ஆட்டோ மீட்டர் கட்டண சேவை தொடங்கிய முன்னோடி: வெற்றி, தோல்விகள் பல சந்தித்த ‘மக்கள் ஆட்டோ’ மன்சூர்!
“பசிக்கின்ற மனிதனுக்கு, ருசிக்கின்ற உணவளித்து, ரசிக்கின்ற இறைவனுக்கே புகழ் அனைத்தும்,”
என்ற வாக்கியத்துடன் தனது வாழ்க்கையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் மன்சூர் அலிகான். இன்று ஆட்டோவில் மீட்டர் போட்டு போகும் பழக்கத்தை ‘ஓலா’ போன்ற பெரு நிறுவனங்கள் கொண்டுவந்து இந்தியாவின் ஆட்டோ பயணத்தை எளிதாக்கி இருந்தாலும், அவற்றுக்கு முன்னரே தொழில்நுட்ப உதவியுடன் மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணத்தை தமிழகத்தில் தொடங்கியவர் மன்சூர். ‘நம்ம ஆட்டோ’-வில் தொடங்கி பின் மக்களின் நண்பனாய் ஆட்டோவை மாற்றியது இவரது ‘மக்கள் ஆட்டோ’ சேவை என்பதை அதில் பயணித்துள்ள எவரும் மறுக்கமாட்டார்கள்.
தனது வாழ்க்கையில் நிறைய எபிசோடுகள் உள்ளன என்ற அவர் அதை ஒவ்வொன்றாக நம்மிடம் பகிர்ந்தார்.
எபிசோடு 1:
மதுரை மாவட்டம் கோட்டாம்பட்டி கிராமத்தில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்சியில் முடிந்தேன். எனது குடும்பம் பெரியது, நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ்த்து வந்தோம். என் முன்னோர்கள் பெரிய அளவில் விவசாயம் செய்தனர், எனது தந்தையும் விவசாயம் மற்றும் சுயதொழிலையும் செய்து கொண்டு இருந்தார். அண்ணன்கள் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகின்றனர். அதனால் தான் ஏனோ எனக்கும் வணிகத்தில் மேல் அவ்வளவு ஆர்வம், என்று தொடங்கினார் மன்சூர்.
“எனக்கு பிறரிடம் வேலை செய்து சம்பளம் வாங்கும் எண்ணம் இதுவரை வந்ததில்லை. பிறருக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் எனது வைராக்கியம்.”
பள்ளியில் படித்து கொண்டு இருந்த போது, பிறர் பயன்படுத்திய கணினி மற்றும் பயன்படுத்த முடியாத கணினிகளை வாங்கி அவற்றை சரிசெய்து விற்கத் தொடங்கினார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு திருப்பூரிலுள்ள அண்ணன்கள் கம்பெனியில் வேலை செய்து வந்தார் மன்சூர்.
என்னதான் அங்கே வேலை பார்த்து வந்தாலும், எனக்கென ஒரு அடையாளமும் அங்கீகாரமும் வேண்டும் என நினைத்தேன். அதனால் அங்கிருந்து 15 நாட்களில் வெளியேறி, நான் சொந்தமாக தொழில் தொடங்க உள்ளதாக என் குடும்பத்தினரிடம் கூறினேன்.
”என்னை பார்த்து சிரித்தனர் அவர்கள் என்னை நம்பவில்லை. சுயமாக தொழில் செய்வதற்கு என்னிடம் மனவலிமை, உடல் வலிமை இல்லையென நினைத்தனர். பிறர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட, என்மேல் எனக்கு பல மடங்கு நம்பிக்கையும், தைரியமும் இருந்தது.”
தான் சேமித்து வைத்து இருந்த பணத்தையும், தன் அம்மா தொழில் செய்ய அளித்த 3000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் மன்சூல் அலி கான்.
எபிசோடு 2: கம்ப்யூட்டர் ப்ளானட் (computer planet)
”ஒரு தொழில் துவங்கும் முன் அதற்கு ஏற்ற அளவீடல் (scalability), நம்பகத்தன்மை (viability), நிலைத்தன்மை (sustainability) ஆகிய விஷயங்கள் தேவை என்று கூறும் மன்சூர், ஒரு வட்டத்திற்குள்ளே சுற்றுவதை நிறுத்தி அந்த அளவு கோட்டை உடைத்து அளவில்லா செயலை செய்ய வேண்டும்,” என்கிறார்.
இந்த மூன்று முக்கிய அம்சங்கள் எப்போதும் ஒரு தொழிலை நல்ல முறையில் எடுத்துச் செல்ல வழி செய்யும் என்று தீர்கமாக நம்புவதாக கூறினார் மன்சூர். அதன்படி, திருப்பூரில் அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, தன் பள்ளி பருவத்தில் சிறிய வகையில் செய்து கொண்டு இருந்த கணினி சரிசெய்து விற்கும் தொழிலை பெரிய முதலீட்டில் செய்யத் துவங்கியுள்ளார்.
தொழிலை பெரிய அளவில் செய்யும் போது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. 2006ஆம் அண்டில் ’கம்ப்யூட்டர் ப்ளானட்’ எனும் கணினி விற்பனை நிறுவனத்தை துவங்கினார்.
“10 அண்டுகள் முன்பு கணினி என்பது ஒரு அபூர்வமான பொருளாக இருந்தது, அதை எப்படி அனைவரிடத்திலும் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்தேன். குறைந்த விலையில் எல்.சி.டி மானிட்டருடன் விற்க முடிவு எடுத்தேன். அதற்காக வெளிநாடுகளில் இணை பாகங்களை இறங்குமதி செய்து குறைந்த விலையில் கணினிகளை விற்றேன்.”
பண்டிகை காலங்களில் சலுகைகளை அறிவித்து எல்லா தரப்பிரிடமும் கம்ப்யூட்டர் ப்ளானட் கணினியை கொண்டு போய் சேர்த்தேன். கணினியை பழுது பார்க்கும் வேலையை இணைந்து செய்து வந்தேன். அதற்கு பிறகு திருப்பூரில் வெற்றிகரமாக இவரது நிறுவனம் செயல்பட்டது.
சில கால மாற்றங்கள், என்னை மிக பெரிய அளவிலான வணிக சந்தையில் பங்குபெற செய்தது. திருப்பூர் சிறிய மாவட்டம் என்பதால், அங்கு இருந்து வெளியேறி தொழில் செய்ய நான் தேர்வு செய்த இடம் பெங்களூர்.
எபிசோடு 3: பெங்களூர், சென்னை
பெங்களூரில் இரண்டு நாட்கள் தாங்கி இருந்தேன். அங்கு என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. மொழி, உணவு, வானிலை போன்ற விஷயங்கள் எனக்கு பாதகமாக இருந்தது. அங்கு இருந்தால் என்னால் சாதிக்க முடியாது என்று தோன்றியதால் சென்னைக்கு புறப்பட்டேன். 2009 ஆம் அண்டு தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகம் அமைத்து கம்ப்யூட்டர் கர்ப்ரேசன்அஃப் இந்தியா (Computer Corporation of India) எனும் மென்பொருள் நிறுவனத்தை துவங்கினேன்.
மடிக்கணினி பாகங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அந்த பாகங்களை பொருத்தி பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு, பெருநிறுவனங்களுக்கு அளித்து வந்தேன். மேலும் மென்பொருள் உருவாக்கமும் செய்து வந்தேன்.
நல்ல வருமானம் கிட்டிய போதிலும், நான் ஏதிர்பார்த்தவை இது இல்லை என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. பிறகு நான் நிறைய தொழில்கள் தொடங்கினேன், சிலது நல்ல லாபத்தை பெற்று தந்தது, சிலது நஷ்டம் அளித்தது. இருந்தும் மனம் தளராமல் என் பாதையை நீட்டிக் கொண்டே இருந்தேன்.
நான் நினைத்து இருந்தால், நல்ல லாபம் பெற்றபோதே அதே தொழிலில் ஒரு நிலையான பாதை அமைத்து அதில் வளர்ச்சி கண்டிருக்க முடியும், அவ்வாறு செய்தால் என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன் என்று அர்த்தம். அதனால் தான் என் இலக்கை அடையும் வரை நான் சென்று கொண்டு இருக்கும் பாதையை நீட்டிக்கொண்டே போனேன்.
பிறகு நண்பர்கள் என்னிடம் ஆட்டோ வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி இல்லை,15 வருடமாக மீட்டர் இல்லாமல் தான் ஆட்டோக்கள் இயங்குவதாக கூறினர். அந்த வெற்றிடத்தை ஏன் பயன்படுத்தி ஒரு தொழில் தொடங்கக்கூடாது என்று நினைத்தேன். பிறகு நண்பர்களுடன் இணைந்து 15 ஆட்டோகளை வாங்கி ’நம்ம ஆட்டோ’ என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். முந்தைய தொழில்களில் அடைத்த லாபத்தை எல்லாம் இந்த நம்ம ஆட்டோவில் முதலீடு செய்தேன்.
காலம் கடந்து கொண்டே இருந்தது, இருந்த போதும் நம்ம ஆட்டோ வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. ஒரு நாள் அனைவரிடமும் கலந்து பேசி நம்ம ஆட்டோவை மக்களின் சேவைக்கு வெளியிட்டோம்.
நம்ம ஆட்டோ தான் முதன்முதலில் மீட்டரில் காட்டும் தொகையை மட்டும் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த முதல் சேவை. நிறுவனமும் நல்ல படியாக லாபத்தில் இயங்கியது.
ஆனால் நண்பர்களுடன் ஏற்பட்ட சின்ன மனக்கசப்பால் ’நம்ம ஆட்டோ’ பொறுப்புகளிலிருந்து வெளியேறினேன் என்றார்.
எபிசோடு : 4 - ’மக்கள் ஆட்டோ’ பிரதேசம்
அங்கு இருந்து வெளியேறிய மூன்று மாதத்தில் 2014-ம் ஆண்டில் ’மக்கள் ஆட்டோ’ நிறுவனத்தை தனிமனிதனாக நின்று தொடங்கினார் மன்சூர். இந்தியாவில் முதல் கணினி மயமாக உருவான ஆட்டோ சேவை நிறுவனம். ஆட்டோவில் டேபலட் (tablet), அவசர பொத்தான் (panic button), லைவ் வீடியோ டெலிகஷ்டிங் (live video telecasting) முதலிய வசதிகளுடன் மக்கள் ஆட்டோவை ஆரம்பித்தார்.
முதற்கட்டமாக 100 வண்டிகளுடன் மக்கள் ஆட்டோ தொடங்கியது. கணினி மயம், மீட்டர் கட்டணம் போன்றவற்றால் மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது.
இந்தியாவில் 50 லட்சம் ஆட்டோக்கள் ஒடுகின்றன, தமிழ்நாடில் 3 லட்சம் ஆட்டோக்கள், சென்னையில் 75ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆட்டோக்கள் ஒடுகின்றன. இந்தியாவில் இரண்டாவது பெரு போக்குவரத்து ஆட்டோக்கள் தான். வருடத்திற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் துறை.
மக்கள் ஆட்டோவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவிகள் கிடைத்தன. அதன் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் ஆட்டோவை கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவு எடுத்தேன்.
அதற்காக ’எம்ஆட்டோ’ (M Auto) எனும் திட்டத்தை உருவாக்கினார். அதில் ’உமன் ப்ரைடு ரைடு’ (women pride ride) எனும் விதியின் கீழ் எம்ஆட்டோ செயல்படும். அதாவது எம்ஆட்டோ பெண்களுக்காக மட்டும் செயல்படும். மாணவிகள், ஆசிரியை, பெண் காவலர், வேலைக்கு செல்லும் பெண்கள் என பெண்களின் நலனுக்காக மட்டுமே எம்ஆட்டோ உருவாக்கப்பட்டது.
பெண்கள் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் முன்னேற்றத்தில் என் சிறிய பங்கு என கருதி இந்த திட்டத்தைக் கொண்டு வந்து உள்ளேன். மேலும் அவர்கள் மூன்று கட்ட பாதுகாப்புடன் பயணம் செய்யலாம். கணவனால் கைவிடப்பட்ட ஆதரவுற்ற பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஒட்டுனர் உரிமம் எடுத்துக் கொடுத்து பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
“எம் ஆட்டோ சேவையை பெற காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 6510365103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ’எம் ஆட்டோ’ செயலி மூலமாகவும் சேவையைப் பெறலாம். இதன்மூலம் பெண் ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை சம்பாதிக்க முடியும், விரைவில், இந்த சேவை நாடு முழுவதும் அறிமுகம் செய்வதே எனது கனவு,”
என்று தனது பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார் மன்சூர் அலிகான்.
மேலும் இவரின் எபிசோட்கள் தொடர வாழ்த்துக்கள்...