’குறுக்குவழியை தவிர்த்து, துணிவுடன் தொழில் புரிய வேண்டும்’- கமல் ஹாசன்
சென்னை சர்வதேச மையத்தில் தொழிலதிபர்களிடையே கமல் பேச்சு
சென்னை சர்வதேச மையம் என்ற அமைப்பு தங்களின் தொடர் நிகழ்வாக ’தலைமைத்துவ பார்வை: அடுத்தகட்ட பாதை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர். மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல் ஹாசன் இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாற்றமாக இருங்கள்
நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களிடம் கமலஹாசன் பேசுகையில்
”இங்கு இருக்கும் உங்களைப் போல் பெரிய அளவில் இல்லையேனும் நானும் தொழில் முனைவராக இருந்துள்ளேன். பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கியும் இருந்துள்ளேன். இன்று நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்குக் காரணம் நாமே. மேல்மட்ட அறிவு சார்ந்த மக்கள் அமைதியாக இருந்ததும் காரணம். ஆனால் காலங்கள் மாறிவிட்டன, இனியும் கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற சூழலும் மாறிவிட்டன,”
என்று தொடங்கிய அவர், மாற்றம் என்பது தனி மனிதனால் கொண்டு வர இயலாது என்றும் இங்கிருக்கும் தொழில் முனைவர்கள், முதலாளிகளும் நம் மாநிலம் செழிக்க கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தொழில்முனைவர்களுக்கான காலம்
ஒரே மாதிரியான நிறுவனங்களுக்கான காலம் முடிந்து விட்டது.
"எதிர்காலம் சிறிய மற்றும் தொழில்முனைவர்களுக்கானது என்று கூறிய கமல், நாம் அனைவரும் நம்மை வளர்த்த மாநிலத்திற்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம் ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அரசியலமைப்பு மிகுந்த மாநிலத்தில் இனிமேலும் அரசியலில் இருந்து ஒதுங்கி நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கமலின் பேச்சை தொடர்ந்து கேள்வி பதிலுக்கான நேரம் அமைக்கப்பட்டிருந்தது. அவரின் அரசியல் வடிவம், வெற்றிக்கான யுத்தி என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அறிவார்ந்த ஈர்புகள் வெகுவாக குறைந்துள்ளதை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
"அதுவும் நாம் செய்த தவறு. என்னுடைய தொழிலில் அதை உணர்ந்து அறிவார்ந்த சினிமாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன், பல விமர்சனங்களுக்கிடையில் என்னால் முடிந்த அளவிற்கு அதை நோக்கி பயணித்துள்ளேன், இது மற்ற எந்த துறைக்கும் பொருந்தும், அது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.
மாநிலத்தின் வருவாயை உயர்த்துவது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், டாஸ்மாக் ஒன்று மட்டுமே முக்கிய வருவாய் என்றல்ல, நம்மிடம் கொள்ளை அடிக்கப்படுகிற பணத்தை நிறுத்தினாலே வருவாய் கூடும் என்றார்.
பொருளாதார திட்டம் பற்றி பதிலளிக்கையில் தனக்கு அந்தத் துறையில் போதிய அளவு புரிதல் இல்லாததால் பதினேழு பேர் கொண்ட ஹார்வார்ட் குழு அதை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
தொழில் புரிபவர்கள் துணிவுடன் பெரிய இலக்கை நோக்கி பயணிக்கலாம் ஆனால் பேராசையுடன் இருத்தல் கூடாது என்றார். வழிமுறைகளை தகர்த்து குறுக்கு வழியில் தொழில் புரியும் எண்ணத்தை விட வேண்டும் என்றும் கூறினார்.
ஸ்மார்ட் நகரங்கள் தானாக அமைந்துவிடும், ஸ்மார்ட் கிராமங்கள் நோக்கி நம் பயணம் அமைய வேண்டும் என்று தன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.