8 ஆயிரம் பறவைகளை தினமும் விருந்தாளியாக பெறும் சென்னை ’பறவை மனிதன்’
ஜோசப் சேகர் ஒரு புகைப்படக்கலைஞர். ஆனால் அவரை பலரும் ‘பேர்ட்மேன்’ அதாவது ‘பறவைமனிதன்’ என்றே அழைக்கின்றனர். சென்னையில் வசிக்கும் ஜோசப் இதுவரை பல்லாயிரக்கணக்கான கிளிகளை தன் வீட்டுக்கு விருந்தாளியாக பெற்றுள்ளார் என்பதே அவரின் பெயரின் பின்னுள்ள கதை. 63 வயதாகும் ஜோசப், கடந்த 11 ஆண்டுகளாக தனது வருமானத்தில் பாதியை பறவைகளின் உணவிற்கு செலவிட்டு வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் ஜோசப், தினமும் 30 கிலோ அரிசியை தன் வீட்டு மொட்டைமாடியில் போடுகிறார். இதை கொத்தி தின்பதற்கு சுமார் 8000 பறவைகள் தினமும் இவர் வீட்டை தேடி வருகிறது. 2004-ல் சென்னையை சுனாமி தாக்கியபோது ஏற்பட்ட இந்த எண்ணம் இன்று வரை தொடர்கிறது. அதற்கு முன்பு தினமும் சிறிதளவு அரிசி, அணில்களுக்கு நீர் மற்றும் குருவிகளுக்கு தானியங்களை போடுவார். ஆனால் சுனாமி சமயத்தில் அழிந்துவரும் அரிய வகைப் பறவையான பச்சைக்கிளிகள் இவரின் வீட்டிற்கு இரை தேடி வந்தது. அப்பறவைகளின் பசி தீர்க்க முடிவெடுத்த ஜோசப் அன்று முதல் அதிக உணவுகளை போட தீர்மானித்தார்.
தன் மொட்டை மாடியில் மரப்பலகை கொண்டு வரிசையாக அமைத்து, அதில் அரிசியை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போடலானார். அவர் அப்படி செய்த ஒரு சில நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் மொட்டைமாடியை சூழ்ந்து விடுகிறது. பறவைகள் வந்து, உணவை தின்றுவிட்டு பறந்து சென்றுவிடுகின்றது.
இதே போல் 2015-ல் சென்னை வெள்ளம் வந்த சமயத்திலும் ஜோசப்பின் வீட்டு மாடியில் அதிக பறவைகள் குவிந்தன. ஒரே நேரத்தில் 3000 பச்சைக்கிளிகள் உட்காரக்கூடிய அவரது மாடியில் இப்போது 5 ஆயிரம் பறவைகள் வரை வருகின்றன.
“சாதரண நாள் ஒன்றில் என் மொட்டைமாடியில் பறவைகள் வந்து சென்றதும் இரு முறை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். பறவைகள் கொத்தித் தின்றுவிட்டு அரிசி, தானியங்களை தரையில் கொட்டிவிட்டு செல்லும். ஆனால் மழை நாட்களில் மாடியை ஐந்து முறை சுத்தம் செய்யவேண்டி இருக்கும். அரிசி தண்ணீரில் கரையாமல் இருக்க மேலும் கண்காணிப்பாக இருப்பேன்,” என்று நியூஸ் மினிட் பேட்டியில் கூறியுள்ளார் ஜோசப்.
வளையம் கழுத்து கொண்ட பச்சைக்கிளிகள் நகரங்களில் பார்ப்பதே அரியது ஆகும். இப்போது அவை ராயப்பேட்டை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. அவ்வகை பச்சைக் கிளிகள் பற்றி விவரித்த ஜோசப் சேகர்,
”அவை பழங்களை உண்ணும். ஆனாலும் தானியங்களை வேகமாக கொத்தி உண்ணமுடியும் என்பதால் அதையே தேடி வரும். அதிக ஜனநடமாட்டம், வண்டிகளுக்கிடையே வேகமாக வந்து அரிசியை கொத்தித் தின்றுவிட்டு பறந்து செல்வதில் வல்லமை படைத்தவை பச்சைக்கிளிகள்,” என்கிறார்.
கட்டுரை: Think Change India