உலக புத்தக தினம்: குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பை அறிமுகம் செய்வோம்!
‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்கிறார் மார்ட்டின் லூதர்கிங்.
இத்தனை வலிமைமிக்க புத்தகங்களின் பெருமையைக் கொண்டாடும் நாள் தான் இன்று. ஆம், இன்று உலக புத்தக தினம்.

உலகில் வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவாற்றல் சார்ந்த சொத்துகளை, பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி, ஐ.நா., சார்பில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1995ம் ஆண்டு முதன்முதலில் ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் புத்தக தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும், பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
புத்தகங்கள் என்பவை வெறும் எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு அல்ல. அது, தலைமுறைகளின் வரலாற்றை பதிவு செய்யும் பொக்கிஷங்கள். வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டு செல்ல உதவும் கருவிகள்.

இணையத்தின் அபார வளர்ச்சியால் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், தன்னம்பிக்கை வளரும் என்பதே அறிஞர்களின் கருத்து.
மனிதர்களை நல்வழிப்படுத்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாகவும், நண்பனாகவும் திகழ்கிறது. அதனால் தான் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இன்றைய வாழ்க்கை முறையில் நமது குழந்தைகளுக்கு புத்தகங்கள் என்றால் அவை பாடப்புத்தகங்கள் மட்டும் தான் என்ற சூழல் தான் உள்ளது. ஏனெனில் அவர்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி மற்றும் செல்போனிலேயே முடங்கி விடுவது தான்.
ஆனால், ஒரு கதையை திரையில் காட்சி வடிவமாகப் பார்ப்பதைப் பார்க்கிலும், அதனை புத்தகத்தில் எழுத்துக்களாக படிப்பதே நல்லது என்கிறார்கள். ஏனெனில் திரைக் காட்சியில் அதனை உருவாக்கிவரின் கற்பனைத் திறனே காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால், எழுத்துக்களைப் படித்து, நமது மனத்திரையில் விரியும் காட்சியில் நமது கற்பனைத் திறன் மறைந்திருக்கும்.
எனவே தான் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள். சமூகம் சார்ந்த நுால்களை வாசிக்காமல், அவர்களுக்கு சமூக அறிவு எப்படி வரும்.

‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான்’ என்றாராம் மார்டின் லூதர்சிங்.
‘உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்...!’ என்பது டெஸ்கார்ட்ஸ்-ன் அறிவுரை.
விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சகம் போல, ஒவ்வொரு புத்தகமும் பல்வேறு எண்ணங்களையும், உணர்வுகளையும், கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தன்னகத்தே ஒளித்தே வைத்துள்ளது.
இன்று பெரும்பாலானோர் தூக்கமின்மையால், மன அழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவற்றிற்கு அரிய மருந்து புத்தகங்கள் தான் என்றால் மிகையில்லை. ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, நிச்சயம் அதில் மூழ்கிப் போகாமல் வாசகனால் இருக்க முடியாது. எனவே மனதை ஒருமுகப்படுத்த புத்தக வாசிப்பை விட அருமருந்து வேறொன்றுமில்லை எனலாம். புத்தகம், தனிமை துயர் தீர்க்கும் மாமருந்து
‘போதும் என்று நொந்துபோய் புதுவாழ்க்கையைத் தேடுகிறீர்களா, ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்கு’ என்கிறார் இங்கர்சால்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. நாம் நம் குழந்தைகளுக்கு செய்யும் நல்ல விஷயமாக, வீடு தோறும் ஒரு சிறிய நூலகத்தை அமைக்க குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டலாம். அது முடியாதவர்கள் அருகில் உள்ள நூலகங்களுக்கு அவர்களைச் சென்று புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யலாம்.
‘புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது’ என்கிறார் சிசரோ.

புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஒரு முறை வாசிப்பின் ருசி கண்டவர்கள் நிச்சயம் அதில் இருந்து வெளிவர விரும்ப மாட்டார்கள். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றைப் பார்த்து உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்ளாமல், நம் இளைய தலைமுறை சீரிய சிந்தனையும், தெளிந்த நல் அறிவும் கொண்டதாக வளர நம்மால் இயன்ற அளவு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி, அறிவார்ந்த புத்தகங்களை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்வோம்.
புத்தகங்கள்தான் சான்றோர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் கருவியாக உள்ளது. எனவே நம் குழந்தைகளுக்கு வாசிப்பின் மகத்துவத்தை எடுத்துரைப்போம், புத்தகங்களைக் கொண்டாடுவோம்.
உலக புத்தக தினம் பற்றிய மேலும் சுவாரஸ்யமான செய்திகளைத் தெரிந்து கொள்ள...