100 நிராகரிப்புகளைத் தாண்டி உலகின் இளம் கோடீஸ்வரர் ஆன 'Canva' மெலினி பெர்கின்ஸ் கதை!
உலகின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக கருதப்படும் இணைய வடிவமைப்பு சேவை நிறுவனமான கேன்வாவை உருவாக்கிய மெலினி பெர்கின்ஸ், முதலீட்டாளர்களின் நிராகரிப்புகளால் துவண்டு போகாமல் துடிப்புடன் முன்னேறிய வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக திகழ்கிறார்.
Melanie Perkins - இவருக்கு 35 வயது தான் ஆகிறது. அவர் துவங்கிய நிறுவனத்திற்கு இன்னமும் 10 வயது கூட ஆகவில்லை. ஆனால், இதற்குள் மெலினி ஃபோர்ப்ஸ் முதல் ஃபார்டியூன் வர்த்தக இதழ்களின் அட்டைப்பட நாயகியாக இடம்பெற்றிருக்கிறார்.
ஃபோர்ப்ஸ் இதழ் அவரை பில்லியன் டாலர் ’ஸ்டார்ட் அப் நிகழ்வின் நாயகி’ என வர்ணித்திருந்தது. ஃபார்டியூன் இதழ், பெண்களால் துவக்கி நடத்தப்படும் உலகின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியவர் எனப் பாராட்டியுள்ளது.
ஃபார்டியூன் இதழ் தகவல்படி, அவரது ஸ்டார்ட் அப் 26 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. ஃபோர்ப்ஸ் நிறுவன கணிப்பின் படி, அவரது ஸ்டார்ட் அப் 40 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஃபோர்ப்ஸ் இதழ் அவரது ஸ்டார்ட் அப் 3.2 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக குறிப்பிட்டிருந்தது. நிறுவனம் இதுவரை 14 சுற்றுகளில் நிதி திரட்டியுள்ளது.
மெலினி மற்றும் அவரது இணை நிறுவனர், அவரின் கணவரது கூட்டு நிகர மதிப்பு மட்டும் 8 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக, மெலினியை ’இளம் கோடிஸ்வரர்’ என வர்ணிக்கலாம்.
இதை எல்லாம் அவர் பூஜ்ஜியத்தில் இருந்து துவக்கி சம்பாதித்திருக்கிறார் என்பது மட்டும் அல்ல, அவரது புதிய நிறுவனத்திற்கு நிதி கேட்டு முதலீட்டாளர்களை அணுகிய போது நூறு முறைக்கு மேல் நிராகரிப்புகளை எதிர்கொண்ட நிலையிலும் மனம் துவண்டுவிடாமல் சாதித்திருக்கிறார்.
Canva பயணம்
மெலினி பெர்கின்ஸின் இந்த ஊக்கம் தரும் வெற்றிக்கதையின் அடிப்படையாக இருப்பது ’கேன்வா’ (Canva) நிறுவனம். கேன்வா நிறுவனத்தையும், அதன் இணைய வடிவமைப்பு சேவைகளையும் பற்றி இன்று அறியாத எவரும் இருக்கமுடியாது.
இணையதளத்தின் வாயிலாக எளிதாக வரைகலை வடிவங்களை உருவாக்கிக் கொள்ள வழி செய்யும் இந்நிறுவனம், இன்று துறை ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்திருக்கிறது.
பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனாளிகளை கவர்ந்த கேன்வா, இப்போது கட்டணம் செலுத்தும் வர்த்தக வாடிக்கையாளர்களை கவர்வதில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக கேன்வா லாபமீட்டும் ஸ்டார்ட் அப்’பாகவும் விளங்குகிறது. மற்ற ஸ்டார்ட் அப்கள் போல வெளிப்புற நிதியை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு அதன் ரொக்க இருப்பும் திருப்திகரமாக இருக்கிறது.
வெற்றிக்கான விதை
எப்படி சாத்தியமானது கேன்வாவின் இந்த அபார வெற்றி?
Canva இணை நிறுவனரான இளம் மெலினி பெர்கின்சின் கனவும், அதை அவர் செயல்படுத்திய விதமும் இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது. டவுன் அண்டர் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச்சேர்ந்தவர் மெலினி. 17 வயதில் அவரது தொழில்முனைவு பயணம் ஆரம்பமானது. அப்போது அவர் 19 வயதான எதிர்கால கணவர் கிளிப் ஆப்ரெக்டை சந்தித்தார். இருவருமாக சேர்ந்து 2013ம் ஆண்டு கேன்வா நிறுவனத்தை துவக்கினர்.
கேன்வா, மெலினி உருவாக்கிய இரண்டாவது நிறுவனம். இதற்கு முன்னாள் அவர் ’பியூஷன் புக்ஸ்’ எனும் நிறுவனத்தை துவக்கியிருந்தார். இணைய வடிவமைப்பை எளிதாக்க வேண்டும் என்பது இரண்டு நிறுவனங்களுக்குமான ஊக்கம். மெலினிக்கு இணைய வடிவமைப்பில் ஆர்வம் இருந்தது, நல்ல திறனும் இருந்தது. இதன் பயனாக கல்லூரிகளில் சக மாணவர்களுக்கு இணைய வடிவமைப்பில் உதவி செய்பவராக இருந்திருக்கிறார்.
இணைய வடிவமைப்புகளை உருவாக்க உதவும் தருணங்களில் தான், அப்போதிருந்த மென்பொருள் சாதனங்கள் பயன்படுத்த எளிதாக இல்லாததை உணர்ந்தார். சமூக ஊடகங்கள் வாயிலாக எளிதாக கருத்துக்களை உருவாக்குவது சாத்தியமாகும் போது, வடிவமைப்பையும், வரைகலைகளையும் அதே எளிமையுடன் உருவாக்க முடியாத போதாமையை உணர்ந்தார்.
முதல் நிறுவனம்
சந்தையில் இருந்த மைக்ரோசாப்ட் மென்பொருள்களும், அடோபின் சாதனங்களும் சிக்கலானதாகவும், செலவு மிக்கதாகவும் இருந்ததால், இதற்கு மாற்றாக எளிதான ஒரு தீர்வை அளிக்க விரும்பினார். இந்த எண்ணம் தான் கேன்வாவுக்கான மூல விதை.
ஆனால், உடனடியாக அவர் நிறுவனத்தை துவக்கிவிடவில்லை. நடுத்தரக் குடும்ப பின்னணியைச்சேர்ந்த அவரிடம் புதிய நிறுவனத்தை துவக்க போதுமான நிதி வசதி இருக்கவில்லை. எனவே, முதல் கட்டமாக தனது எண்ணத்தை செயல்படுத்தி பார்க்கும் வகையில் பள்ளிகளுக்கான ஆண்டு புத்தகத்தை உருவாக்கித்தரும் சேவையை வழங்கும் பியூஷன் புகஸ் நிறுவனத்தை 2011ம் ஆண்டு துவக்கினார்.
இந்நிறுவனம் வெற்றிகரமாகவே அமைந்தது. ஒரு கட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதன் சேவையை பயன்படுத்தின. ஆனால், இதற்கு மேல் இந்தப் பிரிவில் வளர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார். முழுவீச்சிலான இணைய வடிவமைப்பு நிறுவனத்தை துவக்கி நடத்துவதே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நினைத்தார்.
’பெரிதினும் பெரிது கேள்’ என்பது போல, துவக்கத்தில் இருந்தே உலகின் மதிப்பு மிக்க நிறுவனத்தை உண்டாக்க வேண்டும் எனும் இலக்கை மெலினி கொண்டிருந்ததையும் இங்கு நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
மெலினியும், அவரது காதலரும் துவக்க நினைத்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்குவது என்றால், அதற்கான நிதி தேவைப்பட்டது. மெலினி சற்றும் தயங்காமல் ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்று தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
நிராகரிப்பு அலை
சான் பிரான்சிஸ்கோவில் சகோதரர் அறையில் மாதக்கணக்கில் தங்கி வென்ச்சர் முதலீட்டாளர்களை இடைவிடாமல் சந்தித்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வரிசையாக நூறுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து விதவிதமான நிராகரிப்புகளை மட்டுமே பதிலாக பெற்றார்.
நிறுவனர்கள் காதலர்களாக இருந்தது, ஆஸ்திரேலியாவில் நிறுவனம் அமைந்திருந்தது என பல காரணங்களினால் முதலீட்டாளர்கள் பாராமுகம் காட்டினர். நிறுவனர்களுக்கு தொழில்நுட்ப பின்புலம் இல்லாததும் பாதகமான அம்சமாக அமைந்தது.
எந்த ஒரு இளம் நிறுவனரும் இத்தகைய தொடர் நிராகரிப்புகளால் துவண்டு போவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால், மெலினி விடமால் முயற்சித்துக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவில் நிதி திரட்டுவது கடினம் என்பதை உணர்தவருக்கு, முற்றிலும் எதிர்பாராத திசையில் இருந்து உதவி கிடைத்தது. அவர்கள் மாற்றி யோசித்ததும் இதற்கான காரணமாக அமைந்தது.
சாகச விளையாட்டு
மெலினியும், அவரது காதலரும், ஆஸ்திரேலியா அருகே ஓரிடத்தில் பல முதலீட்டாளர்கள் கூடுவதை தெரிந்து கொண்டனர். அந்த குழுவை சந்தித்து நிதி கேட்க தீர்மானித்தனர். ஆனால், அக்குழுவில் இருந்தவர்கள் அனைவரும் கைட்சர்பிங் எனச் சொல்லப்படும் தண்ணீர் சாகச விளையாட்டு பிரியர்களாக இருந்ததை அறிந்தனர்.
உடனே சாகச விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டு, சாகச விளையாட்டு பிரியர்களாக சென்று அக்குழுவினரை சந்தித்தனர். இந்தக் குழுவின் மூலம் ரிக் பேக்கர் என்பவரை சந்தித்தனர். சிட்னியைச் சார்ந்த வென்ச்சர் முதலீடு நிறுவனத்தை துவக்க இருந்த பேக்கர், இந்த இளம் ஜோடியின் ஐடியா மற்றும் முயற்சியால் கவரப்பட்டு நிதி அளிக்க முன்வந்தார்.
கேன்வாஸ் (Canvas) செப் எனும் பெயரில் வரைகலைகளை எளிதாக உருவாக்குவதற்கான சேவை எனும் எண்ணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், நிறுவன பெயரில் மட்டும் சிறிய மாற்றத்தை பரிந்துரைத்தார். எஸ் (S) எனும் இறுதி எழுத்தை கைவிட்டு ’Canva’ என வைக்குமாறு கூறினார். தொழில்நுட்பம் தெரிந்து ஒருவரை இணை நிறுவனராக சேர்க்குமாறும் கூறினார்.
திருப்பு முனை
இப்படி தான் கேன்வா-வின் வெற்றிக்கதை ஆரம்பமானது. நிறுவனத்திற்கு வெற்றிகரமான சேவை இருக்க வேண்டும் என முதலீட்டாளர் வலியுறுத்தியதால், மெலினி ஒராண்டு உழைத்து கேன்வாவுக்கான அடிப்படை சேவையை தயார் செய்து கேன்வா நிறுவனத்தை துவக்கினார்.
பலவிதமான வரைகலை வடிவங்களை எளிதாக உருவாக்கும் வகையில் கேன்வா அமைந்திருந்தது. சிறிய லோகோ துவங்கி செரிவான தகவல் வரைகலை வரை கேன்வாவில் உருவாக்க முடிந்தது. இதற்காக பயனாளிகள் புதிதாக எந்த மென்பொருளையும் கற்றுக்கொள்ள தேவை இருக்கவில்லை.
கேன்வா அறிமுகமான காலமும் கச்சிதமாக இருந்தது. 2010-களுக்கு பிறகு சமூக ஊடக பரப்பில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவித சேவைகள் பிரபலமாகி இருந்தன. இந்த தளங்களில் பயனாளிகள் கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்ள எளிதான வடிவமைப்புகள் தேவைப்பட்டன.
இத்தகைய காட்சிரீதியான ஆக்கங்களை கேன்வாவில் எளிதாக உருவாக்க முடிந்தது. ஃபேஸ்புக் விளம்பரங்களையும் சுபலமாக வடிவமைக்க முடிந்தது. இதுவே கேன்வாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
விரிவாக்கம்
கேன்வானின் ஆரம்ப வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் மெலினி தொடர்ந்து மேம்பட்ட அம்சங்களை அறிமுகம் செய்தார். அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியாவில் மட்டுல் கவனம் செலுத்தாமல் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்தார். அதற்கேற்ப ஊழியர்கள் எண்ணிக்கையையும் உயர்த்தினார்.
கேன்வா தொடர்ந்து வளர்ச்சி பெற்றது. ஆரம்ப கட்டத்தில் தனிநபர் பயனாளிகள் மற்றும் சிறு நிறுவனங்கள் கேன்வாவின் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
அடிப்படை சேவை இலவசமானது, கூடுதல் அம்சங்களுக்கு கட்டணச்சேவை எனும் வர்த்தக மாதிரியை கேன்வா பின்பற்றியது. அதன் வளர்ச்சி முதலீட்டாளர்களையும் கவர்ந்தது. கேன்வாவின் வெற்றிக்கதை வர்த்தக இதழ்களையும் கவர்ந்தது.
இதனிடையே மெலினி, மேலும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு வரைகலை சேவைகளை மேம்படுத்தினார். மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் நிறுவன மென்பொருள்களுடன் போட்டியிடக்கூடிய அம்சங்களை வழங்கினார். சிறு நிறுவனங்கள் மட்டும் அல்லாது வர்த்தக நிறுவனங்களை கவரும் வகையில் செயல்பட்டார். கட்டண வாடிக்கையாளர்களை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டார்.
கொடைவள்ளல்கள்
ஆரம்ப நிராகரிப்புகளை மீறி, கேன்வா தொடர்ந்து முதலீட்டை ஈர்த்து, தனது சந்தை மதிப்பை உயர்த்திக்கொண்டாலும், மெலினியும், அவரது கணவரும், ஆடம்பரத்தை நாடாமல் சிக்கனமான வாழ்வியலையே கடைப்பிடித்து வருகின்றனர். நிறுவன செயல்பாடுகளிலும் இது பிரதிபலிக்கிறது. நிறுவனம் லாபம் ஈட்ட இதுவும் ஒரு காரணம். அது மட்டும் அல்லாமல்,
மெலினி தம்பதி தனிப்பட்ட சொத்து மதிப்பாக 8 பில்லியன் டாலருக்கு மேல் பெற்றிருந்தாலும், அதில் 30 சதவீதத்தை கேன்வா அறக்கட்டளை மூலம் நன்கொடையாக அளிக்க உறுதி கொண்டுள்ளனர்.
கேன்வா கடந்த ஆண்டு வீடியோ திருத்த சேவையையும் அறிமுகம் செய்தது. தற்போது கூகுள் டாக்சிற்கு இணையாக கேன்வா டாக்சை அறிமுகம் செய்துள்ளது. வர்த்தக நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சேவையாக மாற வேண்டும் என கேன்வா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இது சவாலானது என்றாலும் மெலினியும் குழுவினரும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
Edited by Induja Raghunathan