அன்று தொழிலாளி; இன்று லட்சாதிபதி: பயத்தால் போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞர்!
புலம்பெயர்ந்த பெங்காலி தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்!
மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவை பூர்வீகமாகக் கொண்டவர், இமாம் ஹுசைன். கடந்த வாரம் இவரின் வாழ்க்கையில் முக்கியமான தருணம். மேற்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், அந்த மாநிலத்துடன் மிக நெருக்கம் கொண்ட கேரளாவுக்கு புலம்பெயர்ந்தார். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக கேரளாவுக்கு சென்றவர் கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு பகுதியில் எடத்தநாட்டுக்கரை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தினக்கூலியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இமாம் ஹுசைனுக்கு ஒரு வழக்கம் இருந்துள்ளது. அது அவர் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை கேரள அரசு விற்கும் லாட்டரி வாங்குவது. அப்படி தான் கடந்த வாரம் ஐந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார் இமாம். அவர் எதிர்பார்த்தது போலவே லாட்டரியில் லக் அடித்துள்ளது. ரூ.70 லட்ச ரூபாய் லாட்டரி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், லாட்டரி தனக்கு அடித்ததை தெரிந்ததும், அதை யாரிடமும் சொல்லாமல் அமைதி காத்துள்ளார். தான் வேலைபார்க்கும் இடத்தை விட்டு வெளியேறாதவர், பிறகு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை அழைத்து விஷயத்தை சொல்லி உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, நாட்டுக்கல் ஸ்டேஷன் காவல்துறையினர் எடத்தநாட்டுக்கரை சென்று இமாமை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளனர். அன்று இரவு முழுவதும் இமாம் போலீஸ் ஸ்டேஷனிலியே தங்கியுள்ளார்.
பின்னர், போலீஸ் உதவியோடு கூட்டுறவு வங்கிக்குச் சென்று லாட்டரி சீட்டை ஒப்படைத்து பரிசுத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள்,
"இமாமை அழைத்துவந்த பிறகு உடனடியாக கூட்டுறவு வங்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், வங்கி அதிகாரிகள் சனிக்கிழமை டிக்கெட் எடுப்பதாகத் தெரிவித்தனர். இமாம் தனது டிக்கெட்டை வெளியே எடுக்க பயந்ததால், அவர் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்கினார்."
ஆவணங்கள் அவசியமானதால், இமாம் ஹுசைன் அவரது சொந்த இடத்தில் உள்ள அவரது ஆதார் மற்றும் பான் கார்டுகளை எங்களிடம் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
அடையாள ஆவணங்கள் பெறப்பட்டு செயலாக்கப்பட்டதும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்தத் தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், என்று பேசியுள்ளனர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வாழ்வாதாரம் தேடி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளி இமாம் ஹுசைன் இப்போது லட்சாதிபதியாக சொந்த ஊர் திரும்ப உள்ளார்.
தொகுப்பு: மலையரசு