’பெரிதாக சாதிக்க நீங்கள் குறைந்தவர் அல்ல’- ஆளுமை பயிற்சியாளர் மனோஜ் வாசுதேவன்
அடுத்தக் கட்ட இலக்கை அடைய உதவும் சர்வதேச ஆளுமை பயிற்சியாளர் மனோஜ் தரும் அறிவுரைகள்!
தொழில்முனைவராக இருப்பது பகுதி நேர வேலையோ, முழு நேர வேலையோ இல்லை, அது ஒரு வாழ்க்கை முறை. நமது சிந்தனை, நாம் பழகும் விதம், நடந்து கொள்ளும் விதம் என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அதற்கான முத்திரை இருக்க வேண்டும். வெற்றிமிகு தொழிலதிபர்களை கவனித்தால் இது புலப்படும். இதில் பலவற்றை நாம் அன்றாடம் கடைப்பிடித்தால் அதுவே பழக்கமாக மாறி நம்மீதான கண்ணோட்டத்தையும் மாற்ற வல்லது.
வெற்றிக்கான வழி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள் பற்றி சர்வதேச லீடர்ஷிப் கோச் மற்றும் ஆசிய, ஐரோப்பா என எல்லா கண்டங்களிலும் 27 தேசத்தில் முக்கிய நிர்வாகிகளையும் தொழிலதிபர்களுக்கும் பயிற்சி அளித்தவருமான மனோஜ் வாசுதேவன் இடம் யுவர்ஸ்டோரி பிரேத்யேக உரையாடல் நிகழ்தியது.
இந்தியாவில் தொழில்முனைவருக்கான சூழல் எப்படியுள்ளது?
தாராளமயமாக்கல், தொழில்நுட்ப வளர்சி ஆகிய காரணத்தினால் பிசினஸ் தொடங்குவது என்பது இன்று மிக எளிது. இன்டர்னெட்டின் ஊடுருவல் உலக சந்தையில் எங்கிருந்து வேண்டுமானாலும் வணிகம் புரிய வழிவகை செய்துள்ளது. அதிக அளவில் பட்டதாரிகள் தொழில் துவங்கும் முனைப்புடன் உள்ளனர். சான்ஃப்ரான்சிஸ்கோ, சிலிகான் வேலி போன்ற கட்டமைப்பு இன்னும் இந்தியாவில் வளரவில்லை, இருப்பினும் இந்தியாவில் வாய்புகள் ஏராளம் காத்திருக்கின்றன, இது சரியான நேரமாகவே உள்ளது.
இங்குள்ள தொழில்முனைவருக்கு உள்ள நெட்வொர்க் பற்றி?
சிலிகான் வேலி போன்ற வளர்சியடைந்த கட்டமைப்புகளில் நெட்வொர்க் என்பது மிகவும் நெருங்கிய பிணைப்பாகவே உள்ளது. தங்களைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் அவர்களின் வணிகத்தை பற்றியும் அறிந்திருப்பர். முன்னணியில் உள்ள ஆனால் வெற்றியுடன் வலம் வரும் பல நிறுவனங்களை இணையதளத்தில் கூட காண முடியாது. இங்கு அது போல் பலமான நெட்வார்க் இல்லை என்றே தோன்றுகிறது.
”சரியானவர்களிடம் நெட்வொர்க்கில் இருத்தல் மிக முக்கியம். உங்களின் துறை சார்ந்தவர்கள், வென்ச்சர் கேபிடலிஸ்ட் ஆகிய உள்வட்ட தொடர்புகள் உங்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.”
முதலீடு என்பதை கடந்து பிற நலன் சேர்க்கும் வல்லுநர்களிடம் தொடர்பில் இருத்தல் முக்கியம். நீங்கள் எந்த மாதிரியான நெட்வொர்க்கில் உள்ளீர்கள், அவர்கள் செல்வாக்கு படைத்தவர்களா, எந்த மாதிரியான பின்புலம் கொண்டவர்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
முதலீட்டை விட தொடர்புகளே பிரதானமானது.
உங்கள் தொழிலில் யார் முதலீடு செய்கிறார்கள் என்பது முக்கியம். அப்போதைய முதலீடு தேவைக்காக உங்களின் பங்கீட்டை விட்டுக் கொடுக்காமல், நீண்ட கால இலக்கை கணக்கில் கொண்டு முடிவெடுங்கள் என தொழில்முனைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியதை பட்டியலிட்டார் மனோஜ்.
உங்களின் மீதும் உங்கள் தொழிலின் மீதும் சில நொடிகளிலேயே நாட்டம் கொள்ள வைக்கும் படியாக கம்யூனிகேஷன் திறமையை செப்பனிட வேண்டும்.
பல சமயங்களில் நீங்கள் பங்கு பெறும் கருத்தரங்கில் உங்கள் அருகில் அமர்ந்திருப்பவர் முக்கிய நபராகவோ, செயல்மிகு பயனராகவோ இருக்கும் வாய்ப்புள்ளது. ஆதலால் கிடைக்கும் சில மணித்துளிகளில் உங்களைப் பற்றி தெரிவித்தல் வேண்டும். இதற்கான பயிற்சியை, பொது இடத்தில் பேசும் திறமையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மனோஜ், 2020 ஆம் ஆன்டுக்குள் 20 மில்லியன் பேருக்கு பொது இடத்தில் பயமில்லால் பேசும் திறமையை வளர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளதாக கூறுகிறார்.
அளவில்லா வாய்ப்புகள் காத்திருக்கின்றன
புது புது எண்ணங்கள் பல பேருக்கு தோன்றினாலும், அதில் சிலரால் தான் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல முடிகிறது. ஐடியாக்களை எளிதாக பெருக்க முடியும். அந்த ஐடியாக்களுக்கு வலு சேர்த்து மதிப்பு மிக்க தொழிலாக மாற்றுவதில் தான் வெற்றி உள்ளது. இளம் திறமையானவர்கள் நம் தொழில்முனை நிறுவனத்தில் சேர, வலுவான ப்ராண்ட் ஸ்டோரி அவசியம். பணம் மட்டுமே பிரதானமாக இருந்தால் ஏமாற்றம் நிச்சயம் என்பதோடில்லாமல், நம்மை வெகு தூரம் இட்டுச்செல்லாது என்பதை நன்றாக அறிய வேண்டும். ஆம், நீங்கள் வளர்வது உங்கள் எண்ணத்திலும் செயலிலும் தான் உள்ளது.