தமிழக அரசியலும்; நடிகர்களும் - தமிழக வெற்றிக் கழகக் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய் !
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளார். சினிமா டூ அரசியல் என்ற இந்த பயணம்., எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பமாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விஜய் வரையில் வந்துள்ளது. இது பற்றிய ஒரு அலசல்!
தமிம்நாட்டைப் பொறுத்தவரை சினிமாவும், அரசியலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத ஒன்றாகத்தான் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதற்குக் காரணம் திரைத்துறை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்குதான். அதிலும், நடிகர்களுக்கு குறிப்பாக கதாநாயகர்களுக்கு அரசியல் கதவு எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது.
திரையில் அவர்கள் பேசும் வசனங்கள், செய்யும் நல்ல செயல்களை வைத்து, நிஜத்தில் அவர்கள் ஒரு நல்ல தலைவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதனாலே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கோலோச்சும் நடிகர்கள் பலரும் ஒரு கட்டத்தில் அரசியல் பாதைக்கு மாறி விடுகின்றனர்.
அப்படி கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போகிறார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தவர் தான் நடிகர் விஜய். அதற்குத் தகுந்தாற்போல் கடந்த 2009ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், இயக்கத்திற்கென தனி கொடியையும் அறிமுகப்படுத்தினார். ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார்.
இப்படி, அவர் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தியது, படங்களில் அரசியல் வாடை வீசும் பாடல்கள் மற்றும் வசனங்களை வைத்தது என மறைமுகமாக விஜய்யும் தனது அரசியல் பிரவேசத்தை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
பின்னர், ஒருவழியாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த விஜய், தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்த விஜய், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது கட்சியை களமிறக்கும் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று தனது கட்சியின் கொடியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் அவர் தனது கட்சிக் கொடியை ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
த.வெ.க. கொடியின் முக்கிய அம்சங்கள்
இந்த தமிழக வெற்றிக் கழக கட்சிக்கொடியானது சிவப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கொண்டதாக உள்ளது. நடுவில் உள்ள மஞ்சள் நிறப் பட்டையில் இரண்டு ஆண் யானைகள் இடம் பெற்றுள்ளன. இவை போர் யானைகள் ஆகும்.
நடுவில் இடம் பெற்றிருக்கும் சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகைப்பூ தமிழ்நாட்டின் பூ ஆகும். கொடியில் இடம்பெற்றுள்ள 28 நட்சத்திரங்களில் 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், இதர நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடி முழுக்க முழுக்க தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. போர் வீரம், தோழமை, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகைப்பூ இதை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வெற்றிக் கொடி
தவெக கொடியை அறிமுகம் செய்தபின், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில்,
“என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்."
புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.
"இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்,” என இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சியின் கொடி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மற்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மாநாடு எப்போது?
கட்சியின் கொடி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தபடியாக கட்சியின் மாநாட்டு தேதியை விஜய் இன்று அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கட்சியின் மாநாட்டு தேதியை, விரைவில் அறிவிப்பதாக அறிவித்துள்ளார் விஜய். அதோடு, கூடிய விரைவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்க இருப்பதாக, அவர் கூறியுள்ளார்.
அரசியல் ஒரு ரோலர்கோஸ்ட்
சினிமா டூ அரசியல் என்ற இந்த பயணம்.. எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பமாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விஜய் வரையில் வந்துள்ளது. இன்னும் இந்த பட்டியலுக்கு வர பலர் வரிசையில் நிற்கலாம். அது தவிர்க்க முடியாததுதான்.
ஆனால் சினிமாவும் ஆகட்டும், அரசியலும் ஆகட்டும் அதில் பிரவேசித்த அனைவருக்குமே வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை. சினிமாவில் அதிகம் கோலோச்சி, அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பலர், வந்த சுவடு தெரியாமல் அரசியலில் சுழலில் சிக்கி காணாமல் போன வரலாறும் நமது தமிழக அரசியலுக்கு உண்டு.
அதற்காக சினிமாவில் இருந்து வந்த அனைவருமே அரசியலில் ஜொலிக்க முடியவில்லையா என்றால், அதுதான் இல்லை. சினிமாவில் கிடைத்த நற்பெயரை அப்படியே அரசியலில் அறுவடை செய்து கோலோச்சியவர்களும் இங்கு உண்டு.
இதோ அப்படியாக சினிமாவை அஸ்திவாரமாகக் கொண்டு, அரசியலில் குதித்து பேசப்பட்டவர்களும், பின்னடவைச் சந்தித்தவர்களும்...
எம்.ஜி.ஆரும், சிவாஜியும்
அரசியலுக்கு வர நினைக்கும் அனைத்து நடிகர்களுமே உடனே ஒரு கட்சியை ஆரம்பித்து விடுவதில்லை. ஒரு சில நடிகர்கள் முதலில் ஒரு கட்சியிலே அல்லது ஓரிரு கட்சிகளிலோ இருந்துவிட்டு பின்னர் தங்களுக்கென புதிய கட்சி யை ஆரம்பித்து வந்தவர்களாகவே உள்ளனர். இதற்கு உதாரணம் நமது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர், கார்த்திக் ஆகியோர் ஆவர். இவர்கள் முதலில் வேறு கட்சிகளில் இருந்துவிட்டு பின் தங்களுக்கென புதிய கட்சியை ஆரம்பித்தார்கள்.
இவர்கள் ஆரம்பித்த கட்சிகளின் பெயர்களாவது, எம் ஜி ஆர் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1972), சிவாஜி கணேசன் - தமிழக முன்னேற்ற முன்னணி (1987), பாக்யராஜ் - எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் (1989), டி.ராஜேந்தர் - லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (2005), கார்த்திக் - அகில இந்தியா நாடாளும் மக்கள் கட்சி (2009)ஆகும்.
இத்தனை பேரில் எம்ஜிஆர் மட்டுமே புதிய கட்சி மூலமாக ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வர் ஆகப் பதவியேற்றவர் ஆவார். பாக்யராஜ் அவரது கட்சியை சில வருடங்களிலேயே கலைத்துவிட்டார். டி ராஜேந்தர், கார்த்திக் கட்சிகள் தேர்தல் சமயங்களில் உள்ளேன் ஐயா என்று மட்டும் சொல்வார்கள். அதிலும் கார்த்திக் அவ்வப்போது சட்டையை மாற்றுவது போல், தனது கட்சியின் பெயரையும் மாற்றி காமெடி செய்வார்.
நேரடி அரசியல்
இவர்களில் இருந்து வேறுபட்டு ஒரு சிலர் மட்டுமே நேரடியாக புதிய கட்சியை ஆரம்பித்தே அரசியலில் பிரவேசித்துள்ளனர்.
அதாவது, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (2005) மூலமாக விஜயகாந்த்தும், சமத்துவ மக்கள் கட்சி (2007) மூலமாக சரத்குமாரும், மக்கள் நீதி மய்யம் (2018) மூலமாக கமல்ஹாசனும் புதிய கட்சிகளின் மூலமாகவும் அரசியலில் இறங்கினார்கள். தற்போது இந்தப் பட்டியலில் நடிகர் விஜய்யும் தனது தமிழக வெற்றிக் கழகம் (2024) மூலமாக நேரடியாக அரசியலில் குதித்துள்ளார்.
இவர்களில், விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பித்து 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அடுத்து 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆக 2016 வரை பணியாற்றினார். ஆனால், அவரது உடல்நிலை மோசமானதால், அவரைப் போலவே அவரது கட்சியும் களையிழந்தது. இப்போது அந்தக் கட்சி அவரது மனைவியின் கையில் உள்ளது. வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கைப் பொறுத்து, அக்கட்சியின் செல்வாக்கு தெரியும்.
தமிழக அரசியலும், நடிகைகளும்
இவர்கள் தவிர, தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் சினிமா பின்புலத்தைக் கொண்டவர்தான். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான்.
நடிகர்கள் அளவிற்கு தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஒத்து வரவில்லை. ஜெயலலிதா தவிர குஷ்பு, ராதிகா சரத்குமார், விந்தியா, காயத்ரி ரகுராம் என தமிழக அரசியலில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
என் வழி.. தனி வழி!
இந்த எந்த வகையறாவிலுமே சிக்காமல், இதோ அரசியலுக்கு வருகிறேன்.. அதோ அரசியலுக்கு வருகிறேன்.. என வார்த்தைகளாக மட்டுமே சொல்லி விட்டு, ஒரு கட்டத்தில் நமக்கு அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது என எல்லாக் கோட்டையும் அழித்து விட்ட நடிகர்களின் கதைகளும் தமிழ் சினிமாவில் உண்டு.