ரயில்வே தண்டவாளப் பராமரிப்பாளர் பணியில் சேர்ந்த மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி!
ஐஐடி-யில் படித்தவர்களுக்கு கோடிகளில் ஊதியம் கிடைக்கும் பணி கிடைத்தும் இவர் ஏன் ரயில்வே துறையில் கடைநிலை ஊழியர் பணியை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என ஓர் தரப்பினர் கூக்குரலிட்டு வருகின்றனர். ஆனால், அரசாங்கமோ இளைஞர்களை சுயதொழில் செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அழைப்பு விடுத்து, அதற்காக பல்வேறு சிறப்பு கடனுதவித் திட்டங்களையும், பயிற்சிகளையும் அளி்த்து வருகிறது.
இன்றைய இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ற வேலைக்கு மட்டுமே செல்லவேண்டும் என எண்ணாமல், கிடைக்கும் எந்த வேலையையும் முழு மனதோடு செய்து, வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர்தான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரவன் குமார்.
மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக்., மற்றும் எம்.டெக்., முடித்துள்ள இவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அரசுப் பணிக்காக முயற்சித்து வந்தார். பொதுவாக ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.மில் படித்து முடித்துவிட்டு வெளியே வருபவர்களுக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கில் ஊதியத்தை அள்ளித் தர பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவார்கள்.
மேலும், இந்நிறுவனங்கள் இறுதியாண்டு பயிலும் மாணவர்களையே கேம்பஸ் இன்டர்வியூ எனும் வளாக நேர்காணல் மூலம் தேர்வு செய்துவிடுவார்கள். இவர்களுக்கு லட்சங்களிலும், கோடிகளிலும்தான் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 1.14 கோடி ஊதியத்தில் ஐ.ஐ.டி. மாணவர்களை வளாக நேர்காணலில் மைக்ரோ சாப்ட் தேர்வு செய்தது என்பன போன்ற செய்திகளைத்தான் நாம் நாளிதழ்களில் செய்தியாக படித்திருப்போம். அந்தளவுக்கு நாட்டிலேயே தரமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் இவை.
ஆனால் இத்தகைய நிறுவனத்தில் கல்வி பயின்ற ஓருவர், இதுபோன்ற பணிவாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு, அரசுப் பணிக்கு முயற்சிப்பது ஆச்சரியமானதுதானே. அதிலும், அத்தகைய உயர்கல்வித் தகுதியுடையவர், வெறும் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி உடைய கடைநிலைப் பணியாளராகப் பணிபுரிவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தானே.
மும்பை ஐ.ஐ.டி.யில் முதுகலை கல்வியை முடித்த ஷ்ரவன்குமார், சமீபத்தில் ரயில்வே துறை பணிக்கான ஆர்.ஆர்.பி. தேர்வெழுதி, அதில் வெற்றி பெற்று, ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் மட்டுமே ஊதியம் வரும் டிராக்மேன் பணியில் கடந்த ஜுலை 30ஆம் தேதி சேர்ந்திருக்கிறார்.
இவரோடு கல்வி பயின்ற நண்பர்கள் தங்கள் துறை சார்ந்த வேலைக்கு முயற்சிக்கும்போது, இவர் மட்டும் அரசுப் பணியொன்றையே குறிக்கோளாக கொண்டு முயற்சித்து வந்துள்ளார். தற்போது, ஜார்கண்ட் மாநிலத்தில், தன்பாத் பகுதியில் டிராக்மேன் எனப்படும், தண்டவாளப் பராமரிப்பாளராக ஷ்ரவன் குமார் பணிபுரிந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
"என்னதான் லட்சங்களில் ஊதியம் கிடைத்தாலும், தனியார் துறையில் பணிப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அரசுப் பணியில் ஊதியம் குறைவாக இருந்தாலும், பணிப் பாதுகாப்பு உள்ளது," என்கிறார்.
மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் உலகிலேயே எட்டாவது பெரிய நிறுவனமான இந்திய ரயில்வேயில் ஊழியராகப் பணிபுரிவதை நான் பெருமையாகவே எண்ணுகிறேன் என்கிறார்.
மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர், 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடையவருக்கான ரயில்வேயில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிவதை, தன்பாத் ரயில்வே டிவிஷன் உயரதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
ஆனால் ஷ்ரவன்குமார் கூறுகிறார்,
“வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது என் வாழ்க்கையில் கிடைத்த முதல் வெற்றி. மத்திய அரசுப் பணி. எந்த பணியாக இருந்தாலும் முழு மனதோடு பணிபுரியவேண்டும். நான் அவ்வாறுதான் பணிபுரிகிறேன். மேலும், ரயில்வேயிலேயே எனது கல்வித் தகுதிக்கேற்ற வேலைக்கு, பதவி உயர்வு மூலமோ அல்லது வேறு தேர்வுகள் மூலமோ முயற்சிப்பேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
ஆனால் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தையே இது அப்பட்டமாக காட்டுவதாகவும், நாட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்ற ஓருவர் கடைநிலை ஊழியராகப் பணிபுரிவது தவறானது என்றும் பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்களே வேலையில்லை, வேலையில்லை என கூக்குரலிடாமல், கல்வித் தகுதிக்கேற்ற வேலைக்காக காத்திருக்காமல், கிடைக்கும் வேலையை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டு, திறம்பட பணிபுரிந்து, அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளை எதிர்பார்த்து, நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்ற செய்தியை இவரின் கதை நமக்குச் சொல்வதாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.