மரண தண்டனை பெற்ற இந்தியரின் உயிரை 1 கோடி கொடுத்து காப்பாற்றிய பிரபல தொழிலதிபர்!
பிரபல தொழிலதிபர் யூசுப் அலிக்கு குவியும் பாராட்டு!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவர், லுலு குழுமத் தலைவர் யூசுப் அலியால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ள சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சின் சர்வதேச விமான நிலையம் சில தினங்கள் முன் உணர்ச்சி மிகுந்த காட்சிகளால் நிரம்பியிருந்தது. பல வருடங்கள் கழித்து வரும் ஒருவரை வரவேற்க அங்கு கூடியிருந்தவர்களின் கண்களில் அத்தனை கண்ணீர். அந்த கண்ணீருக்கு காரணமானவர் கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன்.
சில ஆண்டுகள் முன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அபுதாபியில் கிருஷ்ணன் ஒட்டிச் சென்ற கார் விபத்து ஏற்பட்டதில் ஒரு சூடான் சிறுவன் இறந்தான். இது தொடர்பான வழக்கில் 2012 செப்டம்பரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொச்சி ஏர்போர்ட்டில் குடும்பத்துடன் இணைந்த பெக்ஸ் கிருஷ்ணன்
விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சி, நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி கிருஷ்ணனுக்கு மரண தண்டனை விதித்து ஐக்கிய அரபு எமிரேட் உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தீர்ப்பு கேரளாவில் இருந்து அவர்களின் குடும்பத்தையும் உலுக்கியது.
கிருஷ்ணனின் குடும்பத்தினர் அவரை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியை தழுவியது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் சூடான் நாட்டுக்கே திரும்பினர். இது போன்ற விஷயங்கள் கிருஷ்ணனுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான், எதுவும் செய்ய முடியாத நிலையில் கிருஷ்ணனின் குடும்பத்தினர் பிரபல தொழிலதிபர் லூலூ குழுமத் தலைவர் யூசுப் அலியிடம் உதவிகோரினர். குடும்பத்தின் நிலைமையை அறிந்து அவரும் உதவ முன்வந்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட சூடான் குடும்பத்தைக் கண்டுபிடிக்க தனது குழுவுக்கு அறிவுறுத்தினார். ஏனென்றால், கிருஷ்ணனின் விடுதலைக்கான ஒரே வழி அவரால் பாதிக்கப்பட்ட சூடான் குடும்பத்தினர் அவருக்கு மன்னிப்பு அளித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்தால் மட்டுமே விடுதலை சாத்தியமாகும்.
பல வருட முயற்சிகளுக்குப் பிறகு இறந்த சூடான் சிறுவனின் குடும்பம் அபுதாபிக்குத் திரும்பி கிருஷ்ணனின் விடுதலைக்கான விவாதங்களை நடத்த ஒப்புக்கொண்டது. லூலூ குழுமத்தின் யூசுப் அலி முயற்சியால் இறுதியாக பாதிக்கப்பட்ட சூடான் குடும்பத்தினர், கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டனர்.
இதற்கு பதிலாக, நஷ்ட ஈடாக சுமார் ரூ.1கோடி அந்தக் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டது. 2021 ஜனவரியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு யூசுப் அலி, கிருஷண்னில் சார்பாக இந்த முழுத் தொகையையும் செலுத்தினார்.
இதையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின் கிருஷ்ணன் சுதந்திர காற்றை சுவாசித்தார். கடந்த வாரம் சிறையிலிருந்து வெளியேறி கேரளாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

கிட்டத்தட்ட 9 வருடங்கள் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அவரை வரவேற்க தான் சில தினங்கள் முன் கொச்சின் விமான நிலையத்தில் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.
அதன்படி, மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ள கிருஷ்ணன்,
“எனக்கு ஒரு புதிய வாழ்க்கை வழங்கப்பட்டதாக உணர்கிறேன். எனது விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் யூசுப் அலி தான் செய்தார். இந்தத் தருணத்தில் அவரை சந்தித்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்," என்றுள்ளார்.
யூசுப் அலி இதுபோன்ற சூழ்நிலைகளை சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவுவது இது முதல்முறை அல்ல. பலமுறை எமிரேட்ஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் மறுவாழ்வு பெற உதவி புரிந்துள்ளார்.
தகவல் உதவி: தி நியூஸ் மினிட் | தமிழில்: மலையரசு