‘நடுத்தர மக்களின் தேவைக்குத் தீர்வு அளிக்கும் ஸ்டார்ட்-அப்’களில் மட்டுமே முதலீடு செய்கிறோம்’ - Arkam Ventures பாலா ஸ்ரீனிவாசா!
இந்தியாவின் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரு நகரங்களை மட்டுமே நம்பி இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கான பெரிய வாய்ப்புகள் நடுத்தர இந்தியாவில் இருக்கிறது என்னும் முக்கியத் தகவலை ’Arkam Ventures' நிறுவனத்தின் பாலா ஸ்ரீனிவாசா கூறினார். பெங்களூருவில் நடந்த டெக்ஸ்பார்க் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் கருத்தரங்கில் பாலா இவ்வாறு பேசினார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக 'பாரத் ஸ்பார்க்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடல் இருந்தது. அவர் கூறியது, வந்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட் அப்களுக்கு புதிய தகவலை அளித்திருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லலாம்.
இந்தியாவில் ரூ.3 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50 கோடி நபர்கள் என்கிறது தரவுகள். இவர்கள்தான் இந்தியாவின் மொத்த நுகர்வில் 50 சதவீத பங்கு கொண்டவர்கள்.
ஆனால், இவர்கள் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பான்மையான ஸ்டார்ட் அப்’கள் 8 மெட்ரோ நகரங்களில் இருப்பவர்கள் மற்றும் 44 அடுத்த கட்ட நகரங்களில் இருப்பவர்களை நோக்கியே இருக்கிறது. ஆனால், 3 லட்சம் ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் சம்பளம் / வருமானம் ஈட்டுபவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள், என பாலா தெரிவித்தார்.

”தற்போது ஸ்மார்ட்போன் வளர்ந்திருக்கிறது அனைத்து இடங்களிலும் டேட்டா இருக்கிறது என்பதால் நடுத்தர இந்திய மக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்கள் அடுத்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான வாய்ப்பை பெருவார்கள். இந்தியாவின் தொழிலுக்கான வாய்ப்பு இந்த பிரிவில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த பிரிவில் செயல்படும் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறோம். இதுவரை 18க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம்,” என்றார் Arkam Ventures நிறுவனத்தின் பாலா ஸ்ரீனிவாசா.
பார்ப்பதற்கு பெரிய வாய்ப்புகள் இருப்பது போல தோன்றும். ஆனால், அந்த வாய்ப்பை அடைவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பதில்லை, தவிர இவர்களிடம் அதிக லாபம் பார்க்க முடியாது, மூன்றாவது உங்களின் சேவையை/பொருளை இவர்களிடம் கொண்டு செல்வதும் பெரிய சவால்.
ஆனால், இதையெல்லாம் உடைக்க முடியும் என்றால் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கிறது. நாங்கள் அதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம். நாங்கள் முதலீடு செய்த நான்கு நிறுவனங்களை பேச அழைக்கிறேன். அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
ஸ்மார்ட்ஸ்டாப்
முதல் நிறுவனமாக ஸ்மார்ட்ஸ்டாப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பேசச் தொடங்கினார். இந்தியாவில் புளுகாலர் பணியாளர்களுக்கான தேவை உயர்ந்துவருகிறது. ஆனால் சரியான நபர்களை கண்டறிய முடியவில்லை. பல ஏஜெண்ட்களை தாண்டியே பணியாளர்களை கண்டறிய வேண்டி இருக்கிறது. இது வேலை தேடுபவர்களுக்கு மட்டுமல்ல, வேலை கொடுக்க வேண்டிய நிறுவனங்களுக்கும் சிக்கல் உருவாகிறது. ஸ்மார்ட் ஸ்டாப் இந்த சிக்கலை போக்குகிறது.
"இது ஒரு சந்தையா என நினைக்க தோன்றும், ஆனால் மிகப்பெரிய சந்தை இது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்ற வேலைக்காக 500 கிலோமீட்டர் வரைக்கும் கூட பயணம் செய்கிறார்கள். தவிர இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அவர்களுடன் எங்களால் தொடர்புகொள்ள முடிகிறது. இது மிகப்பெரிய பிரிவாக வளரும் வாய்ப்பு இருக்கிறது," என ஸ்மார்ட் ஸ்டாப் நிறுவனர் கூறினார்.

பாரத் அக்ரி (Bharat Agri)
இது ஒரு அக்ரிடெக் ஸ்டார்ட் அப். அதன் இணை நிறுவனர சித்தார்த் தியலானி பேசினார். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பத்தில் இருந்துவந்தவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு தற்போதைய விவசாயம் என்பதும் முழுமையாக அறியாத ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த விஷயத்தையே செய்துவருகிறார்கள். இதனால் விவசாய உற்பத்தி சர்வதேச அளவுடன் ஒப்பிடும்போது 5-ல் ஒரு பங்கு மட்டுமே இந்திய விவசாயிகளால் சாத்தியமாகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதுதான் எங்களுடைய ஸ்டார்ட் அப். விவசாயக் குடும்பங்களில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. குடும்பத்தில் படிக்கத்தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
இதனால் விவசாயம் சார்ந்த பல தகவல்களை கொடுக்கிறோம். விவசாயத்துக்கு காலாண்டர் அமைத்து கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் எங்களுடைய செயலில் விவசாயத்துக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்க முடியும். இந்தியாவில் சிறு பகுதிக்கும் கூட இந்த பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவு நேரம் மீதமாகிறது.
”நகரப்புர இந்தியாவை விட கிராமப்புர இந்தியாவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரு விஷயங்கள் முக்கியமானவை. முதலாவது அவர்களை சென்றடைய வேண்டும். இரண்டாவது அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். இது இரண்டும் சாத்தியமானால் பெரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்,” என்றார் சித்தார்த்.
கர்கானா.ஏஐ (Karkana.ai)
இந்த நிறுவனத்தின் நிறுவனர் சோனம் மோத்வானி, நிறுவனம் எப்படி உருவானது என்பது குறித்து கூறினார். ஐஐடி மும்பையில் படித்தேன். மிகப்பெரிய எப்.எம்.சி.ஜி நிறுவனமான புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் இணைந்தேன். அங்கு எனக்கு கொடுக்கப்பட்ட பணி, சரியான சிறிய உற்பத்தி நிறுவனத்தை கண்டறிய வேண்டும் என்பதுதான். ஆனால், அங்குதான் மிகப்பெரிய சிக்கல் உருவானது. நிறுவனத்துக்கு ஏற்ப சரியான உற்பத்தி நிறுவனத்தை கண்டறிய முடியவில்லை. அப்போதுதான் இப்படி ஒரு ஐடியா உருவாகி இருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல் உற்பத்தி நிறுவனங்கள் (original equipment manufacturer) உள்ளனர். ஆனால், இவர்களுக்கு ஏற்ற சரியான சிறிய நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
அதேபோல, சிறிய நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுகிறது. இந்தியாவில் 2 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கிறது. உதாணத்துக்கு மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டிவந்தது. ஆனால், கோவிட் காரணமாக மொத்த உற்பத்தித் திறனில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய சூழல் உருவானது. ஏற்கெனவே இருக்கும் சிறிய வாடிக்கையாளர்களால் போதுமான ஆர்டர்கள் கொடுக்க முடியவில்லை. இதனால் பெரிய நஷ்டம் அடைந்தது. இதுபோல பல சிறிய நிறுவனங்கள் உள்ளன.
இவர்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் கர்கானா என பேசினார். மேலும் 90க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் (original equipment manufacturer) மற்றும் 400 சிறிய (எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். எங்களுடன் இணைந்த பிறகு சிறு நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் வளர்ந்திருப்பதாகக் கூறினார்.

கிரெடிட் பீ (Creditbee)
கிரெடிட் பீ நிறுவனத்தின் மதுசூதனன் பேசினார். இவ்வளவு பெரிய ஹாலில் நாம் இருக்கிறோம். நமக்கு அடிக்கடி கடன் வேண்டுமா எனக் கேட்டு போன் வருகிறது. வங்கி அமைப்பில் இருக்கும் சிலரை மட்டுமே அனைத்து வங்கிகளும் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இந்தப் பிரிவில் இல்லாத பலர் இருக்கிறார்கள். புதிதாக கடன் வாங்குபவர்கள், சிறிய வர்த்தகர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள் என இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் கிராமங்களில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பது கூட நம்மில் பலருக்கும் தெரியாது. நாம் லட்சங்களில் கடன் வேண்டும் என நினைப்போம். ஆனால், கிராமங்களில் இருப்பவர்களுக்கு 25000 ரூபாய் முதல் 50000 வரை மட்டுமே கடன் தேவை. இந்த தொகையை எந்த வங்கியும் தராது. இந்த இடத்தில்தான் நாங்கள் டிஜிட்டல் மூலம் கடன் கொடுக்கிறோம்.
”எங்களுடைய சராசரி கடன் வழங்கும் அளவே ரூ.30000 தான். இந்தியாவில் 18000க்கும் மேற்பட்ட பின்கோடுகளுக்கு நாங்கள் கடன் கொடுத்திருக்கிறோம். இதுவரை 70 லட்சம் நபர்களுக்கு கடன் கொடுத்திருக்கிறோம். தற்போது பிஸினஸ் கடன்களும் கொடுக்க தொடங்கி இருக்கிறோம்,” எனப் பேசினார்.
இறுதியாக மீண்டும் பேசினார் அர்கெம் வென்ச்சர்ஸின் பாலா ஸ்ரீனிவாசா. நடுத்தர இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது. இந்தியாவின் ஜிடிபி வேகமாக வளரும்போது நடுத்தர மக்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற சேவைகள் உருவாக்குவதில் ஸ்டார்ட் அப்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பாட்டம் ஆப் தி பிரமிட் மக்களையும் கவனிக்க வேண்டும் என்பதே பாலா சொல்லும் செய்தி. ஸ்டார்ட் அப்கள் சிந்திக்க வேண்டும்.