'யாஹவி': திறமையான கலைஞர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் பாலம்!
இன்றைய போட்டி சூழ் உலகில் திறமையும் படைப்பாற்றலும் மட்டுமே கலைஞர்களுக்கு அங்கீகாரத்தைத் தேடி தந்துவிடுவதில்லை. தெளிவான திட்டம், சரியான வாய்ப்புகள் போன்ற காரணிகளும் ஒருவரின் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிக்கின்றன. டெல்லியில் செயல்படும் "யாஹவி" (Yahavi) என்ற இணையதளம் திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் கலைஞர்களுக்கு அப்படியான வாய்ப்புகளையும், திட்டங்களையும் அள்ளித் தருகிறது, அதுவும் இலவசமாக.
யாஹவி.காம் என்ற இந்த பரந்த இணையதளம், திறமையான கலைஞர்களை ரசிகர்களிடமும் சக கலைஞர்களிடமும் கொண்டு போய் சேர்க்கிறது. அதேபோல் கிளப்கள், ரெஸ்டாரன்ட்கள், பெருநிறுவனங்கள் ஆகியவை இந்த கலைஞர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு ஏற்ற தளமாகவும் விளங்குகிறது.
தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, டெல்லியைச் சுற்றிலுமுள்ள இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் உள்பட கிட்டத்தட்ட 2000 பேரை இந்தத் தளம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிட வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறார்கள் யாஹவி.காம் அணியினர்.
“வளரும் கலைஞர்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பவை எல்லாம் யாரோ ஒரு இடைத்தரகரின் வயிற்றுக்குத்தான் போகின்றன. இந்த நிலையை மாற்றி கலைஞர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்குமிடையே ஒரு தடையற்ற தொடர்பை உருவாக்க வேண்டும் என நினைத்தே இந்த தளத்தைத் தொடங்கினோம்” என்கிறார் யாஹவி.காமின் தலைமை நிர்வாக அதிகாரி திவ்யேஷ் சர்மா.
தளம் தொடங்கப்பட்ட கதை
சமூகத்திற்கு நம்மாலான எதையாவது செய்ய வேண்டும். அதே சமயம் அது சுற்றியிருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பயன் தரவேண்டும் என யோசித்தார் திவ்யேஷ். அப்போது தோன்றியது தான் யாஹவிக்கான கரு. உடனே ஒரு மில்லியன் டாலர் செலவில் இத்தளத்தை தொடங்கினார். நம் சமூகத்தில் கலைக்கான அளவுகோலை அறிந்துகொள்ளவும், வளரும் கலைஞர்களின் போராட்ட வலியைக் குறைத்து அவர்களுக்கு போதிய வாய்ப்புகளை வழங்கவுமே இந்தத் தளம் தொடங்கப்பட்டது என்கிறார்.
ரசிகர்களுக்கு, திறமையான கலைஞர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும் கற்றுக்கொடுப்பதே இந்த தளத்தின் மையக்கொள்கை. இதன் மூலம் அந்த கலைஞர்கள் மேன்மேலும் வளர்வார்கள் அல்லவா?
கலைக்கு பெருகிவரும் அங்கீகாரம்
பெருநகரங்கள் தோறும் பரவியிருக்கும் பப்புகள், ரெஸ்டாரன்ட்களின் புண்ணியத்தில் நேரடி கலை நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு, நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனால் ஏராளமான கலைஞர்கள் கலையையே தங்களின் முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்ள முன்வந்தபடி இருக்கிறார்கள்.
க்யூகி (Qyuki), கிக்ஸ்டார்ட் (Gigstart) போன்ற நிறுவனங்களின் வருகையால் வளரும் கலைஞர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் துறையாகவும் இது மாறியுள்ளது.
இப்போது இவர்களோடு புதிதாக களத்தில் குதித்திருக்கும் யாஹவி.காம் தன்னை முடிந்தவரை வேறுபடுத்திக் காட்டிகொள்ள முயன்று வருகிறது. ஒவ்வொரு கலைஞருக்கும் பிரத்யேக சந்தையை உருவாக்குவது, அவர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வித்தியாசமான வாய்ப்புகளை வழங்குவது, ரசிகர்களுடன் கலைஞர்கள் நேரடித்தொடர்பில் இருக்க உதவுவது என ஏராளமான ஐடியாக்களை முன்வைக்கிறது யாஹவி.
தொடக்கத்தில், கலைஞர்களின் சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று யாஹவி பற்றி கூறி தன் வட்டத்தில் இணைத்து வந்தார் திவ்யேஷ். இப்போது கலைஞர்கள் தாமாக வந்து இதில் இணைகிறார்கள். கலைஞர்களை இணைத்துக்கொள்ள யாஹவி கடுமையான விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. பதிவுக் கட்டணம் கூட பெறுவதில்லை.
வெற்றிப் பாதையில் யாகவி
யாஹவி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பெரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. ஜாஸ், ஹெவி மெட்டல் போன்ற பிரிவுகளில் மிகப்பெரிய இசைத்திருவிழாக்கள் நடத்த இப்போது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
“நாங்கள் கலைஞர்களிடமோ, நிகழ்ச்சியை நடத்தும் பப்புகள், ரெஸ்டாரன்ட்களிடமோ பணம் வாங்குவதில்லை. எங்களின் வருமானம் முழுவதும் சந்தாவைச் சார்ந்தும் விளம்பரங்களைச் சார்ந்துமே உள்ளன” என்கிறார் திவ்யேஷ்.
டெல்லி மட்டுமல்லாது மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களும் யாஹவியால் வரவேற்கப்படுகிறார்கள்.
இப்போது 40பேர் வரை இந்த இணையதளத்தில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு தலைமை தாங்கும் மையக்குழு வர்த்தகம், தயாரிப்பு நிர்வாகம், மார்க்கெட்டிங் ஆகிய பணிகளை கவனிக்கிறது.
அடுத்த பாய்ச்சல்
அடுத்த ஓராண்டில் தளத்தை பிரபலப்படுத்த ஏராளமான திட்டங்களை வடிவமைத்து வருகிறது யாஹவி. அனுபவம் வாய்ந்த நிர்வாகக்குழுவின் தலைமையில் நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவ முயற்சிகள் எடுத்து வருகிறது இந்தத் தளம். “இசை, நடனம், காமெடி ஆகியவற்றில் திறமைசாலிகளாய் இருக்கும் இந்திய கலைஞர்களை இப்போது மேடையேற்றிக்கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் தென்கிழக்காசியா, மத்திய ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இருக்கும் கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு செல்ல இருக்கிறோம்” என பெருமை பொங்கக் கூறுகிறார் திவ்யேஷ்.
இணையதள முகவரி: Yahavi.com