இந்திய ஏரிகளை புதுப்பிக்கும் நோக்கில் செயல்படும் முன்னாள் கூகுள் ஊழியர்!
சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 39 ஏரிகளையும் 48 குளங்களையும் புதுப்பித்துள்ளார்.
தமிழகத்திலும் அதன் தலைநகர் சென்னையிலும் கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தி வரும் நிலைக்கு இந்த பிரச்சனையின் இருப்பதைப் பார்க்கமுடிகிறது.
இதற்கு, தொடர்ந்து வறட்சி நிலவுவதும் பருவமழை தாமதமாவதும் முக்கியக் காரணமாக இருக்கும் நிலையில் மாநிலத்தில் உள்ள ஏரிகளும் குளங்களும் அழிந்து வருவதும் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாகும். தற்போது இந்த பிரச்சனையின் தீவிரம் தமிழகத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் இத்தகைய நிலை ஏற்படுவம் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
இந்தியா முழுவதும் இந்தச் சூழலை மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறார் தனிநபர் ஒருவர். இவரது பெயர் அருண் கிருஷ்ணமூர்த்தி. இவர் 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற நிறுவனத்தை நிறுவினார். அப்போதிருந்து இந்தியா முழுவதும் உள்ள 39 ஏரிகளையும் 48 குளங்களையும் புதுப்பித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இவர் முன்னாள் கூகுள் ஊழியர் ஆவார். 32 வயதான இந்த ஆர்வலர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புப் பிரிவில் மிகவும் பிரபலமானவர்.
இந்த நிறுவனம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, குஜராத் போன்ற பகுதிகளில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
சுத்தப்படுத்தும் பணியில் ஏரிகளில் இருந்து கழிவுகளும் முட்புதர்கள், ஆகாயத்தாமரை உள்ளிட்ட வேகமாக பரவக்கூடிய தாவர வகைகளும் அகற்றப்படுகிறது. அறிவியல் ரீதியான அணுகுமுறை குறித்து அவர் ’தி இந்து’ உடனான உரையாடலில் விவரிக்கும்போது,
“வெள்ளம் வரும் சமயத்தில் வருங்காலத்திற்காக பாதுகாக்கப்படுவதும் நிலத்தடி நீர் மட்டத்தை சீர்படுத்துவதும் அவசியம். இவை உறுதிசெய்யப்பட நீர்நிலைகளை அறிவியல் ரீதியாக புதுப்பிப்பது அவசியம். நீர்பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் கழிவுநீர் வரத்து வால்வு இணைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்கிறார்.
புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட பொதுமக்களின் ஆதரவைச் சார்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் அருண். இவர் தனது முயற்சி குறித்து Edex Live உடனான உரையாடலில் கூறும்போது,
“ஒவ்வொரு திட்டத்திலும் பலர் பங்களித்துள்ளனர். அரசாங்கம், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்கள், அருகாமையில் உள்ள நிறுவனங்கள் என பலர் இதில் அடங்குவர். எனவே அனைவரது பங்களிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏரிகளை புதுப்பிக்கவேண்டும் என்கிற பொதுவான நோக்கத்திற்காகவே அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இவர்களது துணையின்றி இந்தப் பணி சாத்தியமாவது கடினம்,” என்றார்.
அருண் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநில அரசாங்கங்கள் அடங்கிய கூட்டமைப்புடன் இணைந்து பணிபுரிகிறார். அரசாங்கத்தின் ஆதரவு குறித்து அவர் கூறுகையில்,
“இந்தியா என்பது ஒன்றுதான். அரசாங்கங்களுக்கிடையே வேறுபாடு இல்லை. அனைத்திலும் சிறப்பான அதிகாரிகள் உள்ளனர். நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில் பொது விவகாரங்களில் மக்கள் தீவிரமாக பங்களிக்கலாம். இதுதான் எங்களது நிறுவனத்திற்கு உற்சாகமளிக்கிறது. நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் முயற்சியில் நாம் நேரடியாகக் கலந்துகொள்ளலாம். உலகின் மற்ற பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் மட்டுமே மேற்கொள்ளமுடியும்,” என்று அவர் தெரிவித்ததாக Edex Live குறிப்பிடுகிறது.
இவர் களப்பணிகளில் ஈடுபடுவதுடன் மக்களும் இணைந்துகொள்ள ஊக்குவிக்கிறார். அத்துடன் இந்தியா முழுவதும் உள்ள நீர்நிலைகள் குறித்து யூட்யூப் தொடரையும் உருவாக்கியுள்ளார். Hydrostan என்றழைக்கப்படும் இந்த தொடர் இந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி வெளியானது. இந்த தொடர் உருவாக்கியதற்கான காரணத்தை அவர் விவரிக்கையில்,
“நான் பல ஏரிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் வளர்ந்துள்ளேன். அவற்றை நல்ல நிலையில் பார்த்துள்ளேன். அவை சுரண்டப்படுவதைப் பார்க்கும்போது கவலையளிக்கிறது. என்னால் இயன்றதை செய்ய விரும்பினேன். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளது,” என ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
”Hydrostan நேர்மறையான உந்துதலளிக்கக்கூடிய கதைகளில் கவனம் செலுத்துகிறது,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA