மயில்சாமி அண்ணாதுரை, வனிதா, வீரமுத்துவேல் - நிலவுத் திட்டத்தின் மூளையாக செயல்பட்ட தமிழர்கள்!
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. 3 நிலவுப் பயணத் திட்டங்களிலும் பின்னால் இருந்து மூளையாகச் செயல்பட்டவர்கள் தமிழர்கள் என்பதே அந்த மகிழ்ச்சிக்கான காரணம்.
நிலவின் தென்துருவப் பகுதியில் சோதனை நடத்தும் முயற்சியில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. பூமியின் ஒரே இயற்கை செயற்கைகோளான நிலவில் கால் பதித்த நாடுகள் பட்டியலில் நான்காவதாக சேர்ந்துள்ளது இந்தியா. இஸ்ரோவின் நிலவுப் பயண ஆராய்ச்சியின் இறுதிக் கட்டமான விண்கலத்தை தரையிறக்கும் பணியானது வெற்றிகரமானதையடுத்து நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
யூடியூப் லைவில் சாதனை
ஆகஸ்ட் 23 மாலை 5.44 முதல் 6.04 வரை நடைபெற்ற இந்த தரையிறக்கும் பணியை இஸ்ரோ யூடியூப்பில் நேரலை செய்தது. இதுவரை இல்லாத சாதனையாக இந்த நேரலையை சுமார் 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிரங்கியதை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த அந்தத் தருணம் வரலாற்றில் மட்டுமல்ல ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிமிடங்கள். சந்திரயான் வரலாற்றை நாடே பார்த்து உற்சாகம் அடைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் திட்டங்களில் பொதுவாக ஒத்துப் போகின்ற ஒரு விஷயத்தை பார்க்க முடிகிறது.
அது 2008 முதல் நடைபெறும் சந்திரயான் திட்டங்களின் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் தமிழர்கள் என்பதே ஆகும். சந்திரயான் 1 திட்டத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தில் விஞ்ஞானி வனிதா, தற்போது சந்திராயன் 3 திட்டத்தில் விஞ்ஞானி வீரமுத்துவேல் என்று சந்திராயன் திட்டங்களில் தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

மயில்சாமி அண்ணாதுரை
சந்திராயன் 1 திட்டத்தை 2008ல் வெற்றியாக்கியதை அடுத்து மயில்சாமி அண்ணாதுரை “இந்தியாவின் நிலவு மனிதர்” என்று போற்றப்பட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனராகவும் இருந்த இவர், சந்திரயான் 1 மட்டுமல்ல மங்கல்யான், சந்திரயான் 2 விண்வெளி திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவும் பங்களிக்கிறது என்கிற நிலைக்கு வழிவகுத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறிய கிராமமான கோதவாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் பட்ட மேற்படிப்பு படிக்கும் வரை கோவை மாவட்டத்தைத் தாண்டியதில்லை. 1976ல் கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரில் பட்டம் பெற்ற விஞ்ஞானி மயில்சாமி 1982ல் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். 1982ம் ஆண்டில் தனது 24வது வயதில் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த இவர் சுமார் 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
தன்னுடைய பணிக்காலத்தில் ஐஆர்என்எஸ்எஸ், ஜிசாட், ஆஸ்ட்ரோ சாட், இந்சாட் உள்பட 30 செயற்கைகோள்களை வடிவமைத்து, தயாரித்து விண்ணில் செலுத்தியுள்ளார். திறமைசாலியான இவரின் வியக்க வைக்கும் அறிவியல் சிந்தனைக்கு 75க்கும் மேற்பட்ட விருதுகளை மத்திய, மாநில அரசுகள், பல்வேறு அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
வனிதா முத்தையா
36 வயதான வனிதா முத்தையா சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டார். திட்டப்பணி இயக்குநர் என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளை வடிவமைத்து, தயாரித்து, சரிபார்த்து, விண்கலத்தை இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்து விண்கலத்தை விண்ணில் செலுத்தும் வரை பொறுப்பேற்பதாகும்.
இத்தகைய முக்கியப் பொறுப்பில் இருந்த வனிதா, சந்திரயான் 2 செயற்கைகோளுக்கு முன்னர் கார்டோசாட் -1, ஓசன்சாட் – 2 உள்ளிட்ட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வடிவமைப்பில் வனிதாவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
இஸ்ரோவில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதல் பேரில் சந்திரயான் 2 திட்டத்தில் செயலாற்றினார். இந்தியாவின் “ராக்கெட் பெண்மணி” என்று புகழப்பட்ட வனிதா திட்ட இயக்குனராக இருந்து செயல்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வெற்றிக்கு மிக அருகில் சென்று வாய்ப்பை தவறவிட்டது. எனினும் சந்திரயான் 2 விண்கலத்தின் ரோவர் மட்டுமே வெடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போதைய வெற்றிக்கு பயன்பட்டது. லேண்டர் மட்டுமே வெடித்த நிலையில் நிலவில் இருக்கும் சந்திரயான் 2 விண்கலம் சந்திரயான் 3 விண்கலத்துடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறது.

வீரமுத்துவேல்
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978ம் ஆண்டு பிறந்தவர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர், பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை ஐஐடியில் மேற்கொண்ட படிப்பை படித்து முடித்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை தொடர்ந்து வந்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் 1989ம் ஆண்டு விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார் வீரமுத்துவேல்.
விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரையை 2016ல் சமர்பித்தார். அதற்கான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வில் வீர முத்துவேல் கையாண்ட தொழில்நுட்பம் விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கும், விண்கலத்தின் ரோவர் பகுதியை சரியாக இயக்குவதற்கும் உதவும் வகையில் இருந்தது.

விஞ்ஞானி வீரமுத்துவேல்
இஸ்ரோவின் முதல் நானோ செயற்கைக் கோள் குழுவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்ற இவர் மூன்று நானோ சாட்டிலைட்டையும் ஏவியுள்ளார். சந்திரயான் 2 இணை திட்டத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் சந்திரயான் 3ன் திட்ட இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை பெற்று 4 ஆண்டுகளாக தன்னுடைய சொந்த குடும்பத்தினரைக் கூட பார்க்காமல் முழு மூச்சாக சந்திரயான் 3க்காக பணியாற்றி இன்று வெற்றி மகனாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறார்.
“நான் ஒரு எளிய மனிதன். என்னால் இந்த அளவுக்கு வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம்முடைய கைகளில் தான் உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் சுயஒழுக்கம், எதையும் எதிர்பார்க்காத 100 சதவிகித ஈடுபாடு, கடின உழைப்பு, நமக்கு இருக்கும் தனித்துவம் நமக்கு வெற்றியை பெற்றுத் தரும். கடின உழைப்பு பலனின்றி போகாது,” என்று விஞ்ஞானி வீரமுத்துவேல் ஏற்கனவே வெளியிட்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இஸ்ரோ - கம்மி பட்ஜெட்டில் சந்திரயான் 3 வெற்றி அடைந்தது எப்படி?