வீடு, அலுவலக துப்புரவு, தூய்மைப் பணியாட்கள் சேவை வழங்கும் சென்னை 'Inztahelp'
அழகிய வீடு, விதவிதமான வீட்டுப்பொருட்கள், மார்பிள், டைல்ஸ் என்று பல வண்ணங்களில் தரைகள் என நவீனயுகத்துக்கு ஏற்ற வீட்டை சொந்தமாகவோ, வாடகைக்கு எடுத்தோ இருந்தாலும் எல்லாருடைய அன்றாட கவலை அதை தினமும் நன்கு பராமரிப்பது பற்றியதாகும். வீட்டு வேலைக்கு பணியாட்களை அமர்த்தினாலும், நாம் எதிர்ப்பார்த்த சுத்தம், தூய்மை கிடைக்கிறதா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான். வீட்டை பெருக்கி, துடைக்க ஆள் இருந்தாலும், தூசி தட்டுவது, பாத்ரூம் சுத்தம் செய்வது, சமயலறை மேடையை பளிச்சென வைத்திருப்பதலாம் சாத்தியமே இல்லை. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த பணிகள் இன்னுமே கடினமாக இருக்கும். இதற்கெலாம் தீர்வு தான் என்ன?
”என்னுடைய புகுந்த வீட்டினர் வீட்டு வேலைகளை சமாளிக்க அதிகம் சிரமப்பட்டனர். வீட்டு வேலைகளில் நான் உதவிசெய்ய நினைத்தாலும் என்னுடைய முழு நேர அலுவலக பணி காரணமாக என்னால் அதிகம் பங்களிக்க முடியவில்லை. என் நண்பர்களுடனும் உடன் பணிபுரிவோருடன் உரையாடியதில் இந்தப் பிரச்சனை பரவலாக பலர் வீட்டில் இருப்பதை அறிந்தேன்.” என்கிறார் ஊர்மி சந்த்ரா.
இப்படி அன்றாட தேவை இருக்கும்போது அதற்கு தீர்வாக ஒரு நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்தார் ஊர்மி. ’Inztahelp’ என்று பெயரிட்டு அதை ஒரு சிறிய அளவிலேயே நண்பர்களுடன் துவங்கினார்.

ஜம்ஷெட்பூரில் பிறந்து வளர்ந்த ஊர்மி, பள்ளி, கல்லூரியை அங்கே முடித்தார். பின் மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ. பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படித்தார். பிலிஃபைன்ஸின் ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்டில் எம்பிஏ (மார்கெட்டிங் அண்ட் ஸ்ட்ராடெஜி) படித்தார். இவரது பெற்றோர் ஜாம்ஷெட்பூரில் உள்ளனர். இவர் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.
பொறியியல் படிப்பை முடித்த பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணியில் சேர்ந்தார் ஊர்மி. நான்கு வருடங்கள் அங்கு பணியாற்றியபோதும் அவர் திருப்தியடையவில்லை. தகவல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த பெருநிறுவனம் ஒன்றில் அவர் பணிக்கு சேரவேண்டும் என்பது அவரது பெற்றோரின் கனவு. அதை நிறைவேற்றியதாக மட்டுமே அவருக்குத் தோன்றியது. என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு இல்லையெனினும் எம்பிஏ படித்தால் மேலும் அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணினார்.
கற்பிக்கும் முறை சிறப்பாக இருக்கும் என்பதால் எம்பிஏ படிக்க பிலிஃபைன்ஸின் ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்டை தேர்ந்தெடுத்தார்.
”ஒரு நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது, எப்படி சில நிறுவனங்கள் தோற்றுப்போகிறது, சில நிறுவனங்கள் மிகப்பெரிய வெற்றியடைகிறது என்பது போன்ற நடைமுறை விஷயங்களை ஆராய்ந்து உண்மையாக தொழில் நடக்கும் முறையை அங்கே கற்றேன். கோர்ஸ் முடிந்தபோது கிட்டத்தட்ட 7000 நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டேன்,” என்கிறார்.
அதன் பிறகு நேச்சுரல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறைக்கு தலைமையேற்றார். தொழில்முனைவு, தொழிலை எப்படி உருவாக்குவது, குழு அமைத்தல், நிதி நிர்வாகம், வருவாயை அதிகரித்தல் போன்றவற்றை அங்கே கற்றார்.
ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்
பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் ஊர்மிக்கு கிடைத்தது. ஏழு வருடங்கள் பணியாற்றினார். வெவ்வேறு துறை சார்ந்த அனுபவத்தைப் பெற்றதும் ஸ்டார்ட்-அப் துவங்க திட்டமிட்டார்.

ஊர்மி, லெனின் மற்றும் விஜய் ஆனந்த்
”என்னுடைய முன்னாள் மேலதிகாரி தொழில்முனைவில் ஈடுபட்ட விதத்தை பார்த்ததில் என்னால் அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. எப்படி வணிகம் செய்வது, பணிபுரிவோரை எப்படி சமாளிப்பது, நிதி, வளங்களை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என ஒன்றுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து சிறப்பாக செயல்படும் ஒரு நிறுவனத்தை எப்படி உருவாக்குவது என தெரிந்துகொண்டேன்."
ஏட்டில் படித்த அத்தனை விஷயங்களையும் நடைமுறைப்படுத்தியது புத்துணர்ச்சியளித்தது. தொழில் தொடங்க திட்டமிட்டால் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உணர்ந்தேன்.”
’Inztahelp’ செயல்பாடுகள்
2016-ல் ஒருங்கிணைந்த சுத்தப்படுத்துவதற்கான தீர்வை அளிக்கும் Inztahelp நிறுவனத்தை தொடங்கினர். வீடுகள், அலுவலகங்கள் அல்லது தொழிற்சாலைகள் சந்திக்கும் துப்புரவு பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கிறது இந்நிறுவனம். வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஹவுஸ்கீப்பிங் ஊழியர்களை வழங்குகிறது. வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சேவையளித்துவருகிறது.
வீடுகள், அலுவலகங்கள், கடை, ப்யூட்டி சலூன், ஹோட்டல், மருத்துவமனை, தொழிற்சாலை என அனைத்து பகுதிகளிலும் துப்புரவு சேவைக்கான தேவை உள்ளது. இந்தத் தேவையை இவர்களிடம் தெரிவித்தால் குறைந்த விலையில் ப்ரொஃபஷனல்களை வழங்குவதுதான் Inztahelp-ன் தனித்துவம்.
ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைக்கேற்ப சேவையளிக்கின்றனர். மிகச்சிறிய பணியாக இருப்பினும் இவர்கள் அதை புறக்கணிப்பதில்லை. ஒட்டுமொத்த முழுவீச்சிலான துப்புரவு பணிக்கு நிலையான சேவை கட்டணம் இருப்பினும் வாடிக்கையாளர்களின் தேவை மாறுபடும். ஆகவே பெரும்பாலான வாடிக்கையாளர்களின் சேவைக்கு அவர்களது இடத்தை பார்வையிட்ட பிறகே கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். தற்போது சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் சேவைகள் கொண்டுள்ளனர். ஆப் மூலமும் புக்கிங் செய்ய வசதி உள்ளது.
குழு விவரம்
நேச்சுரல்ஸில் உடன் பண்புரிந்த லெனின் ஊர்மியின் எண்ணத்தை பிரதிபலித்து அவருடன் முயற்சியில் இணைந்தார். இவர் ஸ்ட்ராடெஜி ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளில் அனுபவமிக்கவர். நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாட்டின் ஆப்பரேஷன்ஸ் துறைக்கு தலைமை வகித்தவர். கெவின் கேர் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்து ரெஸ்டாரண்ட் நடத்தி தொழில்முனைவில் அனுபவமிக்கவர். ரீடெய்ல் அவுட்லெட் அமைப்பதில் இருபது வருட அனுபவம் கொண்டவரான விஜய் ஆனந்த் இவர்களுடன் இணைந்துகொண்டார். வாடிக்கையாளர்தான் தெய்வம் என நம்புபவர் இவர்.
இவர்கள் மூவரின் சிந்தனையும் ஒத்திருந்தது. சந்தையில் தேவை இருப்பதையும் அந்தத் தேவையை நிரப்பக்கூடிய சரியான நிலையில் அவர்கள் இருப்பதையும் உணர்ந்தனர். வாடிக்கையாளர்களை கைப்பற்ற தள்ளுபடி அளிப்பதே ஒரே வழி என்று நம்பப்பட்ட காலக்கட்டம் அது. ஆனால் இவர்கள் மூவரும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தோம். PNL மாதிரியை அடிப்படையாகக்கொண்டு ஒரு நிலையான வணிகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
10 ஊழியர்களுடன் துவங்கப்பட்டு இன்று கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தரமான சேவையளிக்க வெளியிலிருந்து ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை பணியிலமர்த்தாமல் நேரடியாக இவர்களே சம்பளம் அளிக்கும் விதத்தில் ஊழியர்களை பணியிலமர்த்தியுள்ளனர்.

சந்தித்த சவால்கள்
மற்ற ஸ்டார்ட்-அப் போலவே நிதிதான் எங்களுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ப்ரொஃபஷனல் க்ளீனிங் என்கிற திட்டம் புதிதாக இருந்தது. நிதியுதவிக்காக வங்கிகளை அணுகியபோது எங்களது திட்டம் நன்றாக இருப்பதாக வங்கிகள் ஒத்துக்கொண்டாலும் நிதியுதவி அளிக்க முன்வரவில்லை.
மூவரும் அவர்களது சேமிப்பு அனைத்தையும் Inztahelp துவங்குவதற்கான முதல் சுற்று முதலீட்டிற்குப் பயன்படுத்தினர். லாபகரமான வணிக மாதிரியாக இருக்கும் என்று நம்பினர். வணிகத்தின் வளர்ச்சிக்கு நிதி போதுமானதாக இல்லாத காரணத்தால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை கோரினர். 2017-ம் ஆண்டு துவக்கத்தில்தான் ஒரு குறிப்பிட்ட வங்கியின் சீஃப் மேனேஜர் இவர்களது திட்டத்தை நம்பி லோன் அளிக்க சம்மதித்தார்.
மேலும் அதிக முதலீட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான நிறுவனங்களுடன் போட்டியிடுவது சவாலாக இருந்தது. இவர்களது வணிக மாதிரி லாபம் ஈட்டும் விதத்திலேயே அமைந்திருப்பதால் வாடிக்கையாளர்களை பெறுவதற்காக நஷ்டமடைவதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான தள்ளுபடிகளை அளிக்கும் நிறுவனங்களுடன் போட்டியிடவேண்டியிருந்தது.
வரையறுக்கப்பட்ட மார்கெட்டிங் பட்ஜெட்டில் சென்னையில் இவர்களுக்கான சந்தையை பெறுவது சவாலாக இருந்தது. எனினும் ஒரு வருடத்தில் இவர்கள் தனக்கென ஒரு முத்திரையை பதித்துவிட்டனர்.
பணியாளர்களுக்கு எங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது மற்றொரு சவாலாக இருந்தது. சிலர் ஸ்மார்ட் ஃபோனை பார்த்ததே இல்லை. அதைப் பயன்படுத்த தெரியாததால் அழைப்பை எடுக்காமல் விட்டுவிட்டனர். ப்ரொவைடர் செயலியைப் பயன்படுத்தி அழைப்பை ஏற்க பயிற்சியளிப்பது போன்றவை சவாலாக அமைந்தது. அதற்காக அவர்களுக்கு தினமும் லாக் செய்வது, சேவை விவரங்களை பதிவு செய்வது போன்றவற்றிற்கான தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது. இதன் விளைவாக இரண்டு மாதங்களில் ஊழியர்கள் தொழில்நுட்பத் திறன் மேம்பட்டது.
தீர்வுகள்
இன்றைய சூழலில் வேலைப்பளு காரணமாக ஒருவர் தனக்கான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அவ்வாறு கிடைக்கும் மிகக்குறுகிய நேரத்தையும் சுத்தப்படுத்துவதற்கும், வீட்டை பராமரிப்பிற்கும் ஒதுக்க யாரும் விரும்புவதில்லை. மற்றொருபுறம் வீட்டின் பணிக்காக ஒரு நம்பிக்கையான நபரைக் கண்டறிவது கடினமான விஷயமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சரியான நேரத்தில் சரியான நபரை அளிப்பதே Inztahelp பணியாகும்.
சரியான நபரிடம் பணியை ஒப்படைத்துவிட்ட திருப்தியுடன் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக இருக்கலாம். அதேபோல தொழிற்சாலைகளிலும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வது, சரக்கு இருப்புகளை பராமரிப்பது, சுத்தப்படுத்தும் பணிக்கு நியமிக்கப்படும் ஊழியரைக் கையாள்வது போன்றவற்றில் சிக்கிக்கொண்டு அதிக நேரம் செலவிட நேரிடும். இப்படிப்பட்ட ஒட்டுமொத்த பொறுப்புகளையும் Inztahelp கையில் எடுத்துக்கொள்வதால் நிறுவனங்கள் தங்களது தொழில் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த முடியும்.
பெருக்குவது, துடைப்பது, பாத்திரங்களையும் துணிகளையும் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை சேவைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கழிவறை சுத்தப்படுத்தும் முறையை அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் மூன்று விதமாக பிரித்துள்ளனர். இதற்கான கட்டணம் 100 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஆகும். முழு வீட்டையும் ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும் பணிக்கான ஆரம்பக் கட்டணம் 3000 ரூபாய்.
வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்க ஏதுவாக கதவு மற்றும் ஜன்னல், சீலிங், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள், டேங்க் மற்றும் சம்ப், மாடி மற்றும் போர்டிகோ என வகைப்படுத்தப்பட்டு அதற்கான பேக்கேஜ்களும் இவர்களிடம் உள்ளது.
வாடிக்கையாளர்கள் 30 அல்லது 60 மணி நேரத்திற்கான சேவைக்காக முன்னரே புக் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தேவையானபோது குறிப்பிட்ட நேரத்திற்கான சேவையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். இது இவர்களது மற்றொரு சுவாரஸ்யமான பேக்கேஜ் ஆகும். இது தவிர தொழிற்சாலைகளுக்கு மேற்கூரை, சுவர், கார்பெட் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணிகளையும் செய்துவருகின்றனர்.
பாரம்பரிய முறைலிருந்து வேறுபடுதல்
தேவையேற்படும்போது உதவி பெற்றுக்கொள்ளும் திட்டத்தால் வாடிக்கையாளர்கள் பெரிதும் திருப்தியடைந்துள்ளனர். நம்பகமான பணியாள் கிடைக்காத சூழலில் Inztahelp வாயிலாக சேவைகளை பெற்றுக்கொள்வது நம்பகமானது என்பதை வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர். மேலும் வாரத்தின் ஏழு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ஊழியர்களை அனுப்புகின்றனர். ஒரு ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தாலும் அடுத்த நபரை திட்டமிட்டப்படி அனுப்பிவிடுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் இவர்களது சேவையை ஏற்றுக்கொள்கின்றனர்.

சில வாடிக்கையாளர்கள் கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் மலிவான விலையில் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்க முடியாது . Inztahelp அனைத்து சேவைகளிலும் தரமான கெமிக்கல்களையே பயன்படுத்துகின்றனர். பயிற்சிபெற்ற ப்ரொஃபஷனல் ஊழியர்களே சேவையளிக்கின்றனர்.
நிதி மற்றும் முதலீடு
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிதியுதவியுடனே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வென்சர் கேப்பிடலிஸ்ட்டை நிதிக்காக அணுகவில்லை. ஏனெனில் இவர்கள் தங்களது சேவையை நிலைப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்வதால் தரக்கட்டுப்பாடு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிலிருந்து விரைவாக தொழிலை விரிவுபடுத்துவதில் கவனம் திசைதிரும்பிவிடும் என்கிறார் ஊர்மி.
வழிகாட்டிகள்
அலிபாலா குழுவின் நிர்வாகத் தலைவரான ஜாக் மாவையே பின்பற்றுவதாக தெரிவிக்கிறார் ஊர்மி.
“மனமுடைந்து முயற்சியை கைவிட்டுவிடுவதுதான் மிகப்பெரிய தோல்வி” என்கிறார் ஜாக் மா. Inztahelp நிறுவனத்தை ஆரம்பித்தது முதல் இன்று வரை பல சவால்களை சந்தித்திருந்தபோதும் இந்த வரிகள் ஊர்மியின் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார்.
”உங்களது ஊழியர்கள் உங்களைக் காட்டிலும் அதிக தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இல்லையெனில் நீங்கள் தவறான நபரை பணியிலமர்த்தியுள்ளீர்கள்.” என்பது ஜாக் மாவின் மற்றொரு கருத்து. இந்தத் துறைக்கு புதிது என்பதாலும் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியதாலும் அனைத்து ஊழியர்களும் அதிக தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதிசெய்து தொழிலில் வெற்றி அடையவே உழைப்பதாக ஊர்மி தெரிவித்தார்.