'உலகத்தரத்தில் கல்வி' - தமிழக அரசுடன் கைகோர்த்த சிவ்நாடார் அறக்கட்டளை!
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக பணியில் ஹெச்சிஎல் அறக்கட்டளை:
HCL Tech இன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புப் பிரிவான HCL அறக்கட்டளை, அதன் முதன்மையான ஊரக வளர்ச்சித் திட்டமான HCL Samuday-யை கடந்த ஆண்டு 95 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவதற்காக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் இருந்து 95 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 1,40,000 பயனாளிகளைச் சென்றடையும் மற்றும் நீர் மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த வருமானம் ஈட்ட உதவும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் சிவ்நாடார் அறக்கட்டளை தற்போது பள்ளிக்கல்வித்துறையுடன் கரம் கோர்த்துள்ளது.
உலகத்தரத்தில் கல்வி:
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உலகத் தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட பள்ளிக்கல்வித் துறைக்கும், சிவ் நாடார்அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளையால் நிறுவப்படவுள்ள உண்டு உறைவிட பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெற உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பயின்று சிறந்த கல்வி சூழலையும், கல்வி கற்கும் திறன் மேம்படுவதற்கான பயிற்சியினையும் பெறுவர். மாணவிகள் 50% வாய்ப்பு பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மாணவர்கள் தகுதியான உயர்கல்வியை தொடர்ந்து பயின்று வருங்காலங்களில் அறிவுத்திறன்மிக்க இளைஞர்களாக வளர்வதற்கு இவ்வொப்பந்தம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
ஊரகப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர், ஜெ.குமரகுருபரன்; சிவநாடார் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக சுந்தர், பேனர்ஜி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.