2,500 நாய்கள், 10 ஏக்கரில் காப்பகம் - தெருநாய்களை காக்க கரம்கோர்த்த நண்பர்கள்!
பால்ய வயதில் நாய்க்குட்டி ஒன்றை மக்கள் அடித்தே கொன்றதை கண்டதிலிருந்து தெருநாய்களின் நலனுக்காக அவ்வப்போது இயன்றதை செய்த ஹரிஷ், இன்று தெருநாய்களுக்கென ஒரு காப்பகத்தையே உருவாக்கியுள்ளார்.
பால்ய வயதில் நாய்க்குட்டி ஒன்றை மக்கள் அடித்தே கொன்றதை கண்டதிலிருந்து தெருநாய்களின் நலனுக்காக அவ்வப்போது இயன்றதை செய்த ஹரிஷ், இன்று தெருநாய்களுக்கென ஒரு காப்பகத்தையே உருவாக்கியுள்ளார்.
தொழில்ரீதியாக சைபர் செக்யூரிட்டி நிபுணரான ஹரிஷ் அலியின் இதயம் எப்போதும் விலங்குகள் மீதான அன்பால் நிறைந்திருந்தது. பால்ய வயதிலிருந்தே வீட்டருகே இருக்கும் நாய்க்குட்டிகளுக்கு உணவளித்து கவனித்து கொள்வதில் ஹரிஷிற்கு ஒரு ஆனந்தம். துரதிர்ஷடவசமாக, ஒரு நாள் நாய்க்குட்டி ஒன்றை ஊரார் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டதை நேரில் கண்டார். அந்த சம்பவம், ஹரிஷின் மனதில் நீங்கா வடுவாக மாறியது. அதுவே, இன்று விலங்குகளின் நலனுக்காக பாதையில் பயணிக்கசெய்துள்ளது.
படிப்பு, வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் பயணத்தில் நாய்களின் நலவாழ்வுக்கான அவரது பங்களிப்பும் இருந்து கொண்டே வந்தது. இந்நிலையிலே, சக பெங்களூருவாசியான அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு விலங்குகளையும் காப்பாற்றும் மதுஸ்மிதா சாஹுவை சந்தித்தார்.
இருவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கினர். இருப்பினும், பொதுமக்களின் அக்கறையின்மை மற்றும் நிதி பற்றாக்குறையையும் எதிர்கொண்டனர். இந்த பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்தனர். அதன் விளைவாக, 2017ம் ஆண்டு, தெரு விலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான “சர்வோஹம் விலங்கு அறக்கட்டளை”யைத் தொடங்கினார்.

நாய்களுக்கான மருத்துவம் முதல் மறுவாழ்வு வரை...
"எங்களிடம் ஒரு வாடகை அறை, ஒரு பராமரிப்பாளர் மற்றும் 20 நாய்கள் இருந்தன," என்று சோஷியல் ஸ்டோரி உடனான உரையாடலில் நினைவு கூர்ந்தார் ஹரிஷ்.
அடுத்த ஆண்டே, அவர்கள் ஒரு கால்நடை மருத்துவரை நியமித்து, அவர்களது முதல் ஆம்புலன்ஸ் வாங்கி, பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட விலங்குகளைக் காப்பாற்றினர். தற்போது சர்வோஹமில் 2,500 நாய்கள் வளர்கின்றன அவற்றில் 200 நாய்கள் நிரந்தரமாக அங்கேயே வளர்பவை.
இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் சிறிய, பெரிய என அனைத்து உயிரினங்களின் விலங்கு சரணாலயத்தின் தரவுகளின் படி, 2010 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4.9 லட்சத்திற்கும் அதிகமான விலங்குகள் கொடுமைக்கு உள்ளாகியுள்ளன. மேலும், செல்லப்பிராணி வீட்டு வசதி திட்டத்தின் படி, நாட்டில் 60 மில்லியன் தெரு நாய்கள் மற்றும் 5 மில்லியன் தெருக் கால்நடைகள், கடுமையான பசி மற்றும் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
விலங்குகளின் மறுவாழ்வு மற்றும் அவற்றின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு சர்வோஹமின் குழுவினர் பன்முக அணுகுமுறையைப் கையாள்கிறது. தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் கருத்தடை செய்யப்படுகின்றனர். தவிர, அவசரகால மற்றும் நீண்ட கால மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சிகிச்சையில் உள்ள நாய்களுக்கு உடல் சிகிச்சை, சமூகமயமாக்கல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவற்றை மறுவாழ்வு செய்வதற்காக வழக்கமான தத்தெடுப்பு இயக்கங்கள் நடத்துகின்றனர். நோய்வாய்ப்பட்ட நாய்கள் மற்றும் நிரந்தர உடல் பாதிப்பிலிருந்து மீண்ட உயிரினங்களுக்கு சர்வோஹமில் அதன் வாழ்நாள் முழுவதும் தங்குமிடமும், பராமரிப்பும் வழங்கப்படுகிறது.
கேனல் எனப்படும் நாய்களுக்கான தங்குமிடம், மேம்பட்ட நோயறிதல் கருவிகள், அறுவைச்சிகிச்சை உபகரணங்கள் ஆகிய வசதிகளை தவிர்த்து, கொடிய தொற்று நோய்களான கேனைன் டிஸ்டெம்பர் மற்றும் பர்வோவைரஸ் போன்ற ஆபத்தான நோய்களைக் கொண்ட நாய்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை கொண்ட நாட்டின் ஒரு சில விலங்கு காப்பகங்களில் சர்வோஹமும் ஒன்று.
உணவு தொடங்கி உறைவிடம் வரை... உயிரினங்களுக்கு கிடைக்கும் ஆதரவு
விலங்கு ஆர்வலர்களின் நன்கொடைகள், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதிகள் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை, ஃபோர்டிவ் இந்தியா மற்றும் FIAPO ஆகிய நிறுவனங்கள் அளித்த நீண்டகால நிதி ஆதரவால், ஹரிஷ் மற்றும் கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மீட்பவர்கள் உட்பட 12 பேர் கொண்ட அவரது குழுவினர், தொற்றுகாலத்தில் 1,000 விலங்குகளை காப்பாற்றவும் நாளொன்றுக்கு 600 நாய்களுக்கு உணவளிக்கவும் உதவியாக இருந்தது.
தொற்றுக்காலம் சர்வோஹமிற்கு பெரும் பாதிப்பை விட்டு சென்றது. ஏனெனில், தொற்றுகாலம் என்பதால் ஹரிஷின் வணிக வருவாய் நிறுத்தப்பட்டது. முழுவதுமாக நன்கொடைகளை நம்பியிருக்கச் செய்தது. அடுத்த கட்டமாக பெங்களூருவின் ஜேபி நகரில் உள்ள ஜம்புசவரி தின்னேவில் இருந்த அவர்களின் தங்குமிடத்தை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதற்கான முடிவை எடுக்க விரும்பிய ஹரிஷ் நிரந்த காப்பகத்தை உருவாக்கும் முனைப்பில் 6 மாதங்களுக்கு முன்பு க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டத் தொடங்கினார்.
பெங்களூரு, பன்னர்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்து ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக நிதிதிரட்டல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
"ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதால் ஏற்படும் மன அழுத்தமும், மீண்டும் மீண்டும் ஒரு புதிய இடத்தில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்ற பதட்டமும், மீட்கப்பட்ட விலங்குகளை மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் விட்டுவிடக்கூடும் மற்றும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், சொந்த நிலத்தை வாங்கும் முடிவுக்கு வந்தோம்," என்றார் ஹரிஷ் அலி.
2019ம் ஆண்டு சர்வோஹமானது தத்தெடுப்பு, கருத்தடை, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போன்ற சமூகத் திட்டங்களைத் தொடங்கியது. சர்வோஹம் இதுவரை 800 க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. 2,200க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
மனித-விலங்கு மோதலைத் தடுக்க இது மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக இது அறமையும் என்கின்றனர். தற்போது, கிடைக்கும் நன்கொடைகள் மூலம், அவர்கள் கட்டும் புதிய மையத்தில் ஒரு முக்கியமான நோயாளி வார்டு, பல நாய்களுக்கான உறைவிடம், ஊனமுற்ற நாய்களுக்கான சரணாலயம் மற்றும் பிசியோதெரபி குளம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளை அமைக்க அமைப்பு திட்டமிட்டுள்ளது.
"நாங்கள் செய்த காரியங்களில் ஒன்று, விலங்குகளுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைப் பார்வையாளர்களுக்குக் கற்பிப்பதும், தெருக்களில் விலங்குகள் போராடுவதைப் பற்றி அவர்களுக்கு உணர்த்துவதும் ஆகும். கர்நாடக அரசுடன் இணைந்து, விலங்குகளுக்கு சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், கோடை காலங்களில் தண்ணீர் கிண்ணங்கள் மூலம் அவற்றை பராமரிப்பதற்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.
உதவி தேவைப்படும் எந்த விலங்குக்கும் 'இல்லை' என்று சொல்லாத நிலையை நாங்கள் அடைய விரும்புகிறோம்" என்றார் அவர்.
