ஏரோநாட்டிகல் இன்ஜீனியர் டூ சுருள்பாசி வளர்ப்பு: லாபத்துடன் தொழில் புரியும் கரூர் இளைஞர்!
1கிலோ சுருள்பாசியின் ஊட்டச்சத்து, 1000 கிலோ காய்கனிகளுக்கு இணையாகும். தன்னிடம் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தில் சுருள்பாசி வளர்த்து இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளார் ஆகஸ் சதாசிவம்.
இந்தியா மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்து வளரும் நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரச்னை ஊட்டச்சத்துக் குறைபாடு. ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி விரைவில் நோய்வாய்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்க உலக நாடுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கரூரைச் சேர்ந்த இளைஞர் இப்பிரச்னைக்கு ஓர் எளிய தீர்வை கண்டறிந்ததோடு, இதே துறையில் புதிய ஸ்டார்ட்-அப்பையும் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
Prolgae Spirulina supplies pvt limited என்ற பெயரில் 2016ஆம் ஆண்டு புதிய ஸ்டார்ட்அப் ஆக சுருள்பாசி வளர்ப்புத் தொழிலைத் தொடங்கி, 2017ஆம் ஆண்டு ஃபின்லாந்து மற்றும் 2018ம் ஆண்டு ஸ்லோவோக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து, தற்போது ஸ்பைரூலினா என்றழைக்கப்படும் சுருள் பாசி (நீலப் பச்சை பாசி) வளர்ப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆகஸ் சதாசிவம்.
லட்சங்களில் லாபத்தை அள்ளி வழங்கும் இத்தொழில் குறித்து கேட்டபோது அவர் கூறியது, எனது பெற்றோர்கள் விவசாயிகள். எங்களுக்கு 5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. நான் படித்தது ஏரோநாட்டிகல் இன்ஜீனியரிங். ஆனால் விவசாயம் தொடர்பான துறையில் சாதிக்க விரும்பினேன். அப்போதுதான் இந்த சுருள் பாசி வளர்ப்பு குறித்த அறிமுகம் கிடைத்தது.
“இதுகுறித்து நான் ஆய்வு செய்தபோது, மிகுந்த லாபம் அளிக்கும் தொழிலாகவும், அதே நேரத்தில் மக்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்து அளிக்கும் பணியாகவும் இருந்ததால் இத்தொழிலில் முழு ஈடுபாட்டுடன் இறங்கி செயல்படத் தொடங்கினேன்,” என்கிறார்.
சி்ல நாடுகளில் ஆறுகளிலும், குளங்களிலும் இயற்கையாகவே வளரும் இந்த சுருள் பாசி, மிகுந்த ஊட்டச்சத்துடையதாகும். அதிலும் குறிப்பாக இந்தியா, இந்த சுருள்பாசி வளர்வதற்கேற்ற மிகச் சிறப்பான சீதோஷ்ண நிலையுடைய நாடாகும். ஆனால் நம் மக்கள் இந்த ஊட்டச்சத்து மிக்க சுருள்பாசி குறித்த போதிய விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என ஆதங்கப்படுகிறார் ஆகஸ்.
1 கிலோ சுருள்பாசி வழங்கும் ஊட்டச்சத்தானது, 1000 கிலோ காய்கனிகளில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கு இணையானதாகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. நாசா தனது விண்வெளி வீரர்களுக்கு வழங்கும் சூப்பர் உணவாக இந்த சுருள்பாசி விளங்குகிறது. ஓர் மனிதன் தனது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெற நாளொன்றுக்கு சுமார் 5 கிராம் சுருள்பாசி உட்கொண்டால் போதுமானதாகும்.
நாங்கள் இந்த சுருள்பாசியை தினசரி அறுவடை செய்து, சூரிய ஓளியில் காயவைத்து, பவுடராக மாற்றி விற்பனை செய்கிறோம். ஓர் சராசரி மனிதன் நாளொன்றுக்கு வெறும் 5 கிராம் பவுடரை டீ, காபி அல்லது ஏதேனும் ஓர் பழச்சாறில் கலந்து குடித்தால் போதும். அவருக்கு நாளொன்றுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும் என்பது ஆய்வுகளில் மூலம் கண்டறியப்பட்ட உண்மை என்கிறார்.
மேலும், எந்தவொரு உணவுப் பொருளிலும் புரோட்டீனின் சதவீதம் ஐம்பதைத் தாண்டாது. ஆனால் இந்த சுருள்பாசியில் 65 சதவீதம் புரோட்டீன் உள்ளது. மேலும், இதில், 8 மினரல்கள், பாலை போல 5 மடங்கு அதிக கால்சியம், கேரட்டை விட அதிக அளவிலான பீட்டாகெரட்டீன்ஸ் போன்றவை உள்ளது. இவை ஓர் சராசரி மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான தினசரித் தேவையாகும்.
”இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்துவிட்டால், இந்தியா ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாகிவிடும்,” என்கிறார் ஆகஸ்.
மேலும், இதில் ஓர் முக்கியமான மருத்துவக் குணமும் அடங்கியுள்ளது. இந்த சுருள் பாசி, நீலப் பச்சை பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள அந்த கண்ணுக்குத் தெரியாத நீலத்தை அதற்கென்றே உரிய கருவிகளைப் பயன்படுத்தி பிரித்து எடுக்கின்றனர். இது புற்றுநோய்க்கு மிகச் சிறந்த எதிர்ப்புப் பொருளாக பயன்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதன் மருத்துவக் குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து பெருமளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த சுருள்பாசி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது என ஆதங்கப்படும் ஆகஸ் இதுகுறித்து மேலும் கூறியது,
எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் சுமார் 1 ஏக்கரில் மட்டும் இந்த சுருள்பாசி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். 5 தொட்டிகளில் 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் செயற்கை முறையில் சுருள்பாசி வளர்த்து வருகிறேன். இதை தினந்தோறும் கண்காணித்து இதன் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக ஓர் லேப் டெக்னீஷியன் இருக்கிறார். இவர் தவிர 4 பணியாளர்களை நியமித்துள்ளேன். இவர்கள் தினந்தோறும் இதன் வளர்ச்சியை ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் இயற்கையான ஆர்கானிக் உரங்கள் செலுத்தப்பட்டு, பாசி வளர்க்கப்படுகிறது.
இதனை தினசரி அறுவடை செய்யவேண்டும். இன்று ஓர் தொட்டியில் அறுவடை செய்தால் நாளை மற்றொரு தொட்டி என நான்கு நாள்களுக்கு ஓர் தொட்டியில் அறுவடை செய்து, அதனை சூரிய ஓளியில் நன்கு காயவைத்து பின்பு பொடி செய்து பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவோம்.
ஓர் நாளைக்கு ஓர் தொட்டியில் இருந்து மட்டும் சுமார் 15 கிலோ வரை சுருள்பாசி பவுடர் கிடைக்கும். மாதமொன்றுக்கு சுமார் 500 கிலோ வரை கிடைக்கும். 1 கிலோ இன்றைய தேதியில் ரூ. 2500க்கு விற்பனையாகிறது. இதற்கு குறைந்தபட்சமாக நான் பத்து லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன்.
பொதுவாக மிகக் குறைந்த முதலீடு, குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் என சிரமமில்லாத தொழில். அதே நேரத்தில் 1 கிலோ சுருள்பாசி பவுடர் பெற குறைந்தபட்சம் ரூ.600 வரை மட்டுமே செலவாகும். போக்குவரத்து, விற்பனை, விளம்பரம் என எல்லாம் தவிர்த்து பார்த்தாலும் இது மிகுந்த லாபமளிக்கும் தொழிலாகும்.
இதனை கால் கிலோ, அரை கிலோ மற்றும் 1 கிலோ பாக்கெட்களில் பேக் செய்து அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பொதுவாக இந்த சுருள்பாசியில் இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதன் மோசமான வாசனை காரணமாக இந்திய மக்களுக்கு இதன்மேல் அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படவில்லை. ஆனால் வெளிநாட்டினருக்கு இதன் வாசனை பிடிக்கும் என்பதால் அங்கு இது நன்கு விற்பனையாகிறது. மேலும் உடற்பயிற்சிக் கூடங்கள், டயட்டீஷியன்கள், நியூட்ரீஷியன்கள் இதனை தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துறைக்கின்றனர் என்கிறார்.
இந்திய சந்தையை பிடிப்பதற்காக இந்த சுருள்பாசி பவுடர் மற்றும் நூடுல்ஸ்லில் சாக்லேட் வாசனை போன்ற வாசனைப் பொருள்களைச் சேர்த்து, இதனை இந்திய மக்களின் விருப்ப உணவாகவும் மாற்றும் முயற்சியில் ஆகஸ் ஈடுபட்டுள்ளார்.
பொதுவாக இந்தியா மற்றும் தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அதிக உணவு உட்கொள்ளமுடியாதவர்கள் தங்களின் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள இதனை மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நல்ல லாபம் தரும் தொழிலான இதனை நமக்கு இருக்கும் இடத்தைப் பொறுத்து நாமே உருவாக்கலாம். ஏன் சொந்த பயன்பாட்டுக்காக வீட்டின் மாடியில் கூட இதனை வளர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கான நல்ல ஊட்டச்சத்துள்ள உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சைவ உணவுப் பிரியர்களுக்கு இது ஏற்ற உணவு. இதில் ஆர்கானிக் சர்டிபைடு உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் தற்போது பெரும்பாலான மக்கள் சைவ உணவுகளையே விரும்புவதால், இது நன்கு விற்பனையாகிறது. மேலும், இவை தற்போது கேப்சூல் வடிவிலும் கிடைக்கிறது.
எதிர்காலத் திட்டமாக தற்போது நாங்கள் இதனை டேப்லட் வடிவில் விற்பனைக்கு கொண்டு வருவது பற்றியும், இதில் உள்ள நீலப் பொருளின் மருத்துவக் குணம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இந்த பாசிப் பொருள்களின் வாசனையை மாற்றுவது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளில் நிலையான 15 பி2பி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள Prolgae Spirulina supplies நிறுவனம், அண்மையில் அமேசானில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
“இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக ஸ்லோவாக்கியன் முதலீட்டாளரிடம் இருந்து விதை நிதி பெற்றுள்ளோம். இந்த முதலீட்டைக் கொண்டு உற்பத்தியை பெருக்கி, உலகமெங்கும் இருக்கும் ஸ்பைரூலினாவின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் இதற்கான ஆராய்ச்சிப் பணிகளிலும் இந்த முதலீட்டை செலவிட உள்ளோம்,” என்கிறார் ஆகஸ்.
இவரின் இம்முயற்சிகள் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு என்ற பேச்சுக்கே இடமின்றி போய்விடும். இந்தியா ஆரோக்கியமான வளர்ந்த நாடாகிவிடும் என்பதில் ஐயமில்லை.