ருசியான பஜ்ஜி, பானி பூரி: சாலையோர உணவகங்களுக்கான பிரத்யேக செயலி!
வெளியே மேகம் கறுத்து, மழை பொழிய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. மழைக்கு முன்னான மணியோசையாய் மண்வாசனை கிளம்பி உங்கள் நாசிகளை நிரடுகிறது. அப்படியே உட்சென்று பசியையும் கிளப்பிவிடுகிறது. அந்த சீதோஷண நிலைக்கு சூடாய் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் ஏதோ நளனே கையாற சமைத்தது போல அமிர்தமாய் இருக்குமல்லவா? ஆனால் அதில் ஒரு பிரச்சனை. நீங்கள் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் எங்கே சுவையான மிளகாய் பஜ்ஜி கிடைக்கும் என உங்களுக்கு தெரியவில்லை. என்ன செய்வீர்கள்? ஆட்டோக்காரர்களிடமோ, அருகிலிருக்கும் கடைக்காரர்களிடமோ தகவல் கேட்டு தஞ்சமடைய வேண்டியதுதான். “இனி அதற்கு அவசியமில்லை. எங்களின் செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். போதும்” என்கிறார்கள் இந்த சென்னை இளைஞர்கள்.
"ஃபைண்ட் எ கடை" (FindAkadai) என்ற இந்த செயலி சாலையோர உணவகங்களுக்கான பிரத்யேக செயலி. இதை தரவிறக்கம் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சாலையோர உணவகங்கள் பற்றியும் அங்கே கிடைக்கும் ஸ்பெஷல் உணவுகளைப் பற்றியும் உங்களுக்குத் தகவல் தரும். மேலும், இது க்ரவுட் சோர்ஸ்ட்(Crowd sourced app) செயலி என்பதால் நீங்களும் உங்களுக்குத் தெரிந்த கடைகளைப் பற்றியும் அவற்றின் ஸ்பெஷல் உணவுவகைகளைப் பற்றியும் மற்றவர்களிடம் பகிரலாம். கார்த்திக், வால்டர், சரத், ஹர்ஷித் என நான்கு இளைஞர்கள் இணைந்து வடிவமைத்துள்ள இந்த செயலி சமீபத்தில் நடந்த ‘ஆப்ஸ் ஃபார் சென்னை’ என்ற போட்டியில் சிறந்த செயலிக்கான முதல் பரிசை பெற்றுள்ளது.
யோசிக்க வைத்த சாண்ட்விச் கடை
“நாங்கள் நால்வரும் வெவ்வெறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். நான் டெல்லியைச் சேர்ந்தவன். சரத் பழனியைச் சேர்ந்தவர். வால்டர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். ஹர்ஷித் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். நான்கு பேருமே பொறியியல் முடித்த பட்டதாரிகள். சென்னையில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். எங்கள் நால்வருக்குமே விதவிதமான உணவு வகைகளை ருசி பார்க்க பிடிக்கும். அதற்காக சென்னை முழுக்க சுற்றுவோம். அப்படி ஒரு நாள் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு சாண்ட்விச் கடையை பார்த்தோம். அதுதான் இந்த செயலிக்கான கருவை நாங்கள் யோசிக்கத் தொடங்கிய தருணம்” என செயலி உருவான கதையை சொல்லத் தொடங்குகிறார் கார்த்திக்.
“அந்த சாண்ட்விச் கடையில் இருந்த உணவுவகைகள் அவ்வளவு ருசியாக இருந்தன. ஆனால் அந்தக் கடையைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்தக் கடை என்றில்லை. இதுபோல தரமான சாலையோர உணவகங்கள் ஏராளமாக உள்ளன. பெரிய பெரிய உணவகங்களைப் பற்றி தகவல் தர ஏராளமான தளங்களும் செயலிகளும் உள்ளன. ஆனால் சாலையோர கடைகளிலும் பிரமாதமான உணவு வகைகள் கிடைக்கும்போது அவற்றை பற்றி தகவல் தர ஒரு பிரத்யேக செயலியை ஏன் உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு அப்போதுதான் தோன்றியது. உடனே செயல்பட தீர்மானித்தோம் என்றார் கார்த்திக்.
நாங்கள் அனைவரும் ‘34 கிராஸ்’ (34 cross) என்ற செயலிகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதால், இந்த செயலியை வடிவமைப்பது கொஞ்சம் எளிமையாக இருந்தது. வால்டரும் சரத்தும் பிரண்ட் எண்ட் செயல்முறைகளை கவனித்துக்கொள்ள, நான் பேக் எண்ட் செயல்முறைகளை கவனித்துக்கொண்டேன். நாங்கள் வடிவமைக்கும் மாதிரியை டெமோ பார்த்து குறைகளை ஆராய்வது ஹர்ஷித்தின் வேலை. இதுபோக, எங்கள் நிறுவனம் தந்த ஆதரவும் எங்களை வேலையை எளிமையாக்கியது” என தாங்கள் செயல்பட்ட விதம் குறித்து கூறுகிறார் கார்த்திக்.
நோக்கமும் சிரமங்களும்
“எங்கள் நோக்கம் மிகவும் எளிமையானது. வேறு ஊரிலிருந்து இங்கே வருபவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரின் உணவுகள் எங்கே கிடைக்கும் என்பதை தெரிவிக்க ஆசைப்பட்டோம். உதாரணமாய் பர்மிய உணவான அத்தோ இங்கே சில கடைகளில் பிரமாதமாய் இருக்கும். அதை அந்த நாட்டிலிருந்து இங்கே வந்து பணியாற்றுபவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என நினைத்தோம். சொந்த ஊர் சாப்பாட்டை மிஸ் செய்யக்கூடாதல்லவா? அதேபோல் இங்கு உள்ளவர்களுக்கும் வித்தியாசமான, ருசியான சாலையோர உணவுகளை அறிமுகப்படுத்த நினைத்தோம். இந்த எண்ணங்கள்தான் இந்த செயலியின் அடிப்படை.
ஆனால், இந்த செயலியை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. முதல் விஷயம் அவ்வளவு பெரிய டேட்டாபேஸை உருவாக்குவது எளிதான காரியமில்லை. அதனால் கிரவுட் சோர்ஸிங் முறையில் உருவாக்கத் திட்டமிட்டோம். இதன்மூலம் யார் வேண்டுமானாலும் தாங்கள் சாப்பிட்ட தரமான சாலையோர உணவகங்ளைப் பற்றி பதியலாம். இப்படி ஒரு செயலி உருவாவது இதுதான் முதல் தடவை என்பதால் இதற்கான வரவேற்பு எப்படியிருக்கும் எனவும் யோசனையாய் இருந்தது. ஆனாலும் துணிந்து இறங்கினோம்.
இரண்டாவது, இந்த செயலியை பரீட்சித்துப் பார்க்க அதிக மனிதசக்தி தேவைப்பட்டது. டேட்டாபேஸ் பெரிதாக பெரிதாக அதற்கேற்றார்போல் மனித சக்திக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே போனது. குறைந்த நேரத்தில் அந்த மனித சக்தியை திரட்டி செயலியை வெற்றி பெற வைத்தது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்தான்” என்கிறார் கார்த்திக்.
தரமே நிரந்தரம்
“இந்த செயலியை தரவிறக்கம் செய்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். குறிப்பிட்ட அந்த சாலையோர உணவகத்தின் தரம் பற்றித் தெரியாமல் எப்படி அங்கே சாப்பிடுவது என்பதே அது. இந்த சந்தேகம் எங்களுக்கும் இருந்தது. அதை நிவர்த்தி செய்ய சில வசதிகளை இந்த செயலியில் சேர்த்தோம். இதன்படி, நீங்கள் வெறுமனே ஒரு கடையைப் பற்றி இங்கே பதிந்துவிட முடியாது. அந்த கடையின் சுகாதாரத்தைப் பற்றியும் தரத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள நாங்கள் சில கேள்விகளை வைத்துள்ளோம். காரணம், தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
உணவு தயாரிக்க சுத்தமான நீர் பயன்படுத்தப்படுகிறதா? குப்பைத் தொட்டி வசதி இருக்கிறதா? போன்ற கேள்விகள் எல்லாம் இருக்கும். நீங்கள் அதற்கு அளிக்கும் பதில்களைப் பொறுத்து அந்தக் கடையின் தரம் மதிப்பிடப்படும். இதன் மூலம் அந்த உணவகங்களும் தங்களின் நிலையை மாற்றிக்கொள்ள முடியும். சாப்பிடுபவர்களுக்கும் தரம் குறித்த திருப்தி இருக்கும்” என தரம் குறித்த சந்தேகங்களைப் போக்குகிறார் கார்த்திக்.
அடுத்த கட்ட திட்டம்
சென்னை நகரத்திற்கு பயன்படும் வகையில் சிறந்த செயலி தயாரிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என ‘ஆப்ஸ் பார் சென்னை’ போட்டியில் அறிவிக்கப்பட்டது. எங்களின் செயலி ‘பீட்டா’ (ட்ரையல்) வெர்ஷனாக இருந்தாலும் நாங்களும் அதில் கலந்துகொண்டோம். எங்கள் உழைப்பிற்கு முதல் பரிசு கிடைத்தது. இப்போது எங்களின் செயலியை நீங்கள் ப்ளேஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் மேலும் சில வசதிகளை சேர்க்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறோம். இது ஆன்ட்ராயிட்டுக்கான செயலி. ஐ.ஓ.எஸ்க்கான செயலியை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதுபோக, சாலையோர உணவகங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒரு உணவுத் திருவிழாவையும் நடத்த இருக்கிறோம். பல தரப்பட்ட சாலையோர உணவுவகைகளை நீங்கள் அங்கே ருசி பார்க்கலாம். இன்னும் சில வாரங்களில் எங்கள் செயலிக்கு அதிகமான பயனாளிகள் கிடைத்துவிடுவார்கள். அவர்களின் வரவேற்பைப் பொறுத்து மேலும் சில வசதிகளை சேர்ப்பது குறித்து முடிவெடுக்க உள்ளோம்” என எதிர்காலத் திட்டங்கள் பற்றிய வரைவை முன்வைக்கிறார் கார்த்திக்.
இணையதள முகவரி: FindAKadai