பண்டிகை காலத்தில் 1.1 லட்சம் பருவ கால வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமேசான் இந்தியா!
அமேசான் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் 1,900 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பரபரப்பான பண்டிகை கால விற்பனைக்கு முன்னதாக, மும்பை, தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, சென்னை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களில் 1.10 லட்சம் பருவ கால வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், அதன் பணியாளர்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் 1,900 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2024 செப் 29 ம் தேதி துவங்குகிறது.
ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் விற்பனையும் இதே காலத்தில் நிகழ்கிறது. பண்டிகை கால விற்பனைக்கு, 1.4 மில்லியன் விற்பனையாளர்களுக்கு உதவும் விநியோக மற்றும் பொருட்கள் டெலிவரி வலைப்பின்னல் நாடு முழுவதும் இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.
"பண்டிகை காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வேகமாக சேவை அளிப்பதில் உறுதி கொண்டுள்ளோம். இதற்காக, எங்கள் லாஜிஸ்டிக்ஸ் வசதியை வலுவாக்கி, டெலிவரியை உறுதி செய்ய 1.1 லட்சம் கூடுதல் பணியாளர்களை வேலைக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம்,” என்று அமேசான் இந்தியா செயல்பாடுகள் துணைத்தலைவர் அபினவ் ஷா கூறியுள்ளார்.
"இவர்களில் பலர் பண்டிகை காலம் முடிந்த பிறகும், அமேசானுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும், பெரும்பாலானோர் ஆண்டுதோறும் மீண்டும் வந்து இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.
டெலிவரி பார்ட்னர்களுக்கு ஓய்வு வசதி அளிக்கும் பிராஜெக்ட் அஷ்ரே, டிரக் ஓட்டுனர்கள் ஆரோக்கியத்திற்கான சுஷ்ருதா, பார்ட்னர்கள் குழந்தைகள் கல்விக்கான பிரதிதி உள்ளிட்ட திட்டங்களை அமேசான் இந்தியா கொண்டு வந்துள்ளது.
"எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் எங்கள் பார்ட்னர்கள் நலனை காப்பது எங்கள் கவனம். எங்கள் நாடு தழுவிய வலைப்பின்னல் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சமூக பாதுகாப்பு மற்றும் நிதி நலன் கொண்ட சூழலை உருவாக்குவதில் உறுதி கொண்டுள்ளோம்,” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தீவிரமாக்கி வருகின்றன. ஃபிளிப்கார்ட் நிறுவனம் தன் பங்கிற்கு, ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது மற்றும் 9 நகரங்களில் 11 டெலிவரி மையங்களை அமைக்க உள்ளது.
அதே போல, மீஷோ நிறுவனமும், பருவ கால வேலைவாய்ப்புகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. விற்பனையாளர் மற்றும் லாஜிஸ்டிகஸ் பிரிவுகளில் 8.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Edited by Induja Raghunathan