'இது என் அம்மாவின் ஆசை' - 5 தங்கப் பதக்கங்கள் வென்று டிஎஸ்பி ஆன ‘ஹிமா தாஸ்' கதை!
21 வயதில் காவல்துறையின் உயரிய பதவி!
தடகள வீராங்கனையான ஹிமா தாஸ் அசாமில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் நாகான் நகரில் பிறந்த ஹிமா தாஸ், சிறுவயதில் மண் தரையில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி வந்தார். அவரது கனவு இந்திய கால்பந்து அணியில் இடம் பெற வேண்டும் என்றே இருந்தது.
ஆனால், அவரது பாதை கால்பந்து மைதானத்தில் இருந்து, தடகள ஓடுபாதைக்கு தடம் மாறியது. 2018ஆம் ஆண்டு, ஃபின்லாந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீட்டர் மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 51 புள்ளி 46 வினாடிகளில் இலக்கை கடந்து, தங்கத்தை வென்றார். கடைசி 80 மீட்டர் தொலைவில் முன்னணியிலிருந்த 3 வீராங்கனைகளை முந்திச் சென்று, முதலிடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார், ஹிமா தாஸ்.
உலக அளவிலான போட்டியில், 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் மட்டும், சர்வதேச தடகளப் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார் ஹிமா தாஸ். இந்நிலையில், ஹிமா தாஸை, டிஎஸ்பியாக நியமனம் செய்து அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உத்தரவிட்டுள்ளார்.
பணி நியமனம் பெற்ற மேடையில் பேசிய ஹிமா தாஸ்,
“காவல்துறை அதிகாரியாக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவும், தனது அம்மாவின் ஆசையும் நிறைவேறிவிட்டதாக,” மகிழ்ச்சி ததும்ப தெரிவித்தார்.
21 வயதாகும் ஹிமா தாஸ், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக, தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டிஎஸ்பியாக பதவியேற்ற பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய ஹிமாதாஸ்,
“சிறுவயதிலிருந்தே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது தான் எனது கனவு. இங்கு உள்ள அனைவருக்குமே தெரியும், நான் வேறு எதுவும் புதிதாக சொல்லப் போவதில்லை. எனது ஆரம்பப் பள்ளி நாட்களிலிருந்து, ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்தேன்.”
நான் மட்டுமல்ல, என் அம்மாவும் அதை விரும்பினார். துர்கா பூஜையின் போது அவர் ஒரு துப்பாக்கியை (பொம்மை) வாங்குவார். என் அம்மா என்னிடம் அசாம் போலீஸில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்றும், மக்களுக்கு சேவை செய்யும் சிறந்த அதிகாரியாக வேண்டும் என அடிக்கடி சொல்லுவார்.
”விளையாட்டால் தான் எனக்கு எல்லாம் கிடைத்தது. மாநிலத்தில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக நான் பணியாற்ற முயற்சிப்பேன். அசாம், ஹரியானாவைப் போல நாட்டின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாற்ற முயற்சிப்பேன். நான் அசாம் காவல்துறையில் விடாமுயற்சியுடன் பணியாற்றுவேன். ஸ்போர்ட்ஸ் ஒருபோதும் நம்மை பின்னோக்கி இழுத்துச்செல்லாது," என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக அசாம் மாநில முதலமைச்சர் சோனோவால்,
“அசாமுக்கு இது ஒரு பெருமைமிக்க நாள். தடகள வீரராங்கனை ஹிமா தாஸை டிஎஸ்பியாக நியமித்ததில் மகிழ்ச்சி. விளையாட்டுத்துறையில் அவர் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் இது. அவரது இந்த பதவி, இளைஞர்களை விளையாட்டில் சிறந்து விளங்க மேலும் ஊக்குவிக்கும்," என்று ட்வீட் செய்துள்ளார்.
தகவல் உதவி: ndtv | தமிழில்: மலையரசு