Coding போட்டியில் வென்ற 15 வயது மாணவன்: ரூ.33 லட்ச சம்பளத்தில் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!
ஆன்லைன் கோடிங் போட்டியில் வெற்றி பெற்ற வேதாந்த் தியோகேட் என்ற சிறுவனுக்கு ஆண்டுக்கு 33 லட்சம் சம்பளத்துடன் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு வெறும் 15 வயது மட்டுமே ஆவதால், நிறுவனம் வேலை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
ஆன்லைன் கோடிங் போட்டியில் வெற்றி பெற்ற வேதாந்த் தியோகேட் என்ற சிறுவனுக்கு ஆண்டுக்கு 33 லட்சம் சம்பளத்துடன் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. ஆனால், அவருக்கு வெறும் 15 வயது மட்டுமே ஆவதால், நிறுவனம் வேலை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த வாய்ப்பு:
வேதாந்த் தியோகேட் ஒருநாள் தனது அம்மாவின் பழைய லேப்டாப்பில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை செக் செய்து கொண்டிருந்த போது, அவரது கண்ணில் கோடிங் தொடர்பான போட்டி ஒன்றைக் கண்டார். இந்த போட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்.
வேதாந்த், animeeditor.com என்ற இணையதளத்தை உருவாக்கினார். இது வலைப்பதிவுகள், சாட்பாக்ஸ் மற்றும் வீடியோ பார்க்கும் தளத்தின் கூடுதல் அம்சங்களுடன் YouTube இலிருந்து வீடியோக்களை பதிவேற்றவும் பயனர்களை அனுமதிக்கும் வகையில் டிசைன் செய்தார்.
வெறும் இரண்டே நாட்களில் இதற்காக 2000க்கும் மேற்பட்ட கோடிங்குகளை வேதாந்த் எழுதி, கோடிங் போட்டியில் வெற்றி கண்டார்.
வேதாந்தின் திறமையை பார்த்து மிரண்டு போன, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.33 லட்சம் சம்பளத்துடன் பணி வழங்க முன்வந்தது. வேதாந்த் மனிதவள மேம்பாட்டுக் குழுவில் சேரவும், பணியை ஒதுக்கவும், குறியீட்டாளர்களை நிர்வகிக்கவும் நிறுவனம் விரும்பியது.
பலருக்கும் கனவு வேலையான இது, கிடைத்த வேகத்திலேயே வேதாந்த் கையை விட்டு நழுவியுள்ளது. ஏனெனில் வேதாந்திற்கு தற்போது 15 வயது மட்டுமே ஆகிறது. இதுகுறித்து அறிந்த நிறுவனம் சிறுவர்களை பணியமர்த்த முடியாது என்ற காரணத்தால், அந்த வேலை வாய்ப்பை திரும்பப் பெற்றுள்ளது.
ஆனால், வேதாந்த் போன்ற திறமையாளரை இழக்க விரும்பாத அந்நிறுவனம், அதிரடி ஆஃபர் ஒன்றையும் அவருக்குக் கொடுத்துள்ளது. அதாவது, நல்ல வாய்ப்பு கைநழுவி விட்டதாக எண்ணி ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள நிறுவனம், அவர் தனது கல்வியை முடித்த பிறகு, தங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் பேர் சமர்ப்பித்த கோடிங்கில் இருந்து வேதாந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த வேதாந்த்?
நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வேதாந்த் தியோகேட். இவரது தந்தை ராஜேஷ் மற்றும் தாய் அஷ்வினி, நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
பெற்றோர்கள் இருவரும் பெரும்பாலும் மகனின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அஸ்வினியின் லேப்டாப்பை லாக்கரிலும், மொபைல் போனையும் காரில் வைத்திருப்பார்களாம்.
செல்போன், லேப்டாப் இல்லாமல் ஆன்லைன் குறியீட்டு போட்டியில் அசத்தியது எப்படி என வேதாந்த் கூறுகையில்,
“ஆன்லைன் வகுப்புகள் குறித்து இணையத்தில் ஆர்வத்துடன் தேடுவேன். கொரோனா லாக்டவுனின் போது என் அம்மாவின் லேப்டாப்பில் Python போன்ற மென்பொருள் மேம்பாடு, குறியீட்டு முறை மற்றும் நுட்பங்கள் உள்ளிட்ட இரண்டு டஜனுக்கும் அதிகமான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளேன்,” என்கிறார்.
தற்போது மகனுக்கு ஒரு புதிய லேப்டாப் வாங்கித் தர திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேதாந்தின் தந்தை ராஜேஷ் கூறுகையில்,
"எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. எனது மகனின் பள்ளியிலிருந்து அழைத்து தான் இந்த வேலை வாய்ப்பைப் பற்றி சொன்னார்கள். அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வேலைக்கான ஆஃபர் குறித்த மின்னஞ்சல் வந்ததும் வேதாந்த் குழப்பமடைந்துள்ளார். இதுபற்றி தனது ஆசிரியருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அந்த மெயில் உண்மை என்பதை அறிந்த போது அவரது ஆசிரியர்கள் திகைத்து போயினர். உடனடியாக நிறுவனத்துக்கு பதில் மெயில் அனுப்ப உதவிய ஆசிரியர்கள், எனது மகனுக்கு 15 வயது தான் ஆகிறது என்பதையும், அவர் படித்துக்கொண்டு இருப்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளனர்,” என்கிறார்.
ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வத்தோடாவில் உள்ள நாராயண இ-டெக்னோவில் உள்ள தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியிலும் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ரேடார் அமைப்பு மாதிரியை வடிவமைத்ததற்காக பரிசு வென்றுள்ளார்.
வேதாந்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பேராசிரியரான அஸ்வினி கூறுகையில்,
“வேதாந்த் எப்போதும் லேப்டாப்பில் எதையாவது செய்து கொண்டிருப்பது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கவனமாக இருந்தோம். அவர் போட்டிக்குத் தயாராகி வந்தது எங்களுக்கு தெரியாது. பள்ளியில் இருந்து போன் செய்து எங்களை பாராட்டிய போது தான் உண்மையை அறிந்து கொண்டோம்,” என்கிறார்.
அம்மாவின் பழைய லேப்டாப்பை பயன்படுத்தி ஒரு இணையதளத்தையே வேதாந்த் உருவாக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொகுப்பு - கனிமொழி