மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையை விட்டு சென்னையில் பள்ளிக்கூடம் தொடங்கிய ஸ்ரீதர் கோபாலசாமி!
இந்தியாவின் முதல் மைக்ரோ ஸ்கூல் 'கீக்ஸ்' தொடங்கி ஆரம்பக் கல்வியில் புதுமைகள் புகுத்தி சென்னையில் பள்ளியை நடத்தி வருகின்றார் ஸ்ரீதர்.
கல்வியின் தரம் பற்றியும் அதன் சாதக-பாதகங்களை பல முறை அலசி, அதில் என்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற பட்டிமன்றம் பல ஆண்டுகளாக நீண்டு கொண்டு தான் இருக்கிறது. மத்திய கல்வி முறை, மாநில அளவிலான கல்வி முறை என இருந்தது போக இன்று கேம்ப்ரிட்ஜ், சர்வதேச போர்ட் என பல புதிய கல்வி முறைகளும் இந்தியாவுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இவை அனைத்துமே போட்டியையும் அழுத்ததையும் அதிகரிக்கவே செய்துள்ளன.
இன்றைய தலைமுறையினரின் செயல்முறை, அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை ஈடுகொடுக்கவல்ல அறிவு என பல்முனை சவால்களை உள்ளடக்கியதோடு, தனித் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கேற்ப கல்வி முறை என கற்பித்தலின் பரிணாமம் மாறி வருகிறது.
இங்கிலாந்தில் முதலில் அறிமுகமான ’மைக்ரோ ஸ்கூல்’ என்ற கான்சப்ட், கல்வி கற்கும் முறையை மாற்றியமைத்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவில் முதல் முறையாக, நம் சென்னையில் இத்தகைய கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ஸ்ரீதர் கோபாலசாமி.
மைக்ரோ ஸ்கூல் என்றால் என்ன?
பாரம்பரிய பள்ளி முறை அதனுடன் ஹோம் கல்வி முறை, இவை இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே மைக்ரோ பள்ளிக் கல்வி முறை. மிகக் குறைந்த அளவிலான மாணவர்கள், பல்வேறு வயதுடைய மாணவர்கள் ஒன்றாக பயிலும் விதமான அமைப்பு, ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மைக்கேற்ப பயிலும் முறை, இவை எல்லாவற்றையும் விட மற்ற தரமான பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் குறைவான கட்டணம் என மைக்ரோ கல்வி முறை சிறிது வித்தியாசமாக உள்ளது.
இரண்டு வருடம் முன் ’ஆட் ஆஸ்ட்ரா’ என்ற பள்ளியை எலன் மஸ்க் தொடங்கினார். தன் பிள்ளைகளின் கல்வி முறை பிடிக்காமல் தொடங்கப்பட்ட இப்பள்ளியை பற்றி அதிக அளவிலான தகவல்கள் இல்லை என்பதோடு, இவை எலன் மஸ்க் தலைமை தாங்கும் ஸ்பேஸ்ஃஸ் நிறுவன ஊழியர்களுக்கும் மட்டும் உண்டானதாக இருக்கிறது.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மைக்ரோ ஸ்கூல் வளர்ந்து வருகிறது. இதுவே இந்த வழி கல்வி இங்கு பிரபலமாக வளர்ந்து வருவதற்கான காரணியாகவும் அமைந்து வருகிறது.
உந்துதல்
நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர், 90-களில் பெரிய கனவாக பார்க்கப்பட்ட பொறியியல் படிப்பு, பின் அமரிக்காவில் மேற்படிப்பு , வேலை ஆகிய அதே கனவுடன் தான் பயணித்தார்.
"பொறியியல் படிப்பை முடித்து கேம்பஸ் மூலம் வேலை கிடைத்தது. இரண்டு வருடம் வேலை என வாழ்க்கை போனது, என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் வலுத்தது. நண்பருடன் உரையாடலில் அமெரிக்காவில் எம்.எஸ் படிக்கலாம் என்று முடிவெடுத்தோம்,"
என்று தன் ஆரம்பக்கட்ட வாழ்க்கை பற்றி மேலும் பகிர்ந்தார். அப்பா அரசாங்க வேலை என நடுத்தர குடும்பத்திற்கே உரித்தான சவால்கள் முன் நிற்க அமெரிக்காவில் படிப்பு என்பது கடினமானதாக இருந்த போதிலும், மனம் தளரவில்லை என்கிறார் ஸ்ரீதர்.
"வெறும் 2000 டாலருடன் அமெரிக்காவிற்கு 2009 ஆம் ஆண்டு பயணப்பட்டேன். பகுதி நேர வேலை கிடைப்பதில் சிரமம், நடு இரவில் ஒரே வேளை சாப்பாடு என்று அமெரிக்க வாழ்க்கை போராட்டதுடன் துவங்கியது."
மேல்படிப்பு முடித்ததும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை என 2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்க்கை ஸ்திரமாக சென்றது. இந்தியா வரும் எண்ணம் மற்றும் மைக்ரோ கான்சப்ட் கொண்டு பள்ளி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை பற்றி பகிர்கையில்,
சிலிகான் வேலி போன்ற மாடல் ஏன் கல்வியில் வரக்கூடாது என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கூற்று கல்வியை பற்றிய வேற்று சிந்தனையை உண்டாக்கியது, பில் கேட்ஸ்-ன் கல்விக்கான தொண்டு, எலன் மஸ்க்கின் பள்ளி ஆகியவை மைக்ரோ பள்ளி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது,”
என்ற ஸ்ரீதர் அதற்கான தேடலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். இந்த வழி கல்வியை இந்தியாவில் அதுவும் சென்னையில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மைக்ரோசாஃப்ட் வேலையை விடுத்து 2016 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை திரும்பினார்.
சவால்கள்
கீக்ஸ் மைக்ரோ பள்ளியை சென்னை வேளச்சேரியில் தொடங்கினார். பெருகி வரும் பள்ளிகள் ஒரு புறம் இருக்கையில் சில பள்ளிகளில் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பெறப்பட்டு தேர்வும் செய்து விடுகின்றனர். மாற்றங்களை வரவேற்கும் நம் மக்கள், தன் பிள்ளைகளுக்கு சிறந்ததையே தர விரும்பினாலும், பாரம்பரிய கல்வி முறை, அதன் பிறகு ப்ரொஃபஷனல் கல்வி என்ற பாதையில் பயணிப்பதே இலக்காக கொண்டுள்ளனர்.
"அவரவர் திறமை, கற்கும் திறன், விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் கல்வியை பற்றிய புரிதல் இல்லை," என்கிறார் ஸ்ரீதர்.
பெற்றோர்களுக்கு இந்த கல்வி முறை பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும் எடுத்துரைக்க மிகவும் மெனக்கட வேண்டியிருந்தது. தொடங்கிய புதிதில் ஐந்து குழந்தைகளை கொண்டு பள்ளியை நடத்தினோம். தற்பொழுது பதினோரு பிள்ளைகள் உள்ளனர் என்று கடந்து வரும் சவால்களை பற்றிக் கூறினார். இந்த கல்வி முறையில் பாடத் திட்டம் தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது.
"பிள்ளைகள் வழிநடத்தப்படுகிறார்கள், நாங்கள் அவர்கள் மேல் எதுவும் திணிப்பதில்லை. திறன் பயிற்சி, தொழில் நுட்பம் கொண்ட பாடத் திட்டம் என எதிர்காலத்திற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி தரப்படுகிறது."
இந்த பாடத் திட்டத்தை பிறரும் பின்பற்றும் வகையில் பகிர்தலிலும் ஈடுபட உள்ளதாக கூறுகிறார்.
எதிர்காலம்
"தற்போதைய கட்டமைப்பு வசதியில் நூறு பிள்ளைகள் வரை கற்பிக்க முடியும். மெல்ல மெல்ல இந்த கல்வி முறை பற்றிய புரிதல் வரத்தொடங்கியுள்ளது. தற்போது மூன்றாம் நிலை வரை மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளோம். இந்த ஜூன் மாதம் ஐந்தாம் நிலை வரை உயர்த்த உள்ளோம். பாடத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறோம். செயலி மற்றும் மற்றவர்களும் பயன்படுத்த பாடத் திட்டதை தரவுள்ளோம்," என்று அடுத்த கட்ட வளர்ச்சியை பற்றி பகிர்ந்த்தார். சென்னையின் பிற இடங்களிலும் விரிவாக்கும் எண்ணம் உள்ளதாகவும் அதற்கு முன்னர் தன் முதல் பள்ளியில் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்.
2016 ஆம் ஆண்டு ஹௌசிங்.காம் நிறுவனர் அத்வித்தியா ஷர்மா கல்வி தொழில்முனை ஜீனியஸ் மைக்ரோ பள்ளி தொடங்கும் திட்டத்தை பற்றி அறிவித்தார். 500 மைக்ரோ பள்ளிகளை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார். கல்வி என்பது என்றும் சிறந்த தொழில் வாய்ப்புள்ள துறையாகும். தொழில்நுட்பம், புது முயற்சி என இந்தத் துறை என்றுமே சுறுசுறுப்பாக இயங்க வல்லது. ஆகவே இத்துறையில் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் வருங்காலத்தில் மைக்ரோ பள்ளி என்ற முறை பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் கீக்ஸ் போன்ற பள்ளிகள் வரவேற்பை பெறும் என்றே தெரிகிறது.