‘இரும்புப் பெண்மணி’ ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் அன்று அவரை நினைவுக் கொள்வோம்!
விருதுகளைக் குவித்த நடிகை, மற்றத் தலைவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர், திறமையான தலைவர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று.
“மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்...” இந்த வார்த்தைகளைப் படிக்கும் போதே நம் மனதில் நிச்சயம் கம்பீரமான ஜெயலலிதாவின் தோற்றமும், கணீர் குரலும் தான் தோன்றும்.
தென்னிந்திய சினிமா வரலாறாகட்டும், இந்திய அரசியல் வரலாறாகட்டும் ஜெயலலிதா என்ற பெயரைக் குறிப்பிடாமல் முழுமை பெற்றுவிட முடியாது. அந்தளவிற்கு வரலாற்றில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா.

இது ஒரு நாளில் மேஜிக் போல் நடந்தது அல்ல... தன் வாழ்க்கையை தானே வரலாறாகச் செதுக்கிக் கொண்டவர் ஜெயலலிதா. அதற்குப் பின்னால் அவர் சந்தித்த வலிகள் ஏராளம். ஆனால் அதையெல்லாம் கடந்து, திறமையான நடிகையாக, அதிகாரமிக்க தலைவராக, மக்கள் மீது பாசம் கொண்ட ஆட்சியாளராக, தன்னம்பிக்கைக்கு அர்த்தமாக இன்று பலருக்கும் முன்னுதாரணம் ஆகி இருக்கிறார்.
“உலக அளவில் அரசியலில் சாதித்த பெண்கள் பார்த்தீங்கன்னா, பெரும்பாலும் அவங்க ஒரு பெரிய தலைவரோட மகளாகவோ, மனைவியாகவோ, அரசியல்வாதி கணவரின் மறைவுக்கு அப்புறம் அரசியலுக்கு வந்தவங்களாவோதான் இருப்பாங்க. ஆனா, இந்த மாதிரி எந்த பின்புலமும் இல்லாம வந்ததுனால, என்னைப் பொறுத்தவரைக்கும், Politics was not a bed of roses for me,'' என தன்னைப் பற்றி ஓர் ஆங்கில பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஜெ.
ஆம், ஜெயலலிதா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மைதான். அரசியல் மற்றும் சினிமாவிற்காக பல போராட்டங்களைச் சந்தித்து, பல தியாகங்களைச் செய்துள்ளார். அதனால் தான், 30 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று அவரால் சாதனை செய்ய முடிந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர் ஜெயலலிதா.
1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அப்போதைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டேவில் பிறந்தவர் ஜெயலலிதா. தந்தை பெயர் ஜெயராமன், தாய் பெயர் வேதவல்லி. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்பதைத் தான் முதலில் ஜெயலலிதாவிற்கு பெயராக வைத்தனர். பின்னர் ஒரு வயதில் அவருடைய பெயர் ஜெயலலிதா ஆனது.
ஜெயலலிதா இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அவரது தந்தை காலமாகி விட்டார். இதனால் தாய் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக் கொண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். அம்மு என செல்லமாக அம்மாவால் அழைக்கப்பட்டார் ஜெயலலிதா. சிறுவயதில் அம்மாவின் அன்புக்காக ரொம்பவே ஏங்கியிருக்கிறார். அதனை அவரே பல பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி காலத்தில் பன்முகத்திறமைசாலியாக திகழ்ந்த ஜெயலலிதா, எப்போதுமே ஆசிரியர்களின் மனம்கவர்ந்த மாணவியாகத்தான் இருந்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். பாரம்பரிய இசையிலும் மேற்கத்திய பாரம்பரிய பியானோவிலும் பயிற்சி பெற்றவர். மோஹினியாட்டம், மணிபூரி, கதக், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர்.
தாய் வேதவல்லி நடிகை என்பதால், ஜெயலலிதாவுக்கு சிறு வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 1961ம் ஆண்டு ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழில் 1965ம் ஆண்டு ‘வெண்ணிற ஆடை’ படம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரால் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தததால் தனது படிப்பை கைவிட்டார்.

அழகான தோற்றம், நடனமாடும் திறமையுடன், நடிப்பும் கைவந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், கன்னடம் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 140 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் இணைந்து மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்த ஜெயலலிதா, 1982ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, தனது அரசியல் குருவான எம்.ஜி.ஆர். துவங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மாநாட்டில் கலந்து கொண்டு, தன்னையும் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ஜெயலலிதா வாழ்க்கையில் ஒரு ரூபாய் என்பதற்கு முக்கிய இடம் உண்டு. முதன்முதலில் அவர் கட்சியில் சேர்ந்த போது, ஒரு ரூபாய் கொடுத்துதான் உறுப்பினர் அட்டையைப் பெற்றார். பின்னாளில் அவர் முதல்வராக பதவியேற்ற போது ஒரு ரூபாயைத்தான் தனது சம்பளமாகப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
“நான் உழைத்தேன்... சினிமாவில் வியர்வையைச் சிந்தி, காலிலும் கையிலும் காயம் பட்டு ரத்தம் சிந்தி உழைத்துச் சம்பாதித்தவள் நான். லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தவள் அல்ல. உண்மையாகத் தொண்டு செய்யும் லட்சியத்துடன் வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் நிழலில் குளிர் காய வந்தவள் அல்ல. எந்த லாபத்திற்காகவும் இங்கே வரவில்லை. பெயரும் புகழும் எனக்கு ஏற்கெனவே நிறைய இருக்கிறது...'' என பேட்டி ஒன்றில் தன் அரசியல் பிரவேசம் பற்றி பேசியுள்ளார் ஜெயலலிதா.
அரசியல் பிரவேசம்
நடிப்பில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக தீவிர அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளர் ஆக்கப்பட்டார். 1984ம் ஆண்டு அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கிலப் புலமையால் அசத்தினார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார்.
1988ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைய, ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. இந்தப் பிரச்சினையால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராத ஜெயலலிதா, 1989ம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தார். தானும் வென்று, சட்டசபையில் 27 இடங்களையும் கைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவியானார்.

1989ம் ஆண்டு தமிழக சட்டசபைக் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. தான் தாக்கப்பட்டதாகச் சொல்லி வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா, ‘இனி மீண்டும் முதல்வராகத்தான் இந்த அவைக்குள் நுழைவேன்...’ என சபதம் செய்தார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்... என்ற குறளை உண்மையாக்குவது போல், தன் சபதத்தில் ஜெயித்து 1991ம் ஆண்டு முதல்வரானார் ஜெயலலிதா. காங்கிரசுடன் கூட்டணி வைத்து மொத்தம் 225 இடங்களைக் கைப்பற்றி முதலமைச்சராக கம்பீரமாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னர் அம்மா என ஜெயலலிதாவை தொண்டர்கள் பாசமாக அழைக்கத் தொடங்கினர். புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ம.கோ. ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்பட்டார்.
முதல்வராக இருந்த அவர், 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்தார். 168 இடங்களில் போட்டியிட்ட போதும், 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோல்வியைத் தழுவினார். தேர்தல் தோல்வியை அடுத்து, அடுத்த அடியாக 1996ம் ஆண்டு கலர் டிவி ஊழலில் கைதுசெய்யப்பட்டு 30 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 2000ம் ஆண்டு பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும் பெற்றார்.
2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் நான்கு வெவ்வேறு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்ததால், அவரது மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
ஆனால், அவர் முதல்வராக பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2001ம் ஆண்டு பிளஸன்ட் ஸ்டே, டான்சி வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட, 2002ம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.
“பொதுவாக என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே பூட்டிக் கொள்கிறேன். அதை வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழந்ததோ, அழுததோ கிடையாது. எனது உணர்வுகள் என்பது மற்றவர்களுக்குக் காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்,” எனப் பேட்டியொன்றில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதனாலேயே அவரை இரும்புப் பெண்மணி என்கிறார்கள்.
முதல்வராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார் ஜெயலலிதா. பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைக்கொண்டு பல நல்ல திட்டங்களை வகுத்தார். தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவைச் சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறப்பு முனைவர் பட்டங்கள், பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு அளித்த தங்க மங்கை விருது, பிலிம் பேர் விருதுகள் என சினிமாவிலும், அரசியல் வாழ்விலும் ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைச்செல்வி' என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
ஏற்ற இறக்கம்
ஜெயலலிதாவின் அரசியல் பயணம் வெற்றியும், தோல்வியும் கலந்தது தான். ஏற்றங்களைப் போலவே பல இறக்கங்களையும் சந்தித்தார். பாராட்டுகளைப் போலவே சர்ச்சைகளிலும் சிக்கினார். மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது, காஞ்சி மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஒரே இரவில் பணிநீக்கம் செய்யப்பட்டது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

2011ம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். திரும்பவும் வழக்குகள் அவரைத் துரத்தியது. 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
அடுத்த ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லாக் குற்றங்களிலிருந்தும் ஜெயலலிதாவை விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இதனால் 2015ல் மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.
2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, பதவியிலிருந்த ஒரு முதலமைச்சரே மீண்டும் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் ஜெயலலிதா.
ஆனால் இம்முறையும் அவரால் முதல்வர் பதவியில் முழுமையாகத் தொடர இயலவில்லை.
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீர் உடல்நலக் குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக தொடர் மருத்துவக் கண்காணிப்பில் ஜெயலலிதா இருப்பதாகக் கூறப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில், திடீரென டிசம்பர் 4ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
“நிச்சயமாக இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமும், வெளியாட்களை சந்திக்க விரும்பாத குணமும் எனக்கு உண்டு. பிறரால் கவனிக்கப்படுவதை முழுமையாக வெறுத்த பெண் நான். ஆச்சர்யமாகத்தான் இருக்கும். உண்மையாகவே பிறரது கவனத்துக்கு ஆளாவதை நான் விரும்பியதே இல்லை. ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதி வசத்தால்தான். உண்மையைச் சொல்லப் போனால் என்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல், பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து செயல்படவே நான் விரும்பினேன்,” என அரசியல்தான் தன்னை இப்படி வலிமையானவளாக மாற்றியதாக பேட்டியொன்றில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் ஆசைப்பட்டது என்னவோ வேறு மாதிரியான வாழ்க்கையைத்தான். ஆனால் காலம் அப்படி அவரை வாழ விடவில்லை. இருந்தபோதும் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இன்று மட்டுமல்ல எப்போதும் சிங்கப் பெண்ணாக, இரும்பு மனுஷியாக நம் மனதில் ஜெயலலிதா கம்பீரமாக வாழ்வார் என்பதில் சந்தேகமேயில்லை.
‘என்னை இகழ்பவர்களுக்கு என் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்வேன்’ என்ற தன் வார்த்தைகளை நிஜமாக்கியவர் ஜெயலலிதா.
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் இவரது வாழ்க்கையிலும் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி கம்பீரமான பேச்சிலும், நிமிர்ந்த நன்நடையிலும், நேர்கொண்ட பார்வையிலும் எதிரிகளுமே பிரமிக்கத்தக்க வகையில், ஆச்சர்யப்படத்தக்க வகையில் நடந்து கொண்டவர் என்றால் நிச்சயம் மிகையாகாது.