மாசில்லா தீபாவளி; மாட்டு சாணத்தில் அகல்விளக்கு!
மாட்டு சாணத்தில் சாமி சிலைகள், மூங்கில் மெழுகுவர்த்திகள், சாணத்தில் அகல்விளக்குகள் என ‘மாசில்லா தீபாவளி' முயற்சியால் உருவாகியுள்ளது சிறுகுறு தொழில்கள்!
படபட பட்டாசு, புத்தாடை, இனிப்பு, வண்ண வண்ண பல்புகள் என எப்போதும் கோலகோலமாய் நடக்கும் தீபாவளி வியாபாரங்கள் இந்தவருடம் சற்றே கலையிழந்துள்ளது. உண்மையில், கோவிட் தொற்றால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால் வந்த கலையிழப்பு இது.
நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ‘காசில்லா தீபாவளி' கொண்டாடும் நிலையிலிருக்க, அவர்களுக்கு வேலை வாய்ப்பை நல்கியுள்ளது ‘மாசில்லா தீபாவளி' முயற்சி. ஆம், தீபாவளியன்று கலர் கலரான மேட் இன் சீனா அலங்கார பல்புகளுக்கு டஃப் போட்டி கொடுக்கும் வகையில் நாடெக்கும் சாணத்தில் விளக்குகள் மற்றும் கடவுள் உருவச் சிலைகள் தயாரிக்கும் தொழில் உருவெடுத்து, சாண அகல் விளக்குகளுக்கு மார்கெட்டில் பயங்கர டிமாண்டாகியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் சிலைகளைத் தயாரிப்பதில் சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காதப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்த ‘கௌமய கணேஷா' பிரச்சாரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து பஞ்சகவியப் பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் ‘காமதேனு தீபாவளி அபியான்' பிரச்சாரத்தைத் தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியது. அதன்படி,
தீபாவளிப் பண்டிகையின்போது, 11 கோடி குடும்பங்களில் பசு சாணத்தால் செய்யப்பட்ட 33 கோடி விளக்குகளை ஏற்ற தேசிய காமதேனு ஆயோக் திட்டமிட்டது. தீபஒளி திருநாளில் சூழலுக்கு தீங்குவிளைவிக்கும் பிளாஸ்டிக் விளக்குகளை வீட்டில் ஏற்றுவதற்கு மாறாக இயற்கையான பொருள்களையும் கொண்டும் மாட்டு சாணத்தையும் கொண்டும் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியும் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக் கொண்டுள்ளன. உற்பத்தியும் தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு முன்பு 33 கோடி விளக்குகளை உருவாக்குவதை இலக்காக வைத்துள்ளோம். இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 192 கோடி கிலோ மாட்டுச் சாணம் கிடைக்கிறது.
ஆயோக் மாட்டு சாணம் சார்ந்த தயாரிப்புகளின் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வணிகங்களை அமைக்க முற்படும் தொழில்முனைவோருக்கு பயிற்சி அளித்து வருகிறது.
விளக்குகளைத் தவிர, சாணம், பேப்பர் வைட்ஸ், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள், தூபக் குச்சிகள், மெழுகுவர்த்திகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஆயோக் ஊக்குவிக்கிறது.
”கோவிட் -19 தொற்றுநோயால் தற்போது நிதி சிக்கலில் சிக்கியுள்ள கால்நடை வளர்ப்பவர்கள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், அவர்கள் கிராமப்புறங்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த முயற்சி உதவும்,'' என்று தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா கூறியுள்ளார்.
நாட்டின் பல மாநிலங்களிலும் அகல்விளக்கு உற்பத்தி சூடுபிடித்து வருகிறது. அதில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் உள்ள கைம்ப்வாலாவில் கோசாலை நடத்திவரும் சுர்பி குஞ்ச், பண்டிகை நாளில் சாணத்திலிருந்து விளக்குகள் மற்றும் தொட்டிகள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியுள்ளார்.
‘‘ஏற்கனவே 21,000 விளக்குகளும், 5,000 பானைகளும் விற்பனையாகிவிட்டன. அவை அனைத்தும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்டவை. ஒரு விளக்கு ரூ.2க்கும், 3 முதல் 6 அங்குல அளவிலான ஒரு தொட்டி ரூ.10 முதல் ரூ20 வரை விற்கப்படுகிறது. நாங்கள் பஞ்சாப்பின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு சமூக அமைப்புகளுக்கும் விளக்குகள் மற்றும் பானைகளை அனுப்புகிறோம். இப்போது, ஆர்டர்களே பெற முடியாத அளவிற்கு இருப்பில் நிறைய ஆர்டர்கள் உள்ளன,'' என்று கூறினார்.
கைம்ப்வாலாவில் மற்றொரு கோசாலை நடத்தும் சுபோத் நாயர் கூறுகையில், ‘‘சாணத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. அதன் தயாரிப்புகளை பின்னர் எருவாகப் பயன்படுத்தலாம். சாணத்தில் தயாரிக்கப்படும் தொட்டியில் ஒரு செடி வளர்க்கப்பட்டால், அது தானாகவே எல்லா பக்கங்களிலிருந்தும் எருவைப் பெற்று சிறப்பாக வளரும். பிளாஸ்டிக் பானைகள் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல.
”கைகளால் இயக்கப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ரூ.10,000 முதல் 15,000 வரை மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக, இந்திய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நாங்கள் கடந்த ஆண்டை விட சுமார் 25,000 விளக்குகள் அதிகம் உருவாக்கியுள்ளோம். 600 சிலைகளை உருவாக்கியுள்ளோம். இந்த சிலைகள் ஆறுகளில் கரைத்தால் கூட மாசுபடுத்தாது,'' என்று கூறினார் அவர்.
தகவல் மற்றும் பட உதவி: Deccan herald & Tribune India | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ