பள்ளிக் கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியை 'சீமா காம்ப்ளே'வின் கதை!
நான் படித்துக்கொண்டிருந்த தனியார் பள்ளியிலிருந்து நகராட்சி பள்ளிக்கு மாறவேண்டியிருந்தது. இந்த நகராட்சி பள்ளியில் நிஜ கல்வியறிவை விட எழுத படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையே முக்கியமாகக் கருதப்பட்டது. புரிந்து படித்தலைவிட மனப்பாடம் செய்வதே அங்கே முக்கியம். முதல் தடவையாக அந்த பள்ளியில்தான் அடி வாங்கினேன். கல்வியில் சமத்துவமின்மை நிலவுவதை அங்கேதான் முதன்முதலில் உணர்ந்தேன். என் தரநிலையும் வீழ்ச்சியடைந்தது. கவனச்சிதறல்களும், இடர்பாடுகளும் மிகுந்த ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது மிகவும் சிரமமான காரியமாயிற்றே!
சீமா காம்ப்ளே பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர். அவர் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தபோது அவரது குடும்பம் மும்பையின் வோர்லிக்கு இடம்பெயர்ந்தது. அந்த இடம் மட்டுமல்ல, அந்த ஒட்டுமொத்த சமூகமும் அவருக்கு புதிதாய் இருந்தது. எல்லாம் முறையாய், ஒழுங்காய் இருந்த ஒரு சூழ்நிலையிலிருந்து ஒழுங்கற்ற, குழப்பமான ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்தது அவருக்கு சிரமமான காரியமாய் இருந்தது. அந்த புதிய இடம் அவரின் தன்னம்பிக்கையை முற்றிலுமாய் குலைத்துப்போட்டது. ஆனாலும் வீழ்ந்துவிடக்கூடாது என்ற உறுதி அவருக்கு அந்த காலகட்டத்தை கடந்துவர உதவியது.
எல்லாம் நன்மைக்கே!
அகங்ஷா பவுண்டேஷன், வோர்லியில் ஒரு கற்றல் மையத்தை தொடங்கியபோது சீமா ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அதென்ன கற்றல் மையம்? ஒருவேளை டியூஷன் சென்டராய் இருக்குமோ? என்ற ஆர்வம் சீமாவிற்கு ஏற்பட, அங்கே சென்றார். ஆனால் அங்கே அவருக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. அங்கே ஒவ்வொருவரின் தனிப்பட்ட மனபோக்கிற்கும் மதிப்பளிக்கப்பட்டது. அங்கே இருந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். இது சீமாவையும் அந்த மையத்தில் இணையத் தூண்டியது.
“அந்த மையத்தில் எனக்கு ஆசிரியராய் இருந்த ராஜ்ஸ்ரீ அக்கா என்னை சிறப்பாக செயல்பட தூண்டினார். (அந்த மையத்தில் ஆசிரியர்கள் அனைவரையும் அண்ணா, அக்கா என்றுதான் அழைக்கிறார்கள் மாணவர்கள்). என்மீது என்னைவிட அதிக நம்பிக்கை வைத்து என் கனவுகளை நோக்கி நடைபோட உதவினார்” என்கிறார் சீமா.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நகராட்சி பள்ளிகளில் ஏழாம் வகுப்பு வரைதான் ஆங்கில வழிக் கற்றல் நடைமுறையில் இருக்கிறது. அதன்பின் மராத்திய மொழி வழியாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மீண்டும் தனியார் பள்ளிக்கே மாறினார் சீமா. இரண்டு பள்ளிகளுக்கும் கல்விதரத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சீமாவின் தரநிலை மீண்டும் மோசமடைந்தது. மீண்டும் தன்னம்பிக்கையை இழக்கத் தொடங்கினார் சீமா. அந்த காலகட்டத்தில் அவருக்கு உதவியாய் இருந்தது ராஜ்ஸ்ரீதான். “நான் சராசரியாய் படிக்கும் மாணவி. அவ்வப்போது அகங்ஷா வகுப்புகளை கட்டடிக்க முயற்சி செய்வேன். அந்த சமயங்களில் எல்லாம் நான் இருக்குமிடத்திற்கே வந்து என்னை வகுப்பிற்கு அழைத்துச் செல்வார் ராஜ்ஸ்ரீ அக்கா” என்கிறார் சீமா.
சீமா பத்தாவது முடித்தபோது, அந்த குடும்பத்தின் ஒரே நம்பிக்கை அவர்தான் என்பதை அறிவுறுத்தினார் சீமாவின் தாய். “எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அது என் படிப்பிற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதில் என் அம்மா தெளிவாக இருந்தார்” என்கிறார் சீமா.
திருப்பித் தருவேன்!
தனக்கு கல்வி கொடுத்த இந்த சமூகத்திற்கு தன்னால் இயன்றதை திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் சீமாவிற்கு ஏற்பட்டது. தன் வாழ்க்கையைத் தீர்மானிக்க ஒருவர் உதவியதைப் போல தானும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தார் சீமா. கல்லூரியில் நுழைந்த பின்பு ஓய்வு நேரங்களில் பகுதி நேர ஆசிரியராக தொண்டு நிறுவனங்களில் பணியாற்றத் தொடங்கினார் சீமா. தன்னைப் போன்ற பிற சீமாக்களுக்கு ராஜ்ஸ்ரீயாக இருந்து உதவவேண்டும் என்ற அவரின் எண்ணமே இதற்கு காரணம். அதிகாலையில் எழுந்து குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பது, பின் கல்லூரிக்கு செல்வது, மாலையில் கூடுதல் வகுப்புகள் என கற்பனை செய்து பார்க்கமுடியாத அட்டவணை சீமாவுடையது. “அட்டவணை நெருக்குவதாய் இருந்தாலும் திருப்தியளிப்பதாய் இருந்தது. தினமும் வீடு திரும்ப இரவு பத்து மணியானாலும் அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. இன்னமும் அதிக நேரம் குழந்தைகளுக்காக செலவிட தயாராகத்தான் இருந்தேன். என் நோக்கம் ஒன்றுதான். எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கற்பிப்பது” என்கிறார் சீமா.
கல்லூரி படிப்பு முடிந்தபின் அகங்ஷா பவுண்டேஷனிலேயே முழுநேர ஊழியராய் பணியாற்றத் தொடங்கினார் சீமா. அந்த சமயத்தில்தான் ஒரு எம்.பி.ஏ பட்டம் தன்வசம் இருந்தால் பொருளாதார ரீதியாக தன் குடும்பம் நிலைப்பட உதவியாய் இருக்குமே என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
“2009ல் “டீச் பார் இந்தியா(Teach For India) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு பட்டதாரிகளை முழுநேர ஆசிரியர்களாக பணியாற்ற அழைப்பு விடுத்தது. அந்த அமைப்பை தோற்றுவித்த ஷாகீன் மிஸ்ட்ரியோடு எனக்கிருந்த பழக்கம் காரணமாக அந்த அமைப்போடும் தொடர்பில் இருந்தேன். ஆனால் அதில் முழுநேர ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எழவில்லை. ஷாகீனின் வற்புறுத்தலையும் மீறி நான் எம்.பி.ஏ நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தேன். 2010ல் ஒருநாள், ஷாகீன் என்னை அழைத்து, நான் டி.ஐ.எப் அமைப்பில் சேர்வது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்கூறினார். அதன்பின்தான் நான் அங்கே ஆசிரியராய் பணியாற்ற முழுமனதோடு சம்மதித்தேன்” என்கிறார் சீமா.
ஆனால் தான் ஆசிரியர் வேலைக்கு தகுதியானவள் இல்லையோ என்ற பயம் சீமாவிற்கு நிறையவே இருந்தது. ஆனால் அவருக்கு ஆசிரியர் வேலையை பற்றித் தெரிந்ததைவிட குழந்தைகள் பற்றி அதிகம் தெரிந்திருந்தது. இதனால், டி.எப்.ஐயில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அதோடு மும்பையைச் சேர்ந்த வெல்லிங்கர் மேலாண்மை நிறுவனத்தில் எம்.பி.ஏ படிக்க முழு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது. இரண்டு வெவ்வெறு துறைகளில் ஒரே நேரத்தில் செயல்பட நேர்ந்தாலும் சீமா தடுமாறவில்லை.
“சமத்துவமான கல்விமுறைக்காக உழைப்பது என அப்போதே தீர்மானித்துவிட்டேன். எம்.பி.ஏ படிப்பை ஒரு சாக்காய் வைத்து என்னால் இந்த பொறுப்பை தட்டிக் கழித்திருக்க முடியும். ஆனால் நான் கல்விமுறையில் சமத்துவமின்மையால் பட்ட சிரமங்களை எனக்கு அடுத்து வருபவர்கள் படக்கூடாது என்ற எண்ணமே அப்படி நான் செய்யாததற்கு காரணம். சவால்களை வென்று வளர்ந்த எனக்கு, நான் செல்லவேண்டிய பாதை தீர்மானமாய் தெரிந்தது“ என்கிறார் சீமா.
தன்னுடைய வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்த சீமா ஆசிரியர் பணிக்காக தேர்ந்தெடுத்தது புனேவை. ஆனால் ஆசிரியராய் முதல் ஆண்டு அவருக்கு இனிமையாய் இருக்கவில்லை. தன்னுடைய மாணவர்களுக்கு கற்பிக்குமளவு தனக்கு திறமையில்லை என நினைத்தார் சீமா. வகுப்பறைகளுக்கு குரங்குகள் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால் மாணவர்கள் பள்ளிக்கு வரவே பயந்தார்கள். போதாக்குறைக்கு பள்ளியின் தலைமையாசிரியர், சீமாவின் திறன்மேல் சந்தேகம் கொண்டிருந்தார். காரணம் சீமாவிற்கு அப்போது இருபதிற்கும் குறைவான வயதுதான். இப்படி பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லாத இடத்தில்தான் பணியாற்றிவந்தார் சீமா. ஆனால் சீமாவின் கற்பிக்கும் ஆற்றலால் கவரப்பட்ட ஒரு குழந்தை அவரை இறுகக் கட்டியணைத்த சம்பவம் இந்த அத்தனை கசப்பையும் மறக்கடித்தது.
காலபோப்க்கில் தலைமையாசிரியரும் சீமாவின் பணியை பாராட்டத் தொடங்கினார். இரண்டாவது ஆண்டில், பாடத்திட்டத்தை வடிவமைக்கும் அளவிற்கு வளர்ந்தார் சீமா. தான் சிறுவயதில் பட்ட சிரமங்கள் கல்வி ஒருவருக்கு எத்தனை அத்தியாவசியம் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்தது. “சார்லியும் சாக்லேட் பேக்டரியும் கதையை குழந்தைகளைக் கொண்டு இசைவடிவில் வழங்கியதே அங்கே ஆசிரியராக நான் செய்த கடைசி வேலை. என் கனவு நிஜமான நாள் அது! அந்த நிகழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் வந்திருந்தார்கள். இப்படி திறமையாய் பெர்பார்ம் செய்வது நகராட்சி பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் என்பதை அந்த அதிகாரிகளால் நம்ப முடியவில்லை. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என அந்தப் பள்ளி குழந்தைகள் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். நம்புங்கள். மாணவர்களால் எதுவும் முடியும். நீங்கள் உங்கள் நம்பிக்கையை அவர்கள் மீது வைத்தால் போதும்” என்கிறார் சீமா.
கற்பித்தலே யாதுமாய்...!
“கற்பித்தல்தான் எனக்கான தளம் என்பதை உணர்ந்துகொண்டேன். முந்தைய பணியில் சிறிய அளவிலான மாற்றங்களை என்னால் நிகழ்த்த முடிந்தது. அதை இன்னும் பெரிய அளவில் நிகழ்த்த விரும்பினேன். டி.எப்.ஐயில் கவுரவ்(3.2.1 பள்ளிகளின் நிறுவனர்) என்ற நண்பர் அறிமுகமானார். அவர் முன்பு ஒரு நிகழ்ச்சியின்போது, நான் சீக்கிரமே ஒரு பள்ளி தொடங்குவேன். அப்போது அங்கே வந்து நீ பணியாற்ற வேண்டும் என கேட்டிருந்தார். 2012ல் கவுரவின் 3.2.1 மழலையர் பள்ளியில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாக தெரிய வந்தது. ஆனால் எனக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்ததால் முழுநேர ஆசிரியராக வேலை பார்க்கத் தயங்கினேன். ஆனால் கவுரவ் என் மனதை மாற்றினார்” என்கிறார் சீமா. முதல் இரண்டு ஆண்டுகள் மழலையர் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றிய சீமா பின் கிரேட் லீடரானார். ஒவ்வொரு கிரேடிலும் 120 மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் மனப்போக்கினை ஆராய்வது, அதற்கேற்ப பாடங்களை கற்பிப்பது ஆகியவை சீமாவின் வேலைகளாய் இருந்தன. இப்போது அவர் 3.2.1 குழுமத்தின் அகடமிக்ஸ் தலைவராய் இருக்கிறார். பிரின்சிபாலுக்கு இணையான பதவி இது. “குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இருதரப்பினருக்கும் ஒரே முறையில்தான் கற்பிக்க வேண்டியதிருக்கிறது” என்கிறார் சீமா.
இந்திய கல்விமுறை குறித்த பார்வை
சீமாவை பொறுத்தவரை இந்தியாவில் கல்வி சமத்துவமின்மை பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. “கல்வி சமத்துவமின்மை இன்னும் இங்கே ஒரு நெருக்கடியாக பார்க்கப்படவில்லை. கல்விமுறையில் ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கான தீர்வை தேடுவோம். அதே கல்விமுறையில் நெருக்கடி என்றால் என்ன செய்தாவது தரத்தை காப்பாற்ற முயல்வோம். அப்படியான நெருக்கடியும் அதற்குத் தகுந்த எதிர்வினைகளும்தான் நமக்கு இப்போது தேவை” என்கிறார் சீமா.
இந்திய கல்விமுறையை பொறுத்தவரை சமத்துவமின்மை என்பதைத்தாண்டி நிறைய துணை பிரச்சனைகளும் இருக்கின்றன. அவற்றில் சில,
சுகாதாரமின்மை: குறிப்பிட்ட ஒரு இடத்தில் முறையான கழிவறை வசதிகள் இல்லாவிட்டால் அந்த இடத்தைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து நோய்களால் அவதிப்படுகிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களால் எப்படி தொடர்ந்து பள்ளிக்கு வரமுடியும்?
வறுமை: ஒன்பது பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 5000 ரூபாய் என்றால், அந்தப் பணம் முழுவதும் சாப்பாட்டிற்கே செலவாகிவிடுமே. பின் எப்படி கல்விக்காக செலவழிப்பது?
கற்பித்தல் தொழிலாகிவிட்ட கொடுமை: முன்பு ஒரு மாணவனுக்கு இறைவனை முதலில் வணங்குவதா இல்லை தனக்கு கற்பித்த குருவை முதலில் வணங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டதாம். சட்டென முடிவெடுத்த அவன் குருவை முதலில் வணங்கினானாம். குருதானே இறைவன் இருப்பதையே அவனுக்கு கற்பித்தார். எனவேதான் அந்த முதல் மரியாதை.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. குருவை புகழ்ந்து பாடிய கபீர் வாழ்ந்த மண்ணில் இன்று ஆசிரியர் பணி என்பது எல்லாருக்கும் கடைசி சாய்ஸாகத்தான் இருக்கிறது. ஆசிரியர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. இப்படி ஆசிரியர்களின் நிலைமையே மோசமாய் இருக்கும்போது அவர்கள் கற்பிக்கும் கல்வி மட்டும் சிறப்பாக இருக்கும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
அரசின் கல்விக் கொள்கைகளை பற்றிய தன் பார்வையை பகிர்ந்து கொள்கிறார் சீமா. “ஆர்.டி.ஈயின் பல கொள்கைகள் நல்ல பலனளிப்பதை பார்க்கிறேன். மதிய உணவு வழங்கும் திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உணவு இலவசமாய் கிடைக்கிறது என்பதற்காகவே தவறாமல் பள்ளிக்கும் வரும் எத்தனையோ குழந்தைகள் நம்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம், ஆர்.டி.ஈயின் பல கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. உதாரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்க நிறைய திட்டங்களை வைத்திருக்கிறது ஆர்.டி.ஈ. ஆனால் அவர்களை தொடர்ந்து பள்ளியில் தக்க வைக்கும் முயற்சியில் பெரிய அளவில் அது ஈடுபடவில்லை” என்கிறார் சீமா.
ஆர்.டி.ஈயின் கூற்றுப்படி கல்வியறிவு என்பது எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. உண்மையான கற்றலை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. ஆசிரியர்கள், பிரின்சிபால்கள் உதவியோடு கற்றலை ஆதியிலிருந்து மேம்படுத்தும் வகையில் உறுதியான கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும். சகல தரப்பினருக்குமான ஒரு முழுமையான அணுகுமுறையை கையாள வேண்டும். அரசும் தன்னார்வ அமைப்புகளும் கைகோர்த்தால் கல்வித்துறையில் துரிதமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டுவர முடியும். வீரியமான தீர்வுகளையும் எட்ட முடியும். பொதுமக்களும் பகுதிநேர ஆசிரியர்களாகவோ, நிதி முதலீட்டாளர்களாகவோ தங்களால் இயன்றதை செய்ய வேண்டும்.
நம் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் கல்வி சமத்துவமின்மையை போக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. எம்.பி.ஏ படித்திருந்தும் தன் ஆத்ம திருப்திக்காக முழுநேர ஆசிரியராக பணியாற்றும் சீமா போன்ற நாயகிகளும் நாயகர்களும்தான் நமக்கு நம்பிக்கையளிக்கிறார்கள். இவர்கள் பாராட்டுக்காக இப்படி செய்யவில்லைதான். அதற்காக பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன? கல்வி சமத்துவமின்மை என்பது நம் அனைவரின் பிரச்சனை. எனவே நாம் அனைவரும் இணைந்துதான் அதற்கான தீர்வை முன்னெடுக்க வேண்டும். இதைத்தான் இந்த நாயகர்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். சரியான திசையில் எடுக்கப்படும் சிறிய முயற்சியும் வெற்றியை நோக்கிய பெரிய முன்னேற்றம்தானே.