ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்து ஆதரிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை Anicut Capital!
சென்னையைச் சேர்ந்த அனிகட் கேபிடல், நிறுவனம் தன் வசம் உள்ள முதலீடு நிதியை (AUM ) தற்போதுள்ள ரூ.4,500 கோடியில் இருந்து, 2025 நிதியாண்டில் ரூ.7,500 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
'Anicut' என்றால் தமிழில் அணை என்று பொருள். அதாவது, தண்ணீரை தேக்கி வைக்கும் இடம் ஆகும். இதே போலவே, சென்னையைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ’அனிகட் கேபிடல்’ (
) ஸ்டார்ட்-அப்’களின் நிதி ஆதாரத்தை விரிவாக்கவும், வாய்ப்புகள் வரும் போது முதலீடுகள் செய்யவும் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் தன் வசம் உள்ள முதலீடு நிதியை (AUM) தற்போதுள்ள ரூ.4,500 கோடியில் இருந்து, 2025 நிதியாண்டில் ரூ.7,500 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்திய ஸ்டார்ட் அப் துறை நிதி வறட்சியை எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அனிகட் கேட்பிடல் இந்த நம்பிக்கை தரும் கணிப்பை வெளியிட்டுள்ளது. யுவர்ஸ்டோரி ஆய்வின் படி, 2023ல் இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான நிதி, முந்தைய ஆண்டைவிட 53 சதவீதம் குறைந்துள்ளது.
இந்நிலையில், அனிகட் கேபிடல், ஸ்டார்ட் அப்களில் போதுமான வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகவும், பல்வேறு பிரிவுகளில் இளம் ஸ்டார்ட் அப்களை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிறுவனம், தற்போது சாஸ், டி2சி, லாஜிஸ்டிக்ஸ், நிதி நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடு செய்து வருகிறது.
அனிகட் கேபிடல் முதன்மை நிதி அதிகாரியான வீனு மிட்டல் யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில்,
“தனியார் கடன் பிரிவில் பொதுவாக ஆண்டுக்கு ஏழு அல்லது எட்டு நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம். ஸ்டார்ட் அப் பிரிவில், ஆண்டு அடிப்படையில் 15 முதல் 20 முதலீடுகளை மேற்கொள்வதை தொடர்வோம்,” என்று தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், (SMBs), விதை முதலீடு, ஆரம்ப நிலை முதலீடு உள்ளிட்ட பிரிவுகளில் நிறுவனம் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகிறது. பிந்தைய நிலை முதலீடு வாய்ப்பும் இருப்பதாகக் கருதுகிறது.
அச்வின் சத்தா மற்றும் பாலமுருகனால் துவக்கப்பட்ட அனிகட் கேபிடல், தனியார் கடன் மற்றும் வென்சர் முதலீடு இரண்டையும் வழங்கும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. 2016ம் ஆண்டு முதல் தனியார் கிரெடிட் நிதியை அறிமுகம் செய்த அனிகட் கேபிட்டல், எஸ்.எம்.பி மற்றும் ஸ்டார்ட் அப்களை ஆதரிக்க பல்வேறு நிதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம் இதுவரை 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஏரோஸ்பேஸ் நிறுவனம் அக்னிகுல், வாவ்மோமோ, சுகர் காஸ்மெட்டிக்ஸ், லெண்டிங்கார்ட், மில்கி மிஸ்ட், ப்ளு டோகாய் காபி ரோஸ்டர்ஸ், ஆஸ்ட்ரோகேட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும்.
மாறும் சூழல்
2021 மற்றும் 2022 துவக்கத்தில் இருந்த நிலை மாறி இப்போது, நிதி பெறுவது சிக்கலாகி இருக்கிறது. நிதி அளித்தலில் கவனமான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. நிறுவனங்களை மதிப்பீடு செய்வதில் தேவையான கரெக்ஷன் இது என்கிறார் வீனு மிட்டல்.
மூலதனத்திற்கு பஞ்சம் இல்லை என்றும், முதலீட்டாளர்கள் இப்போது வர்த்தகத்தின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதாகவும், நீடித்த, லாபம் சார்ந்த நிறுவனங்களை உருவாக்குவது நோக்கமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இதன் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்படலாம் அல்லது மற்றவற்றுடன் இணையும் நிலை உருவாகலாம் என்கிறார். அடுத்த 6 முதல் 9 மாதங்கள் இந்த போக்கு தொடரும், என்கிறார்.
முக்கியத் துறைகள்
அனிகட் கேபிடக் எப்போதுமே மதிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களில், வலுவான தலைமையை கொண்ட, இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் வளர்ச்சி வாய்ப்பு கொண்ட நிறுவனங்களில், கவனம் செலுத்தி வருகிறது என்று மிட்டல் கூறுகிறார்.
தனியார் கடன் துறையில் கையகப்படுத்தல், பைபேக் திட்டம், ஸ்டார்ட் அப்களுக்கான வளர்ச்சி மூலதனத்தை நிறுவனம் வழங்கி வருவதாக மிட்டல் கூறுகிறார். இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள வர்த்தகங்களில் தனியார் கடன் கவனம் செலுத்துவதாகவும், மெட்ரோ நகரங்களில் இயங்கும் நிறுவனங்களில் கவனம் செலுத்துவதில்லை என்றும் கூறுகிறார்.
உதாரணமாக, ஈரோட்டின் மில்கிமிஸ்ட், கோவையின் பிரிகால், கொச்சியின் எஸ்.எப்.ஓ டெக்னாலஜிஸ் ஆகியவை அனிகட் ஆதரவு பெற்ற மெட்ரோ அல்லாத நகர நிறுவனங்கள்.
தனியார் கடன் அளிப்பதொடு, சமபங்கு சார்ந்த முடிவுகளையும் மேற்கொள்வதாகக் கூறுகிறார்.
வென்சர் முதலீட்டில், விதை நிதி மற்றும் ஏ-சுற்று நிதியை வழங்கி வருகிறது. இவை பெரும்பாலும் மெட்ரோக்களில் அமைந்துள்ள நிறுவனங்கள். உதாரணம்: ஆயுர்வேதா எக்ஸ்பீரியன்ஸ், கிவா, மெக்கபைன், நீமன்ஸ்.
எல்லா துறைகளிலும் முதலீடு செய்ய தயாராக இருந்தாலும், மின்வாகனம், நுகர்வோர் நுட்பம், ஏஐ, நிதி நுட்பம், ஆழ்நுட்பம், சாஸ் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
நிதி உத்தி
2016 ஆம் ஆண்டு முதல் தனியார் நிதியை துவக்கிய அனிகட் கேபிடல் ரூ.400 கோடி திரட்டியது. 2019ல் அதன் இரண்டாவது நிதி ரூ.850 கோடி திரட்டியது. இவை முழுவதும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் தனது மூன்றாவது நிதியை ரூ.1300 முதல் ரூ.1350 கோடியில் நிறைவு செய்ய உள்ளது. ஏற்கனவே 50 சதவீத மூலதனம் திரட்டியுள்ளது. இதை முழுவதும் வழங்கும் செயலிலும் உள்ளது. வென்சர் கேபிடல் பிரிவில், அனிகட் கேப்பிடல் ரூ.250 கோடி விதை நிதி கொண்டு, 60 ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளது.
ஏ மற்றும் பி சுற்றுகளில் முதலீடு செய்யும், ரூ.500 கோடி வளர்ச்சி சமபங்கு நிதியும் கொண்டுள்ளது.
இறுதியாக பிந்தைய நிலை, ஐபிஓவுக்கு முந்தைய நிதியையும் உருவாக்கி வருகிறது. லாபம் ஈட்டும் அல்லது லாபம் ஈட்டும் நிலையில் உள்ள 5 அல்லது 6 நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக மிட்டல் கூறுகிறார்.
பல்வேறு நிதிகளுக்கு பல்வேறு முதலீட்டாளர்களிடம் ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார். எச்டிஎப்சி, சிட்பி பண்ட் ஆப் பண்ட்ஸ், முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை ஆதரவு அளிக்கின்றன.
அனிகட் கேபிடலின் தனியார் நிதி 17 சதவீத பலனை அளித்துள்ள நிலையில், வென்சர் கேபிடல் பிரிவு 1.9 அளவில் முதலீட்டின் மீது பல மடங்கு பலன் அளித்துள்ளதாக மிட்டல் கூறுகிறார்.
அனிகட் கேபிடல் குழு முதலீட்டாளர்களையும், வளர்ச்சி வாய்ப்புள்ள ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்களையும் சந்திப்பதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வது மற்றும் நிதிக்கான ஆதரவு திரட்டுவதில் கவனம் செலுத்தும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்லும் நிலையில் இருப்பதை நிறுவனம் மனதில் கொண்டு செயல்படுவதாக மிட்டல் கூறுகிறார்.
“மூலதன பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். முதலீட்டாளர்கள் மூலனத்தை முதலில் பாதுகாத்து பின்னர் வளர்ச்சி வாய்ப்பை நாடுகிறோம்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: திம்மையா பூஜாரி | தமிழில்: சைபர் சிம்மன்
ரூ.1.2 லட்சம் கோடி முதலீடுகள்; 2025ல் மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் அதானி குழுமம்!
Edited by Induja Raghunathan