Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!
இன்றைய பட்ஜெட் தாக்கலில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி, இனி, ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்துள்ள 8வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பு, புதிய வரிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அதோடு, ரயில்வே துறை, தொழில்நுட்பம், கட்டுமானம், ரியல் எஸ்டேட், தொழில்துறைகளும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்த பட்ஜெட்டுக்காக காத்திருந்தன.
அதேபோல், வரி செலுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையிலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதிய வருமான வரி சட்டம்
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது, ‘இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக’ தனது பட்ஜெட் தாக்கமுன்னதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வழக்கம் போல், தனது ஸ்டைலில், “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி...” என என்கிற திருவள்ளுவரின் திருக்குறளை வருமான வரி பிரிவுக்கான அறிவிப்பை தொடங்குவதற்கு முன்பாக மேற்கோள் காட்டினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பின்னர், வருமான வரிச்சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது மற்றும் வருமான வரிப்பிடித்தம் கடினமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட் உரையில் இந்த இரண்டும் எளிமையாக்கப்படும் என உறுதியளித்துள்ளார் அவர்.
“வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. அந்தவகையில், அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரி பிடித்தம் இல்லை
மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்துக்கு வழங்கப்படும் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பு 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வாடகைக்கான TDS உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை
புதிய வருமான முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பதை இப்போது ரூ.12 லட்சம் வருமானம் வரை வரி இல்லை... என மாற்றி அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த அதிரடி அறிவிப்பு நடுத்தர வர்க்க சம்பளதார்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ரூ.12 லட்சம் வரை வருமானத்துக்கு வரி கிடையாது என்பதுடன், கூடுதலாக ரூ.75,000 கழிவு கிடைக்கும் என்பதால், ஆக மொத்தமாக ரூ.12.75 லட்சத்துக்கு வருமான வரி இனி கிடையாது.

புதிய வருமான வரிச் சட்டம்
63 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்தை மாற்றி, புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
“வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. அந்தவகையில், அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
இதுவரை 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டத்தைக் கடைபிடித்து வருகிறோம். அந்த வருமான வரிச் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள், பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் உள்ளன. அவை தேவையற்றவை என்பதால் இம்முறை விலக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம், சட்டத்தை எளிமையாக்குவதும், தெளிவாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்து, அதன் அளவை ஏறக்குறைய 60% வரை குறைப்பதே ஆகும்.
இதற்கு முன்பு 2010, 2017, 2024-ம் ஆண்டுகளில் புதிய வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றும், எதுவும் பலனளிக்கவில்லை. இந்த முறையும் இந்த புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது வழக்கம் போல் தள்ளிப் போகுமா என மக்கள் இருந்த நிலையில், அடுத்த வாரம் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய வருமான வரி சட்டம் மக்கள் கருத்திற்கு பிறகே, நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.