அஞ்சேல் 11|மனநிறைவை நாடுக - நடிகர் விதார்த் [பகுதி 2]
தமிழின் கவனத்துக்குரிய நடிகர் விதார்த் பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவு பகுதி.
(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)
என் நடிப்புக்கு இன்ஸ்பிரேஷேனே நான் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்தான். உங்களை நான் சந்திக்கிறேன் என்றால், உங்களின் இயல்புகளைக் கவனிக்கத் தவறமாட்டேன். அவற்றில் என்னை பாதித்தவற்றை என் கதாபாத்திரங்களில் தேவையான இடத்தில் பயன்படுத்துவேன்.
உதாரணமாக, 'குற்றமே தண்டனை'யை எடுத்துக்கொண்டால், அந்தக் கதாபாத்திரத்தின் சின்னச் சின்ன உணர்வு வெளிப்பாடுகளில் இருந்து சாலையில் நடக்கும் விதம் வரை எல்லாமே நிஜ மனிதர்களிடம் இருந்து பெற்றவைதான். நிறைய பயணம் மேற்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுற்றித் திரிவேன். இயல்பான மனிதர்களை சந்திப்பேன். அவர்களையே என் நடிப்புக் கலைக்கான குருவாக கருதி நிறைய கற்றுக்கொள்வேன்.
தமிழில் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் எஸ்.வி.சுப்பையா, ரங்காராவ், தங்கவேலு, பாலையா, சுருளிராஜன் முதலான உறுதுணை நடிகர்கள்தான் எனக்கு முன்னோடிகள். 'மாஸ் ஹீரோ' என்பதற்கு மட்டும்தான் இங்கே முக்கியத்துவம் அதிகம் தரப்படுகிறது. ஒரு படத்தில் உறுதுணை நடிகர்களின் பங்களிப்பு சரியாக இல்லாத பட்சத்தில், எந்த மாஸ் ஹீரோ கதாபாத்திரமும் தனித்து வெற்றியை ஈட்ட முடியாது. ஒரு வீட்டுக்கு பூஜை அறையைப் போலவே சமையலறையும், கழிவறையும் மிகவும் முக்கியம். அதுபோலவே ஒரு சினிமாவின் பல தரப்பின் பங்களிப்பும் சரியாக அமைய வேண்டும். எனவே, பங்களிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.
சரியான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ஓரளவு வெற்றி பெற்ற பிறகு வந்து குவிகின்ற வாய்ப்புகளைக் கவனத்துடன் கையாள வேண்டும். இதில் சொதப்பினால் நம் எதிர்காலமும் சொதப்பலாகிவிடும். 'மைனா'வுக்குப் பிறகு நான் சரியான படங்களைத் தேர்வு செய்யவில்லை என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால், நான் முழு ஈடுபாட்டுடன்தான் இயங்கினேன். அதற்கான பலன் சற்று தாமதமாகவே கிடைத்து வருகிறது. 'காடு' எனும் முன்முயற்சிப் படம் ஒன்றில் நடித்தேன். அதற்குத் தனிப்பட்ட முறையில் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தப்போது 'காடு' படம் பற்றிப் பேசிய விஜயகாந்த் சார், "அற்புதமான படம்ப்பா. அது ஏன் சரியா போகலை?" என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்தபோது வியந்து பார்த்த நடிகருக்கு என் படம் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்பட்டிருப்பதை நேரடியாக அறிந்தது மறக்க முடியாத அனுபவம். இதேபோல் 'ஆள்' படமும் பேசப்பட்டதே தவிர தியேட்டரில் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.
இந்த நிலை இன்றளவும் தொடர்கிறது. 'குற்றமே தண்டனை' விமர்சன ரீதியில் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் 'ஒரு கிடாயின் கருணை மனு'வும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றது. ஆனால், இந்தப் படங்கள் வர்த்தக வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படங்களுக்கு சமூக வலைதளங்களில் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பினரிடமும் என்னிடம் உள்ள ஒரே கோரிக்கை: இதுபோன்ற படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது அனைத்துத் தரப்பும் உறுதுணையாக இருந்திருந்தால், பொதுமக்களிடம் படம் வெகுவாக போய்ச் சேர்ந்திருக்கும். விமர்சன ரீதியில் மட்டுமின்றி வர்த்தக வெற்றியையும் பெற்றால் மட்டுமே இதுபோன்ற படங்களைத் தயாரிக்க பலரும் முன்வருவார்கள். அது நடக்காத பட்சத்தில் தொடர்ந்து மசாலா சினிமாவின் பின்னால்தான் போகவேண்டிய நிலை தொடரும்.
'அறம்', 'அருவி' போன்ற படங்களுக்கு வரவேற்புக் கிடைத்தது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதேவேளையில், இவ்விரு படங்களையும் கொண்டு சேர்ப்பதற்கு நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகரோ அல்லது பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ பின்புலத்தில் தேவைப்பட்டிருக்கிறது. இது மற்ற உருப்படியான படங்களுக்கும் அமையுமா என்பது சந்தேகமே. நல்ல படைப்புகளை பொதுமக்களும் கொண்டாடும் வகையில் சினிமா ஆர்வலர்கள் தீவிரமாக செயல்பட்டால் மட்டுமே சின்ன பட்ஜெட் படங்களும் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் உருவாகும்.
என்னைப் போன்றவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. மசாலாத்தனம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மனநிறைவு தரக்கூடிய படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கும்போது, அதற்கான வாய்ப்புகள் சரியானபடி அமையவில்லை எனில், எனது இருப்பைக் காட்டவும், என்னை நகர்த்திக் கொள்ளவும் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தக் கட்டாயத்துக்குள் சிக்கிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. ஒரு நடிகராக என் நிலையாவது பரவாயில்லை. பத்து பேரிடம் கதை கேட்டு திருப்தி தரும் ஒன்றில் நடித்துவிடலாம். ஆனால், எந்தவித சமரசமும் செய்துகொள்ள விரும்பாத திறமைவாய்ந்த இளம் இயக்குநர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் கனவுப் படைப்பை திரையில் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் போராட்டங்கள் கற்பனை செய்ய முடியாதது. 'மெளனகுரு' என்ற ஹிட் படத்தைக் கொடுத்த சாந்தக்குமார் ஆண்டுகள் கடந்தும் இன்னும் அடுத்தப் படைப்பைத் தரவில்லை. தனக்கு மனநிறைவு தரும் ப்ராஜக்டில் மட்டுமே ஈடுபடுவது என்ற அவரைப் போன்றோரது மனஉறுதி வியப்புக்குரியது.
சினிமாவை மனபூர்வமாக நேசிக்கும் இதுபோன்ற நேர்மையான இயக்குநர்களால்தான் இன்று விதார்த் போன்ற நடிகர்கள் உருவாகின்றனர். இயக்குநர்கள் மணிகண்டன், சுரேஷ் சங்கய்யா, நித்திலன், ரவி முருகையா போன்றாரால் எனக்கான அடையாளமே கிடைத்தது. எனக்கான வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த இடத்தில் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை இங்கே பகிர விரும்புகிறேன். எனக்குப் பணம் மீது பெரிதாக நாட்டமில்லை. எனவே, பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றி யோசிப்பதே இல்லை.
'குற்றமே தண்டனை' படப்பிடிப்பு முடிந்த தருவாயில்தான் எனக்குத் திருமணம் ஆனது. அப்போது என்னிடம் இருந்த பணம் அனைத்தையும் வைத்துதான் அந்தப் படத்தை முடித்தேன். 'ஒரு கிடாயின் கருணை மனு'வை நானே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அதற்குரிய வசதி இல்லை. எனவே, அந்தப் படத்தில் நடிப்பிலாவது பங்களிக்க வேண்டும் என்று குறைந்த சம்பளத்தில் நடித்தேன். 'குரங்கு பொம்மை'யைப் பொறுத்தவரையில், நண்பருக்காக நடித்துத் தந்த படம். இந்த இரண்டரை வருடத்தில் எனக்குச் சொல்லிக்கொள்ளும்படி வருமானம் ஏதுமில்லை. இந்தக் காலக்கட்டத்தில், ஒரு ஹீரோ என்று நினைத்து நடிகரான என்னைத் திருமணம் செய்துகொண்டார் என் மனைவி. என்னை முழுமையாகப் புரிந்துகொண்டார். நான் எதிர்பார்த்ததை விட உறுதுணையாக இருக்கிறார். சென்னையில் எங்களுக்கு வீடு இல்லை. என் அலுவலகத்தில்தான் இரவில் தங்குவோம். சமீபத்தில் 'குரங்கு பொம்மை' மூலம் எனக்கு கிடைத்த வெற்றிக்கு அவரும் முக்கியக் காரணம். 'வீடில்லையே... அலுவலகத்திலேயே தங்கவேண்டிய நிலை இருக்கிறதே' என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை. கவலையும் வராது. நான் வளர்ந்த விதம் அப்படி. ஆனால், எனக்காக அவர் தன் இயல்பை மாற்றிக் கொண்டது எவ்வளவு பெரிய உறுதுணை?!
சரி, மீண்டும் நாம் சினிமா பற்றி பேசுவோம். 'உலக சினிமா' என்ற சொல் இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. எது உலக சினிமா? ஏதோ ஒரு நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு படைப்பு, அந்த நாட்டின் வாழ்வியலுடன் உணர்வுகளைக் கடத்தும் கதையையும் திரைக்கதையையும் கொண்டிருப்பதையே உலக சினிமா என்கிறோம். நம் வாழ்வியலையும் நம் மனிதர்களின் உணர்வுகளையும் நம் சினிமாவில் காட்டினால் அதுவே நாம் படைக்கும் உலக சினிமா. அதற்காக, நம் நெஞ்சைப் பிழிகின்ற சோகங்கள்தான் நிரம்பியிருக்க வேண்டும் என்பது இல்லை. 'ஒரு கிடாயின் கருணை மனு' போல நகைச்சுவையான கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கலாம்.
பொழுதுபோக்கு சினிமாவிலும் ரியலிஸ்டிக் அம்சம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, ரியலிஸ்டிக் படைப்பில்தான் பங்காற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
என் சக்திக்கு ஏற்ப 'குற்றமே தண்டனை'யை தயாரித்து வெளியிட முடிந்தது. ஆனால், அந்தப் படத்தை சரியாக விளம்பரப்படுத்துவதற்கு போதுமான பொருளாதாரம் இல்லை. எனவே, மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க முடியாமல் போனது. அதில் எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது. இன்றளவும் அந்தப் படத்துக்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். மிகப் பெரிய அங்கீகாரத்தை வேறு வடிவில் பெறுகிறேன். ஒருவேளை, படம் வெளியானபோது வெகுவாகப் பேசப்பட்டு வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்றிருந்தால், அதுபோல் அடுத்த படத்தை தயாரிக்கும் வசதி வாய்ப்பு கிடைத்திருக்கும். இது எனக்கு மட்டுமல்ல; சின்ன பட்ஜெட்டில் நல்ல படைப்புகளைத் தயாரிக்கும் அனைவருக்குமே பொருந்தும். இந்த நிலை மாற சினிமாவுடன் தொடர்புடைய தயாரிப்பாளர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை. 'அறம்', 'அருவி'யின் வெற்றிகள் இப்போது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. இந்தப் போக்கு தொடரவேண்டும்.
கடந்த மூன்று வருட உழைப்பால் எனக்குப் பொருளாதார அளவில் பலன் கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால், மக்களுடைய பாராட்டும் அங்கீகாரமும் நிறையவே கிடைத்திருக்கிறது. இவற்றையே நான் ஈட்டிய பலனாகப் பார்க்கிறேன்.
"விதார்த் இத்தனைப் படங்கள் நடித்துவிட்டு வீடு கூட இல்லாமல் இருக்கிறாரா?" என்று எவரேனும் கேட்கலாம். இதை ஒரு கஷ்டம் என்று நினைத்திருந்தால் எத்தனையே பெரிய பெரிய பேட்டிகளில் என் நிலையைப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், இஷ்டப்பட்டுதான் மனநிறைவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதுவே போதும். எல்லாம் தானாக அமையும்.
என் ஆயுள் முழுவதும் நடிகனாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதற்கு நடிகன் என்ற அடையாளத்துடன் இருப்பது மட்டுமே ஒரே வழி. கற்றல் என்ற ஒன்றே தொடர்ந்து என்னை இயக்கும். தொடர்ந்து அப்படியே இயங்குவேன்.
விதார்த் (41) - 'மைனா' மூலம் கவனம் ஈர்த்த நடிகர். முதன்மைக் கதாபாத்திரமோ அல்லது உறுதுணைக் கதாபாத்திரமோ எதுவாக இருந்தாலும், இவர் நடித்த படங்களைப் பட்டியலிட்டால் அதில் விதார்த் காட்டிய வித்தியாசங்கள் புலப்படும். அசல் சினிமா நோக்கிய தமிழ்த் திரைப்படத் துறையின் சமீபத்திய நகர்வுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 'குற்றமே தண்டனை', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை', 'விழித்திரு' என இவரது தெரிவுகளும், அதில் வெளிப்படுத்திய நடிப்பாற்றலும் இவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது. இந்தியில் இர்ஃபான் கான், நவாஸுதீன் சித்திக் போல் தமிழில் தேட முற்பட்டால் கண்ணில் படுபவர்களில் முக்கியமானவர் நடிகர் விதார்த்.
'அஞ்சேல்' தொடரும்...
முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 10 | நல்லதில் பங்காற்று! - நடிகர் விதார்த் [பகுதி 1]