக்கணும்,” என்று இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கையளிக்கிறார் பிரதிக்ஷா.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா