Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சிறைக்கைதிகளின் குழந்தைகளின் வாழ்விற்கு வழிகாட்டும் ராஜா!

30 வயதாகும் ராஜா, எட்டு மாத குழந்தையாக இருந்த போது போலியாவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடப்பவர்.

சிறைக்கைதிகளின் குழந்தைகளின் வாழ்விற்கு வழிகாட்டும் ராஜா!

Monday April 25, 2016 , 5 min Read

2014, ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளன்று பாளையங்கோட்டை சிறை கைதிகள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். பல்வேறு வழக்குகளில் ஜெயிலில் ஆயுள் தண்டனை பெற்றோ அல்லது விசாரணை கைதியாகவோ சிதைந்து போய் சிறை வாழ்க்கையில் அல்லல்படும் அந்த கைதிகள் அறுசுவை விருந்துண்டு வருடங்கள் பல ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜாவுக்கு கல்யாணம். அவரது திருமணத்திற்காக இந்த அறுசுவை விருந்தை உண்பதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

“பரோலில் வெளிவரமுடியாத எண்ணற்ற கைதிகள், 12 முதல் 15 ஆண்டுகளாக சிறைகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அவர்களுக்கு சுவையான உணவு என்பது எட்டாக்கனவாகவே இருந்து வந்தது. குடும்பத்தினராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, யாராலும் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருக்கும் சிறைக்கைதிகளுக்கு எனது திருமணத்தையொட்டி உணவை கொடுக்க முடிவு செய்தேன்,”

என்கிறார் ராஜா...

image


30 வயதே ஆன ராஜா, ஜெயில் கைதிகளுக்கு மன நல ஆலோசகராக வேலை செய்து வந்தவர். தான் பிறந்த எட்டாவது மாதத்திலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்த நிலையில், ஊன்றுகோல் உதவியுடன் நடமாடுபவர். இன்று சிறைக்கைதிகளின் குழந்தைகள், மற்றும் அவர்களின்எண்ணற்றோருக்கு வாழ்வதற்கான நல்வழியை காண்பித்து கொடுத்து அக்குழந்தைகளின் கல்விக்கும் உதவி வருகிறார் ராஜா. 

எம்.எஸ்.டபிள்யு பட்டதாரியான இவர், சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கான சேவையில் களமிறங்கியது ஒரு எதிர்பாராத நிகழ்வு. பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மனநலம் குறித்த முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தபோது, சமூகத்தில் ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான் என்பதை விரிவாக ஆய்வு செய்ய முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்தே அவர் பாண்டிச்சேரி மத்திய சிறைக்கு சென்றார். அங்கு பல கைதிகளை பார்த்து, அவர்களை பற்றி விசாரித்து கொண்டிருந்த போது, ஏதேச்சையாக மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை கைதியிடம் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்ன செய்கிறார்கள் என்று ராஜா கேட்டுள்ளார். தனது குழந்தைகளை பார்த்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன என அந்த கைதி கூறவே, அவரது முகவரியை வாங்கிக் கொண்டு அந்த முகவரியை நோக்கிச் சென்றார் ராஜா.

image


ஆனால் அந்த கைதி கொடுத்த முகவரியில் குழந்தைகள் இல்லை. அவர்களை குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, இரண்டு தெருக்கள் தள்ளி தங்கள் பாட்டியுடன் அந்த குழந்தைகள் வசித்துவருவதாக சொன்னார்கள். அந்த வீட்டிற்குச் சென்று அந்த பாட்டியை சந்தித்த ராஜா தான் ஜெயிலிலிருந்து அவரது மருமகன் அனுப்பியதாக கூறியபோது, 

"பாட்டி தனது மருமகனை திட்டித்தீர்த்துவிட்டு, தனது பேரக்குழந்தைகளுடன் வாழ்வதற்காக தான் படும் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் கூறி மனம் வருந்தினார். குழந்தைகள் வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்வதாக சொல்லி என்னிடம் அழுதார். இந்த சம்பவமே என்னை வெகுவாக பாதித்தது. சிறைக்கைதிகளின் குழந்தைகள் வாழ்க்கையில் நிர்க்கதியற்ற நிலையில் தள்ளப்படுவதை அப்போதே உணர்ந்தேன்," என்றார் ராஜா.

“பெரும்பாலான கொலை குற்றவாளிகளின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அட்மிஷன் கூட கிடைப்பதில்லை. இதனால் குழந்தைகள் குற்றஉணர்வுகளுக்கு உள்ளாகின்றனர். பெற்றோர் செய்த தவறுக்காக, அவர்களது குழந்தைகள் கல்வியை பெறுவதற்கும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் இந்த சமூகம் உதவ மறுத்துவருகிறது. ஒரு குடும்பத் தலைவர் ஏதேனும் தவறு செய்து ஜெயிலுக்கு போனால், அவரை நம்பி வாழும் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் படிக்க வழியில்லாமல் வேலைக்கு போய் வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை புரிந்து கொண்டேன், “ என்கிறார் மேலும்.

தொடர்ந்து தனது முதுகலை பட்டபடிப்பை முடிந்தவுடன் திருவனந்தபுரத்திற்கு சமூக வளர்ச்சிப்பணி முனைவிற்கான பயிற்சிக்குச் சென்றார் ராஜா. அங்கு ஒருவருட பயிற்சியை முடித்த பின், நேபாளத்திற்கு மற்றொரு பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் 'பிரிசனர்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் நேபாள்' என்று தலைநகர் காத்மண்டுவை மையமாக இயங்கும் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்டார்.
“அங்கு சிறைக்கைதிகள் மத்தியில் சேவை செய்தும், குற்றங்களை தடுக்கும் வகையில் சிறைக்கைதிகளின் நானூறு குழந்தைகளை காக்கும் அந்த மையத்தில் பயிற்சியும் எடுத்து கொண்டேன். அதே முறையில் தமிழக சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கும் உதவ நினைத்தேன்.”

தான் கற்று கொண்டவற்றை சேவை அடிப்படையில் நடைமுறைப்படுத்த ராஜா தேர்ந்தெடுத்த சிறை தான் பாளையங்கோட்டை மத்திய சிறை. அதற்காக தன்னந்தனியாக பாளை., சிறைக்கு சென்றார் ராஜா. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தான் ராஜாவுக்கு பூர்வீகம். அப்படியிருக்க ஏன் அவர் பாளையங்கோட்டை சிறையை தேர்வு செய்ய வேண்டும் என கேட்ட போது,

“பாளையங்கோட்டை ஜெயிலை தேர்வு செய்ய இரு காரணங்கள் இருந்தன. முதலாவது தமிழகத்தின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் இங்கு தான் அதிக குற்றவாளிகள் உருவாகின்றனர். இரண்டாவது, தெற்கே கன்னியாகுமாரியிலிருந்து இருக்கும் முதல் மத்திய சிறை பாளையங்கோட்டை தான்.”

என்று கூறிய அவர், முதலில் தான் வந்த நோக்கத்தை சிறை கண்காணிப்பாளர் திரு.கனகராஜிடம் கூறியுள்ளார். தனிநபராக ராஜாவை அனுமதிக்க முடியாது எனவும், ஏதாவது தொண்டு நிறுவனம் மூலம் வந்தால் பரிசீலிக்கலாம் என்றும் கூறிவிட்டாராம் அந்த அதிகாரி.

image


இதனை தொடர்ந்து தான் ராஜா, 'உலக சமத்துவத்திற்கான கூட்டமைப்பு' (Global Network for Equality) என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கினார். அதன் மூலம் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.

“உள்ளே சென்ற நான், 500 க்கும் மேற்பட்ட சிறை கைதிகளிடம் பேசினேன். அவர்களில் 80 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தங்கள் மனைவியரை கொன்ற குற்றத்திற்காக ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தவர்கள். அவர்களது வீட்டு முகவரிகளை பெற்றுக் கொண்டு, வீடுகளை தேடி அலைந்தேன். எனது நண்பர்கள் அரவிந்தன், முருகன் ஆகியோரும் எனக்கு உதவினர்.”
தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2933 கிலோ மீட்டர் நண்பர்களுடன் அலைந்த ராஜா, 48 குழந்தைகளுக்கு தந்தை சிறையிலும் தாய் இல்லாமல் நிர்க்கதியாகவும், 157 குழந்தைகளுக்கு தந்தை சிறையிலும் தாயின் வறுமையால் கல்வி கற்க வழியில்லாமலும் வாழ்க்கையை ஓட்டி கொண்டு கூலி வேலை செல்லும் நிலையில் உள்ளதை அறிந்தனர். அதனை தொடர்ந்து, அந்த குழந்தைகளின் பாதுகாவலர்கள் அனுமதியுடன் அக்குழந்தைகளை கல்வி கற்க பள்ளிகளுக்கு அனுப்ப தக்க ஏற்பாடுகளை செய்தார் ராஜா.
“2014 இல் 205 குழந்தைகளின் படிப்பு செலவுக்காக 7.39 இலட்சம் திரட்டி உதவி செய்தோம். அதனை தொடர்ந்து 2015 இல் 159 குழந்தைகளுக்கு 4.93 லட்சமும் திரட்டி உதவி செய்தோம். பொதுவாக நாங்கள் எவரிடமும் இத்தகைய செலவுகளுக்காக நன்கொடை வசூல் செய்வதில்லை. தேவையான பணத்தை தொண்டு அமைப்போ, தனிநபரோ நேரடியாக இந்த குழந்தைகளுக்காக உதவி செய்ய வழி வகுத்தோம்.”
இந்நிலையில், 2013 மார்ச் மாதம் பாளையங்கோட்டை சிறைக்கு தன்னார்வலராக சென்ற ராஜாவை சிறை நிர்வாகம், மாதம் 15000 ரூபாய் மதிப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் மன நல ஆலோசகராக நியமித்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அந்த பணியினை செய்து வந்த ராஜா, தற்போது அப்பணியை ராஜினாமா செய்துள்ளார். சிறை நிர்வாக அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு தராத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகிறார். 
image


“கைதிகள் குற்றங்கள் செய்து தண்டனை அனுபவிப்பவர்கள் தான். அவர்கள் செய்த குற்றத்திற்கு இந்த குழந்தைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? கைதிகளின் குழந்தைகளை கவனிப்பதன் மூலம் கைதிகளை மனரீதியாக குணப்படுத்திவிட முடியும். கொடுங்குற்றங்கள் தவிர்க்கபட வேண்டுமானால், இந்த குழந்தைகளின் எதிர்காலம் நல்ல நிலையில் அமைய வேண்டும். அது சாத்தியப்பட அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். எனினும் எனது இந்தப் பணியில் பல தடைகள் ஏற்பட்டது, அதனாலேயே நான் இந்த வேலையை ராஜினாமா செய்தேன், “ என்கிறார்.

வேலையை ராஜினாமா செய்துவிட்டீர்கள். குடும்ப வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்ட போது,

“மனநல ஆலோசனை மையம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் எனது தனிப்பட்ட வருமானத்தை உறுதி செய்து கொள்வேன். அதில் கிடைக்கும் குறைந்த வருமானமே எனது குடும்பத்தை ஓட்டிச் செல்ல போதுமானது. நான் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டவன். அதனால் கிடைக்கும் வருமானத்தில் என்னால் திருப்தியாக வாழ்ந்துவிட முடியும் என நம்புகிறேன்,” என்கிறார் ராஜா.

அண்மையில் கவின்கேர் நிறுவனத்தின் "எபிலிட்டி எமினென்ஸ்" விருதை பெற்றுள்ள ராஜா, சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கான வாழ்க்கையை மேம்படுத்த தன்னலம் கருதாது இன்னும் அதிகமாக உழைப்பதற்கான வாய்ப்பு தற்போது விரிவடைந்திருப்பதாக தன்னம்பிக்கையுடன் கூறி விடை பெறுகிறார்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கிரீன்கார்டை துறந்து தாய்நாட்டில் சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பாலாஜி!

'பாலம்' கல்யாண சுந்தரம்: கலாம் முதல் ரஜினி வரை வியக்கவைத்த உன்னத ஆளுமை!