ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கான மன உறுதி!
2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியமான வாக்குறுதி, “ஊழலுக்கு வழி செய்யும் சாத்தியக் கூறுகளை ஒழிக்கும் வழிமுறையை உருவாக்குவது” என்பதாகும்.

இந்த இலக்கை அடைவதற்கு மூன்று வழிமுறைகள் காணப்பட்டன. அ) பொதுமக்களிடையே விழிப்புணர்வு, ஆ) மின் ஆளுகை அடிப்படையிலான தொழில்நுட்பம், இ) ஒழுங்கமைவு கொண்ட கொள்கையை அரசு உருவாக்குதல், ஈ) வரி விதிப்பு முறையை சீர்ப்படுத்தி, எளிமைப்படுத்துவது உ) எல்லா நிலைகளிலும் நடைமுறைகளை எளிதாக்குதல், இவை மட்டுமின்றி, 1) கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, 2) வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து, இந்தியாவுக்குக் கொண்டுவருவது, 3) அதற்கேற்ப தற்போதைய சட்டங்களைத் திருத்துவதும் புதிய சட்டங்களை இயற்றுவது, 4) வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்த தகவல்களை அறிவதற்காக அந்தந்த நாடுகளுடன் சுமுகமாகப் பேசுவது. ஊழலை ஒழிப்பதிலும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அடைந்த வெற்றிக்கு இந்த நடைமுறைகளே நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன. ஆட்சிக் காலத்தில் பாதியைப் பூர்த்தி செய்த இந்த அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவே அரசின் செயல்பாட்டை எடைபோட நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
முந்தைய அரசு ஊழலிலும் முறைகேட்டிலும் திளைத்திருந்தது. இந்தியாவில் கணக்கில் வராத பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் குறித்து ராம் ஜேத்மலானி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அண்ணா ஹசாரே தலைமையிலான இயக்கம் வலியுறுத்தியபோது வேறு வழியில்லாமல் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரின் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை 2011ம் ஆண்டு மே மாதம் அமைத்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தக் குழு அமைக்கப்பட்டது. அதையடுத்து, சரியாக ஓராண்டு கழித்து கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2011ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவை (Special Investigation Team) அமைக்க உத்தரவிட்டது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பதை எதிர்த்து அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழுத்ததடித்தது. இதனால், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் மூன்றாண்டுகள் தாமதம் ஆனதுதான் மிச்சம்.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கறுப்புப் பணம் குறித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை 2014 ம் ஆண்டு மே 27ம் தேதி அமைத்தது. அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைவராகவும் ஓய்வுபெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். இன்றுவரை அந்தக் குழு ஆறு இடைக்கால அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவற்றின் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதன் பரிந்துரைப்படி ரூ. 3 லட்சத்துக்கும் மேல் பணப் பரிமாற்றம் சட்டவிரோதம் என்றும் தண்டனைக்குரியது என்றும் அறிவித்தது. அதைப் போல் ரூ. 15 லட்சமும் அதற்கு மேலும் ரொக்கத்தைக் கையில் வைத்திருப்பதும் சட்டவிரோதம் என்று அறிவிப்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரிஜித் பசாயத்தைப் பொருத்தவரையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது முதல் ரூ. 70,000 கறுப்புப் பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ரூ. 16,000 கோடியை இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தூய்மையான ஆட்சியை நடத்தி வருகிறது. ஊழல், முறைகேடு என்பதற்கான அறிகுறியே இல்லை. ஆனால், முந்தைய ஆளும் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல், முறைகேடு மலிந்தன. அதே சமயம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனிப்பட்ட முறையிலும் ஊழல் கறை படியாமல் இருப்பதுடன், ஆட்சியும் ஊழலில் சிக்காதவாறு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
“கையூட்டு விஷயத்தில் நானும் சிக்குவதில்லை, மற்றவர்களும் சிக்கிக் கொள்ள விடுவதில்லை” (Na Khaata hoon, na khaane deta hoon) என்ற பிரகடனத்தைப் பொதுமக்கள் அவரது உறுதிமொழியாகவே பார்க்கிறார்கள்.
ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கு அரசு சட்டப்பூர்வமான, நிர்வாக அளவிலான, தொழில்நுட்ப முறையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள், அ) கறுப்புப் பணம் (அறிவிக்கப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள்) வரி விதிப்புச் சட்டம் (2015), ஆ) பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம் (2015), இ) பங்குகள் (திருத்தம்) சட்டம் (2014) மற்றும் ஈ) வங்கி நோட்டுகள் (பண மதிப்பிழப்புச் சட்டம்) போன்றவை பிரதான சட்டங்களாகும்.
கறுப்புப் பணம் (அறிவிக்கப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள்) வரி விதிப்புச் சட்டத்தின் (2015) கீழ் 648 பேர் மொத்தம் ரூ. 4,164 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் குறித்து அறிவித்துள்ளனர். அதைப் போல், 2016ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான வருவாய் அறிவிப்புத் திட்டத்தின் (IDS) கீழ் 64,275 பேர் இதுவரை அறிவிக்காத மொத்தம் ரூ. 65,250 கோடி வருவாயை அறிவித்துள்ளனர்.
இந்தியா 2000ம் ஆண்டு முதல் 2015ம ஆண்டு வரையில் பெற்றுள்ள அந்நிய நேரடி முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கு மொரீஷியஸ் நாட்டின் வழியாகக் கிடைத்துள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணம் மொரீஷியஸ் வழியாக இந்தியாவுக்குள் வருகிறது என்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மொரீஷியஸ் நாட்டுடனான இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்பாடு (DTAA) குறித்து 2016ம் ஆண்டு மே 11ம் தேதி மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்தியது. அதையடுத்து, புதிய வரிவிதிப்பு முறை மூலம் இப்படி கறுப்புப் பணப் பரிமாற்றம் ஒழித்துவிட்டது.
அரசின் பலன்களைப் பெறுவோருக்கு வங்கிகள் மூலமாகப் பணப் பலன் சென்றடைவதற்கான நேரடி பலன் பரிமாற்றம் (DBT) என்ற நடைமுறையை முந்தைய அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் பயனாளிகளுக்குச் செல்வதற்கு முன் பணம் இடையில் களவாடப்படுவதையும், திசை மாறுவதையும் தடுப்பதற்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், பல பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாததால், நேரடி பலன் பரிமாற்ற முறையின் நோக்கம் நிறைவேறவில்லை. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்ததும் பிரதம மந்திரி ஜனதன யோஜனா (PMJDY) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் ஏராளமானோர் வங்கிக் கணக்குகளை வைத்திருக்க வழியேற்பட்டது. இன்று வரையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 28 கோடியே 38 லட்சம் பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம், ஏழைகளும் நேரடி பலன் பரிமாற்றம் (DBT), மின்னணுப் பணப் பரிமாற்றம் ஆகியவை மூலம் பலனடையத் தொடங்கிவிட்டனர். தேசிய ஜனநாயக் கூட்டணி ஆதார் அட்டைத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் செயல்படுத்தியுள்ளது. ஆதார் விஷயத்தில் முந்தைய அரசு எந்தச் சட்டத்தையும் கொண்டுவரத் தவறிய நிலையில், வலுவான ஆதார் சட்டத்தை (2016) இந்த அரசு கொண்டுவந்தது. அரசு கொண்டுவந்த திரிசூலம் போன்ற ஜன்தன் – ஆதார் – மொபைல் நிதிப்பரிமாற்ற முறை எல்லோருடைய தனிப்பட்ட பணப் பரிமாற்றத்தை முழுமையாக்கிவிட்டது.
கடந்த ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவை என அரசு அறிவித்தது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான மிகப் பெரிய நடவடிக்கையாகும். செல்லாததாக அறிவிக்கப்பட்ட இரு வகை கரன்சி வடிவில்தான் பெருமளவு கறுப்புப் பணம் இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பை அடுத்து பெருமளவு கறுப்புப் பணம் வெளிவந்துவிட்டது. எனினும், அரசு முழுமையான அறிக்கையை வெளியிட்ட பிறகே பணமதிப்பிழப்பினால் கறுப்புப் பணம் வெளியானது குறித்த முழுமையான விவரம் தெரிய வரும். இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பணமில்லா பரிமாற்ற முறையைக் கொண்டுவருவதற்குச் சரியான வாய்ப்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பயன்படுத்தினார். டிஜிட்டல்மயமாக்கம் குறித்து பல நிகழ்ச்சிகளை டிஜிதன் மேளா என்ற பெயரில் (Digidhan Mela) அரசு நாடு முழுவதும் நடத்தியுள்ளது ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகத்தின் (Unified Payments Interface) அடிப்படையில் அமைந்த “பீம்” (Bharat Interface for Money) செயலி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. அரசியலில் தேர்தலில் பணம் செலவழிப்பது ஊழலுக்கு ஊற்றாக அமைந்துவிட்டது. தேர்தலில் பணம் செலவழிப்பபதை வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவது மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
* ஆங்கில கட்டுரையாளார் ப்ரியதர்ஷி தத்தா, சுதந்திரமான ஆய்வாளர் மற்றும் விமர்சகர். இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும்.