'மகளிர் முன்னேறினால், வளமை எல்லோருக்குமானது': சென்னை அமெரிக்கா தூதரக கான்சுலர் லாரேன் லவ்லேஸ்
உலக தொழில்முனைவோர் உச்சிமாநாட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மகளிர் தொழில்முனைவோர் கருத்தரங்கம்
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறும் உலக தொழில்முனைவோர் மாநாடு #GES2017, தென் இந்தியாவில் ஐதராபாத் மாநகரில் நேற்று தொடங்கியது. மாநாட்டை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அமெரிக்க அதிபரின் மகளும், அவரின் ஆலோசகருமான இவாங்கா டரம்ப் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வின் பின்னூட்டமாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பல்வேறு நிகழ்ச்சியை நடத்துகிறது. தென் இந்தியாவிலிருந்து வெற்றி பெற்ற சில பெண் தொழில்முனைவர்கள் பங்கு கொண்ட கருத்தரங்கம், சென்னை எம்.ஒ.பீ வைஷ்னவ கல்லூரியில் இன்று நடைபெற்றது. அமெரிக்க தூதரகத்தின் லாரென் லவ்லேஸ் வெற்றி பெற்ற தொழில் முனைவர்களுடன் அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றை பற்றி கலந்துறையாடினார்.
பெண்களின் வெற்றி, அனைவரின் வெற்றி
கருத்தரங்கின் நெறியாளராக துவக்க உரையாற்றிய லாரென் பெண்கள் தொழிமுனைவதின் அவசியத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். பெண்களுக்கான வாய்ப்பு பத்து சதவிகிதம் உயர்த்தினாலே இந்தியாவின் மொத்த உள்நாட்டு தொகை 2025 ஆண்டில் இரட்டிப்பாகும் என்றும் பெண்கள் வெற்றி பெற்றால், அது அனைவருக்குமான வெற்றியாகும் என்றார்.
மூலதனத்திற்கு அணுகும் சிக்கல், திறன் வளர்ப்பு, பாலியல் பாகுபாடுகள் மற்றும் சரியான வழிகாட்டாளர்கள் இல்லாதது என பெண் தொழில்முனைவர்களுக்கான சவால்கள் உலகெங்கிலும் பொதுத்தன்மை வாயந்தது
என்று உலக அரங்கில் பெண் தொழில்முனைவர்களுக்கான சவால்களை பற்றி பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களிலிருந்து வந்த பெண் தொழில்முனைவர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. பின்னர் அவர்கள் சந்தித்த சவால்கள், விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
எது பெரிய சவால்?
முதல் தலைமுறை பெண் தொழில்முனைவர்கள் சந்திக்கும் பெரிய சவால்கள் என்ன என்ற கேள்விக்கு முதலில் பதில் அளித்தார் உமா ரெட்டி. பெண்கள் அதிகம் இடம்பெறாத மின் உபகரண துறையில் வெற்றி பெற்றுள்ள முண்ணனி தொழில் நிறுவனரான உமா 1984 ஆம் ஆண்டு தனது இறுதி ஆண்டு பொறியியல் படிப்பின் போதே தொழில் முனைப்புடன் செயல் பட்டவர். "தொழில்முனைதலில் பேரார்வம் இருத்தல் அவசியம். நெட்வொர்கிங் என்பதே மிகப்பெரிய சவாலாக கருதுகிறேன். எவ்வளவு நெட்வொர்க்கில் இணைய முடியுமோ, அதில் எல்லாவற்றிலும் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும். அதே போல் நமக்கு அளிக்கப்படுகிற எதிர்மறை கருத்துக்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், அதிலிருக்கும் நல்லவைகளை எதுக்கொள்ள வேண்டும். ஆனால் சூழல் எதுவானாலும் நம்மை உந்தும் சக்தி நம்மிடம் இருக்கும் ஆர்வம் மட்டுமே." என்று பதிலளித்தார்.
தேனி மாவட்டதை சேர்ந்த ஜோசபின் தனது அனுபவத்தை பகிர்ந்தது நெகிழ்சியாக அமைந்தது. தனது சிறு வயது மகனை புற்று நோய்க்கு பறிகொடுத்தது, பின்னர் சில மாதங்களிலேயே தன் கணவரையும் பறி கொடுத்தது என போராட்டதிற்கு நடுவே விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் சவால்களை எதிர்கொண்டதை பற்றி பகிர்ந்து கொண்டார்.
பல முதன்மை செயல்களுக்கு பெயர் பெற்ற பரோ கோபாலக்ரிஷ்னன் விருந்தோம்பல் துறையில் தான் சந்தித்த சவால்களை பற்றி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். "நியூடன் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர்களுக்குமான ஒற்றுமை என்ன என்பதை கேள்வியாக எழுப்பினார். ஒற்றுமை என்பது ஆப்பிள். காலம் காலமாக ஆப்பிள் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஆப்பிள் பழ அடையாளத்தை கொண்டு உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆகவே நம் கண்ணோட்டமும், வாய்புகளை எவ்வாறு பயன் படுத்திகொள்கிறோம் என்பதே நம் வெற்றியை தீர்மானிக்கும்" என மிகவும் சுவாரசியமாக பதிலளித்தார்.
விமர்சனத்தை எதிர்கொள்வது பற்றி?
நம் மீதான அதுவும் பெண்கள் என்பதால் முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்வதை பற்றி பெண் தொழில்முனைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
நம் அனுமதியில்லாமல் விமர்சனங்கள் நம்மை பாதிக்க இயலாது ; நம்மை விமர்சிப்பவரே பிற்காலத்தில் நம் வளர்சியிலும் நம் மீதும் அளவு கடந்த அக்கறை கொள்பவராக மாற வாய்ப்புண்டு ; யார் நம்மை விமர்சனம் செய்கிறார்கள் என்பதே முக்கியம் ; நாம் எதை மேற்கொண்டாலும் விமர்சனம் இருக்கத் தான் செய்யும் ஆகவே நம் கவனம் சிதறாமல் நம் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்
என தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பாலின வேறுபாடுகள் பற்றி?
ஆண்கள் கோலோச்சும் கட்டுமான தொழிலில் தனி முத்திறை படைத்துக் கொண்ட, புதுச்சேரியை சேர்ந்த திருப்தி தோஷி பதிலளிக்கையில்
பெண்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள ஆண்களுடன் போராட வேண்டும் என்று எண்ணுவதை தவிர்த்து அவர்களுடன் இணைந்து பணியாற்றினால் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும்
என அவரின் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்ந்து கொண்டார்.
கருத்தரங்கில் பங்கு பெற்ற தொழில்முனைவர்கள்
நிஷா கிரிஷ்னன், நிறுவனர் சான்னெலம், கொச்சி ; ஜோசஃபின் ஆரொக்கிய மேரி, நிறுவனர், விபிஸ் ஹனி, மதுரை ; திவ்யா ஷெட்டி, இணை நிறுவனர், இந்தியன் சூப்பர் ஹீரோஸ், கோயம்பத்தூர்; உமா ரெட்டீ, நிறுவனர் ப்ரெசிடென்ட், ஈமெர்க், பெங்களூரு ; தீபாலி கோடகே, நிறுவனர், வெப் ட்ரீம்ஸ் & க்ளிக் ஹூப்லி, ஹூப்லி ; திருப்தி தோஷி, நிறுவனர், ஆரோமா க்ரூப், புதுச்சேரி; பரோ கோபாலக்ரிஷ்னன், தலைமை அதிகாரி, வெல்கம் க்ரூப் ஸ்கூல் ஒஃப் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், மணிப்பால் ஆகிய தொழில்முனைவர்கள் பங்கு பெற்றனர்.
தற்போதைய சூழலில் இந்தியாவில் 14% மட்டுமே பெண் தொழில்முனைவர்கள் அல்லது பெண் முன்னடத்தும் தொழில்கள் உள்ளன. பெரும்பாலும் இவை சிறு அளவிலான தொழில் அல்லது சுயநிதி கொண்டு நடத்தப்படும் தொழிலாகவே உள்ளது. இதில் நாம் மகிழ்ச்சி கொள்ளும்படியான செய்தி தென்னிந்தியாவில் தான் பெண்கள் தொழில்முனைதலுக்கான சூழல் உள்ளது என ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு சொல்கிறது. பாலின வேறுபாடுகள், நிதி ஆகியவை தடையாக உள்ளதாக கருதப்படுகிறது.
தங்களை நிலை நாட்டிக்கொள்ள ஆண்களை விட இரு மடங்கு உழைப்பு, பெண் வழிகாட்டிகள் இல்லாதது, தொழில்முனைதல் என்பது இன்றும் ஆண்களுக்கான களமாக பார்க்கப்படுவது என தடைகள் அமைந்தாலும், இதையெல்லாம் முறியட்டிக்கும் படி பெண் தொழில்முனைவர்கள் வெற்றிகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளார்கள்.
மத்திய அரசாங்கத்தின் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மூலமாக பெண் தொழில்முனைவர்கள் வங்கிகளலிருந்து ஒரு கோடி வரை பெறும் வாய்ப்பு, மற்றும் பெண் தொழில்முனைவர்களுக்கென பிரேத்யேகமாக பெருகி வரும் தளம் ஆகியவை தற்போதைய சூழலை மாற்றும்படியாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.