சாதனையையே வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட 'இன்ஸ்பைரிங் இளங்கோ'
பார்வையற்றவர் என்ற குறைபாடு சாதிக்க ஒரு தடையல்ல என நிரூபித்து உலக சாதனை படைத்தவரின் ஊக்கமிகு பயணம்...
பொது மேடைப் பேச்சாளர், தொழில்முனைவர், பின்னணி குரல் கொடுப்பவர், மேடை பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சுய வளர்ச்சி புத்தக எழுத்தாளர், விளம்பர நல்லெண்ண தூதர் என பன்முகத்தோடு, எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையை பதித்தவர் இளங்கோ.
இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவெனில் இவர் பார்வையற்றவர் என்பதே. அது மட்டுமல்ல 3000 பாடலை நினைவில் கொண்டு பாடியதில் சாதனை, முதல் பார்வையற்ற பின்னணி குரலாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், முதல் பார்வையற்ற நல்லெண்ண தூதர் என உலக சாதனை பட்டியலும் நீள்கிறது.
தன் பெயரைக் கூட ’இன்ஸ்பைரிங் இளங்கோ’ என அழையுங்கள் என்ற விண்ணப்பத்தோடு நம்மிடம் உறையாடினார். ஸ்கூபா டைவிங் எனும் ஆழ் கடல் நீச்சலை மேற்கொள்ளும் முதல் பார்வையற்றவர் என்ற சாதனையை நிகழ்த்தப் போகும் அவரிடம் யுவர் ஸ்டோரி தமிழ் பிரேத்யகமாக நடத்திய உரையாடலின் தொகுப்பு இதோ உங்களுக்காக.
பிறவிலேயே பார்வையற்றவராக பிறந்த இளங்கோ, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்ற திடத்தோடு M.Phil வரை தேர்ச்சி பெற்றார். பள்ளி ஆசிரியராக தன் பணியைத் தொடங்கியவர் பின்பு மெட்ராஸ் பல்கலைகழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.
பொது மேடைப் பேச்சாளராக...
2009 ஆம் ஆண்டு முதல் பேச்சாளராக வலம் வரும் இளங்கோ, 2011 ஆண்டு முதல் தீவிரமாக இதில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார். கல்லூரிகளிலும், நிறுவனங்களிலும் ஊக்கவிக்கும் பேச்சாளராக அழைக்கப்படும் இளங்கோ, தொழில் முனைவு, ஊக்கம் கொள்ளுதல், சுய வளர்ச்சி, தலைமைப் பண்பு, சந்தோஷமாக வாழ்தல், கம்யுனிகேஷன் என பல தலைப்புகளில் பேசி வருகிறார்.
பாடகர், பின்னணி குரல் கொடுப்பவராக...
ரேமண்ட், ப்ரின்ஸ் ஜவெல்லரி, அடையார் ஆனந்த பவன் ஆகிய விளம்பரங்களின் அந்த நிறுவனங்களின் பெயர் உச்சரிப்பு நினைவுக்கு வருகிறதா? அந்த குரலுக்கு சொந்தக்காரர் இளங்கோ. இது தவிர சில தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சிக்னேசர் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
பாடும் திறன் இளம் வயது முதலே இருந்ததாக கூறுகிறார் இளங்கோ. கர்நாடக சங்கீதத்தில் முறையான பயிற்சி, கீபோர்ட் பயிற்சி பெற்றுள்ளார்.
”3000 பாடல்களை நினைவில் கொண்டே பாடி சாதனையையும் படைத்துள்ளார். பாடலுக்கு நடுவே ஊகிவிக்கும் கருத்துகளையும் கூறும் அவரது பாணி பிரபலமானது.
இவரது பாடும் திறனைப் பார்த்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. பார்வையற்றவர்கள் என்றால் இப்படி தான் சித்தரிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடில்லாததால் மறுத்து விட்டதாக கூறுகிறார் இளங்கோ.
நிறுவன தூதராக...
பார்வையற்றவர் ஒரு நிறுவனத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டது நாம் இது வரை கேள்விப்படாதது. இந்த நிகழ்வைப் பற்றி பகிர்கையில்
"2009 ஆம் ஆண்டு சிறந்த இளம் இந்தியன் என்ற கௌவரத்தை பெற வாரனாசி சென்றேன். இது JCI அமைப்பு நடத்திய நிகழ்வு மற்றும் விருது வழங்கும் விழா. போதிய நேரம் இல்லாததால் நிகழ்சியில் மாற்றம் செய்யப்பட்டு, இரவு உணவு ஆரம்பிக்க நிகழ்வும் நடந்து கொண்டிருந்தது. மேடையில் நான் விருது பெறும் நேரத்தில் மிக சிலரே அங்கிருந்தனர், மீதி எல்லோரும் சாப்பிடச் சென்று விட்டனர். விருது பெற்றவுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றேன். ப்ரோடோகால் படி நடந்துக் கொண்டிருந்த நிகழ்வு என்ற போதும் அனுமதித்தனர். நான் பேச ஆரம்பித்ததும் கூட்டம் சேர ஆரம்பித்தது.
அப்படியே பாடவும் ஆரம்பித்தேன், "சப்னோ கி ராணி' பாடல் நிகழ்சியின் போக்கையே மாற்றி அமைத்தது," என கூறியவர் மேலும் NTC லாஜிக்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சந்திர மோகனை அதே நிகழ்வில் சந்தித்ததாக கூறினார். இளங்கோவின் அணுகுமுறை, உத்வேகம் ஆகியவற்றால் கவரப்பட்டு அவரது நிறுவனத்தினற்கு சிறப்பு பேச்சாளராக அழைத்தார். இவ்வாறு தொடர, 2015-ம் ஆண்டு நேர்மறையான எண்ணங்களை பரவலாக்கவும், நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக இலங்கோவை NTC லாஜிக்டிக்ஸ் நியமித்தது.
புதுப்புது சாதனையை நோக்கி...
மாற்றுத் திறனாளிகள் பலர் சாதனை பல புரிகிறார்கள். அதனால் தான் தனித்துவமாய் திகழ வேண்டும் என்று கூறும் இளங்கோ, இதுவே அவர் அடுத்தெடுத்த முயற்சிகளை ஈடுபட உந்துதலாக உள்ளதாகவும் கூறுகிறார்.
"இறந்த பிறகும் உத்வேகத்திற்கான இலக்கணமாக நம்மை உலகமே பார்க்க வேண்டும்... இதுவே இலக்காக கொள்ள வேண்டும்,”
என்று கூறும் இளங்கோ எந்த சாதனையை நோக்கி பயணிக்கலாம் என்று எண்ணும் போது எழுந்தது தான் ஸ்குபா டைவிங் என்கிறார். கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி பெற்று 70 அடி ஆழ் கடலில் டைவ் செய்துள்ளார். வரும் மே மாதத்திற்குள் உலக சாதனை படைக்கவுள்ளதாக கூறும் இவர், அதனையடுத்து மற்றொரு முயற்சிக்கும் தயராகி விட்டார். அது பாரா க்லைடிங் எனும் வானத்தில் பறப்பது. இதற்காக புனே நகரத்தில் ஒரு வார பயிற்சிக்கு செல்கிறார்.
தொய்வின்றி மேலும் மேலும் இது போல் செயல்படும் இளங்கோவின் ரோல் மாடல் யார் என்று கேட்டால்,
"மற்றவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நமக்கு ரோல் மாடல் நாமாகத் தான் இருக்க வேண்டும்..." என்கிறார்.
இன்றைய தலைமுறையினர் பற்றி பேசுகையில்,
"அவர்கள் மீது அதீத அன்பு உள்ளது. சரியாக வழிநடத்தப்பட்டால் ஆக்கப்பூர்வ சக்தியாக இருப்பார்கள். சொல்பவர்கள் சொல்லவேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொன்னால், கேட்பவர்கள் நிபந்தனையின்றி கேட்டு நடப்பார்கள்," என்கிறார்.
தொழில்முனைவர்கள் பற்றி கூறுகையில்
"ஆர்வம் நம் ஒவ்வொரு செயலிலும் ஊன்றிருக்க வேண்டும். பணம் ஈட்டுதல் என்ற இலக்கோடு மட்டும் செயல்படாமல், பிறர் போற்றும் வகையில் அளவீடுகளை உருவாக்க வேண்டும்," என்கிறார்.
பல மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் நம்பிக்கை, ஊக்கம் அளித்து வரும் ’இன்ஸ்பைரிங் இளங்கோ’ தடை என்பது சாதனையாக்கி கொள்ளத்தான் என தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.